ஏமாறுகிறவர்களும், ஏமாற்றுபவர்களும்…


“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது-
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது..”
பட்டுக்கோட்டையாரின் இந்த வரிகள் இங்கு மாற்றப்பட்டாக வேண்டும்…

ஏனெனில், இங்கு சட்டம் போட்டு தடுக்க வேண்டிய கூட்டமும் திருடனோடு சேர்ந்து கொண்டு விடுகிறது….!

இதை வேறு மாதிரி சொல்ல வேண்டுமானால் –
“ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான்
செய்வார்கள் ” – என்று தான் சொல்ல வேண்டும்.

பாமர மக்கள் செய்தால், அறியாமை காரணம் என்று சொல்லலாம்.
படித்தவர்கள், பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள், பெரிய பெரிய
வியாபாரிகள், பெருஞ்செல்வந்தர்கள், நீதிபதிகள், கவர்னர்கள், அமைச்சர்கள் என்று – பலவகைப்பட்டவரும் தவறினால் –

தவறு செய்பவர்களுக்கு, அறிந்தோ- அறியாமலோ,
தெரிந்தோ-தெரியாமலோ – துணை போனால், அதை என்னவென்று
சொல்ல முடியும்…?

ஏமாற்றுபவர்களின் சாமர்த்தியத்தை பாராட்டி விட்டு, போய்க்கொண்டே
இருப்பதை விட நாம் வேறு என்ன செய்ய முடியும்….?

மக்களிடையே ஆன்மிக உணர்வை வளர்ப்பதற்காக சொல்லப்பட்ட
ஒரு விரதத்தை, மிகப்பெரிய வியாபாரமாக்கும் உத்தியை கண்டுபிடித்தவர்களை கண்டு அவர்களின் அற்புதமான திறமையை கண்டு –
வியக்கிறேன்…( வேறு வழி… ??? )

———————————————-

விகடன் நியூஸ் வலைத்தளத்தில் “ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு” என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு செய்திக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே –

குறிப்பு – பரந்த அளவில் பொதுமக்களுக்கு இந்த செய்திகள் போய்ச்சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் விகடன் செய்தித்தளத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்க்கப்பட்டு இருக்கிறது என்று எண்ணி இதை இந்த வலைத்தளத்திலும் பிரசுரிக்கிறோம். விகடனின் சமூக அக்கறையை பாராட்டுகிறோம்.
ஒருவேளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு இதில் நியாயமான
ஆட்சேபணை ஏதும் இருக்குமேயானால், இதை விலக்கிக்கொள்ள இந்த வலைத்தளம் தயாராகவே இருக்கிறது.

———————————————————————————
Posted Date : 12:27 (15/02/2018) Last updated : 20:42 (15/02/2018)
கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்… ஈஷாவில் ஈசனுடன் ஓர்
இரவு எப்படி இருந்தது? #SpotVisit
எம்.புண்ணியமூர்த்தி எம்.புண்ணியமூர்த்தி க.விக்னேஷ்வரன்

—————-

தனது 24-வது, மஹா சிவராத்திரி விழாவைக் கோலாகலமாக நேற்று
கொண்டாடி முடித்திருக்கிறது ஈஷா.

தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ‘ஈஷனுடன் ஓர் இரவு’ விழாவைக் கண்டுகளிக்க வந்திருந்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்வதை குறிக்கும் விதமாக மஹா யோக யக்ஞாவை யோகேஸ்வர லிங்கம் முன்பு ஏற்றி வைத்து
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜக்கிவாசுதேவ்.

இரவு முழுவதும் மக்கள் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை
நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது ஈஷா. புகழ்பெற்ற பாடகர்களான,
சோனு நிகாம், தலெர் மெஹந்தி, மோஹித் சவுஹான், ஷான்
ரோல்டன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க
வைத்தன. நடன நிகழ்ச்சிகளும் , நள்ளிரவு தியானமும் மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஆனால்… இவ்வளவு வசதிகளும் நன்கொடை செலுத்தி வந்த பக்தர்களுக்கு மட்டுமே. நன்கொடை இல்லாமல் விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு வேறு விதமாக இருந்தது. விழாவில் கலந்துகொள்ள இவ்வளவு நன்கொடை என்று விளம்பரங்களில் பிரதானமாகப் பார்த்த நினைவில்லை. எனவே, ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு வந்த பக்தர்களுக்கு மேற்குறிப்பிட்ட சேவைகள் வழங்கப்படவில்லை!

நுழைவாயிலில் இருந்து ஆரம்பிப்போம். வழிநெடுக நின்றுகொண்டிருந்த
ஈஷா யோகா மையத்தினர் சிரித்த முகத்தோடும், கூப்பிய கைகளோடும்
திரண்டுவந்த மக்களை சளைக்காமல் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

எண்ணற்ற ஜோசியக்காரர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து பக்தர்களின் எதிர்காலம் கணித்துக்கொண்டிருந்தார்கள். கண்படும் இடமெல்லாம் தென்படுவதுபோல பொருத்தப்பட்டிருந்த ஜியோ விம்பரங்கள் எதற்கோ சாட்சியாக மின்னின.

ஈசனுடன் ஓர் இரவைக் கொண்டாடும் பேரார்வத்தில் எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்தோம். அமைக்கப்பட்டிருந்த செக் பாயிண்ட்களில் நம் கையை உற்றுப் பார்த்துவிட்டு, ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றார்கள்.

அதன் பிறகுதான் உள்ளே நுழையத் தயாராக இருந்த மக்களைக் கவனித்தோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்திலான காகிதப் பட்டைகளை, ‘வாட்ச் போல’ கையில் ஒட்டியிருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷனில் பெயர், ஊர், போன் நம்பர் போன்ற விஷயங்களைக் கேட்பார்கள்.. எழுதிக்கொடுத்துவிட்டு, நாமும் ஓர் காகிதப்பட்டையை வாங்கி ஒட்டிக்கொண்டு உள்ளே நுழையலாம் என்று நினைத்து ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் பகுதிக்கு வேகமெடுத்தோம்.

எங்களைப்போலவே அங்கு பலர் வந்திருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்க்கில் ஒவ்வொரு மொழிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். நமக்கு முன்பு விசாரித்துக்கொண்டிருந்த ஒரு டி-ஷர்ட் பெண்மணி, ‘ஆதியோகி சிலைக்கு அருகில் அமர்வதற்கு 50,000 ரூபாயாம்!’ என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வெளியேறினார்.

ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்கில் அமர்ந்திருந்த ஓர் பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தோம், நிறைய கேட்டகிரி இருக்குண்ணா என்றபடி
மென்குரலில் ஆரம்பித்த அந்தப் பெண். “கங்கா 50,000 ரூபாய், யமுனா
20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக
காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ் விவரித்தார்.

நாம் நம் பர்ஸை கவலையுடன் பார்த்தபடி, ’50,000 ரூபாய்க்கும் 500
ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டோம். ’’50,000 ரூபாய்க்கு
ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய்
கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால்.
5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று
சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல விவரித்தார்.

மிகவும் கவலையுடன், ’’ஆதியோகி சிவராத்திரியில் தரிசிக்க வேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டோமே… ஃப்ரீ என்ட்ரி இல்லீங்களா?’’ என்று கேட்டோம். ’’ஓ… எஸ் இருக்கே… தடுப்புக் கட்டைகளுக்கு வெளியே அமர வேண்டும். சேர் கிடையாது. தரையில் அமர வேண்டும்! என்றவர், நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இட்ஸ் ஓ.கே… நீங்கள் அங்கே செல்லுங்கள்!’ என்று திசையைச் சுட்டிக்காட்டி நம்மை இலவச பகுதிக்கு அனுப்பினார்.

அங்கே சென்றால், எங்கெங்கிருந்தோ வந்திருந்த பல்லாயிரக்கணக்காண
மக்கள் கட்டாந்தரையில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்து அவ்வளவு
பிரமாண்டமான ஆதியோகி சிலைகூட மசமசப்பாகத்தான் தெரிந்தது.

இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி ஸ்க்ரீன்கூட இல்லை. எக்கி எக்கிப்
பார்த்ததில் சோர்ந்துபோன பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட
பார்க்காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.


’’எங்க ஊர்ல இருக்குற ஈஷா யோகா சென்ட்டர்ல சொல்லும்போது,
என்ட்ரியும், ருத்ராட்சையும் ஃப்ரீனுதான் சொன்னாங்க, வீடியோவில்
பேசின சத்குருவும் அதான் சொன்னாரு.

ஆனால், இங்க வந்து கேட்டால், 500 ரூபா இருந்தாதான் உள்ளேயே
விடுவேங்குறாங்க. இல்லைன்னா வெளில தரையில் உட்கார்ந்துக்கோங்கனு சொல்றாங்க. எங்க ஊர்ல இருக்கும் சென்ட்டர்ல இருந்து ஈஷா யோகா மையம் ஏற்பாடு செஞ்ச பஸ்ல வந்திருந்த ஆளுங்களை உள்ள விட்டுட்டாங்க.
அவங்களையும் கட்ட கடைசியிலதான் உட்கார வெச்சிருக்காங்க.

சாமியைப் பார்க்கிறதைக்கூட காசாக்கிட்டாங்க!’’ என்று புலம்பிய ஓர்
திருப்பூர் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்கள் புலம்பின. “போன
வருஷமெல்லாம் இப்படி காசு வாங்கலப்பா..!’’ என்ற ரீதியில்
ஏராளமான புலம்பல்களைக் கேட்க முடிந்தது. `டொனேஷன்தானே
கேட்கிறாங்க அதனால் தப்பேதுமில்லை. விருப்பப்பட்டுதான் கொடுக்குறோம்’ என்று சொல்லிச் சென்றவர்களும் உண்டு.

நல்லவேளையாக சிறிது நேரம் கழித்து எல்லோருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது. பாக்கு மட்டையில் அன்னம் வழங்கியவர்கள், பன்னாட்டு நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெட்டியை ஆங்காங்கே வைத்து மக்களின் தாகம் தீர்த்தார்கள். ஹ்ம்… பலப்பல பிரச்னைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் கங்கா, யமுனா, காவிரி நதிகள் வாழ்க என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது!

பின்குறிப்பு :

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தினரிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். மின்னஞ்சல் மூலமாக ஈஷா யோகா மையத்தினரிடம் கீழ்கண்ட கேள்விகளை அனுப்பினோம்.

1. ’இறைவன் முன் அனைவரும் சமம்’ என முழங்கும் ஈஷா,
நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது. ஆர்வத்தோடு மட்டும் வந்த ஏழைகளுக்கு
அளித்த ட்ரீட்மென்ட் சரியா?

2. இருக்கையில் அமர்ந்து ஈசனுடன் ஓர் இரவு நிகழ்வை கொண்டாடுவதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் நன்கொடை. அதைக் கூட செலுத்த முடியாதவர்கள் என்ன செய்வது?

3. எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படும் என ஈஷாவால் அறிவிக்கப்பட்ட ருத்திராட்சை கூட நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே… ஏன்?

4. ‘நதிகளை மீட்போம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டியில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர்
நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ்வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத்துக்கே முரணாக இருக்கிறதே! இது தொடர்பாக மேலதிக தகவகளைப் பெற விரும்புகிறோம்!

இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அது தொடர்பான விவாதத்தையும் ஈஷா யோகா மையத்தினரிடம் மேற்கொள்ள முயன்றோம். இது தொடர்பாக ஈஷா யோகா மைய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடமும் பேசினோம்.

‘பதில் அனுப்புவார்கள்’ என்று மட்டும் சொன்னார்கள். ஆனால், இந்தக்
கட்டுரைப் பதிப்பிக்கப்படும் வரை பதில் அளிக்கவில்லை. தொலைபேசி
உரையாடலிலும் மதிப்பான பதில் கிடைக்கவில்லை.

எத்தரப்பு குறித்த செய்தியின்போதும், சம்பந்தப்பட்டவர்களின் விளக்கம்
பெற்றுச் செய்தி வெளியிடுவதே விகடன் பாணி. இப்போதும் அதையே
கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஈஷா யோகா மையத்தினர் உரிய விளக்கம் அளித்தால், பரிசீலனைக்குப் பின் அதை வெளியிடவும் தயாராகவே இருக்கிறோம்!

( நன்றி – https://www.vikatan.com/news/coverstory/116470-a-spot-visit-to-
the-mahasivarathri18-conducted-by-isha-and-its-sadhguru.html?
artfrm=news_most_read )

————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஏமாறுகிறவர்களும், ஏமாற்றுபவர்களும்…

  1. புதியவன் சொல்கிறார்:

    என்னுடைய எண்ணம் என்னவென்றால்… சிவராத்திரி என்பது பக்தியோடு இரவுத் தூக்கமில்லாமல் முழித்துக்கொண்டிருப்பது, ஆலய தரிசனம் செய்வது. தமிழகத்தில் ஏகப்பட்ட பாடல் பெற்ற சிவாலயங்கள், அந்த அந்த ஊர் கோவில்கள் இருக்கின்றன. எங்கும் நிறைந்தவன் அங்கே இருந்து தனித்துவமாக நமக்கு அருள் வழங்குகிறான். மனம் மகிழ்ச்சியில் திளைக்கவும் ஆன்மீக உணர்வு பெறவும், கோவில் தரிசனம் உதவி செய்யும். கோவிலுக்குச் செல்லமுடியவில்லையா, தங்கள் வீட்டிலிருந்தே சிவன் படம் அல்லது கடவுள் சன்னிதியில் அவனை வணங்கி மகிழலாம்.

    கோவையில் நடந்தது கார்ப்பரேட் கொண்டாட்டம். “ஈஷாவில் ஈசனுடன் ஒரு இரவு” என்பது ஒரு கொண்டாட்ட உத்தி. Fund raising event. அந்தக் காலத்துல (இப்போ இருக்கான்னு தெரியலை), சிவராத்திரியை, (வைகுண்ட ஏகாதசியை), பக்திப் படங்களை தியேட்டர்களில் பார்த்து இன்புறுவார்கள். அந்த மாதிரி கொண்டாட்டம் முக்கியம் என்று நினைத்தால் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த நாம் தயாரா இருக்கணும். அதே படத்தை திரைக்கு அருகில் இருந்து பார்க்க 5 ரூபாய்னா, மேல போகப்போக இன்னும் அதிகம். பால்கனில உட்கார்ந்து பார்க்கணும்னா 50 ரூபாய் கொடுக்கவேண்டிருக்கும். அவ்வளவுதான் மேட்டர்.

  2. BVS சொல்கிறார்:

    திருட்டுப்பயல்கள் பற்றி இரண்டு படங்கள் வந்துவிட்டன.
    இந்த புரட்டை வைத்து திருட்டுப்பயலே-3 எடுக்கலாம். நன்றாகஓடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s