(பகுதி-2) கொலையென்று சொல்லாதீர் …. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொன்னது….


2011-ல் “செத்துப்போக உதவி” – இடுகையை எழுதியதை தொடர்ந்து,
இது குறித்து சில விஷயங்களில் தெளிவு பெறவும், நம்மால் இதை
மேலெடுத்துச் செல்ல என்ன செய்ய முடியும் என்றறியவும், ஏற்கெனவே
இதில் ஈடுபாடு கொண்டிருந்த சில சமூக நல நிறுவனங்களை
தேடி கண்டுபிடித்து, தொடர்பு கொண்டேன்….

சிலர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் நர்ஸ் பல ஆண்டுகளாக
“கோமா”வில் இருப்பதை “issue”-வாக ஆக்கி, நீதிமன்றத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை தெரிந்து கொண்டேன். அந்த வழக்கில் வரக்கூடிய தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன்…

இந்திய “நீதிமுறை” –
அதற்குரிய நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது..!!!
ஜூலை, 2014-ல் இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தால், விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது…

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் வழக்குரைஞர் வழக்கம்போல் இதிலும் வம்பு செய்யத் துவங்கினார் –

” பாராளுமன்றம் தான் இதனை விவாதிக்கவோ, முடிவெடுக்கவோ
முடியும்… நீதிமன்றத்திற்கு இதில் தலையிட உரிமை இல்லை…”

இதைக் காண – மிகவும் எரிச்சலாக இருந்தது…

அப்போது, திடீரென்று, சற்றும் எதிர்பார்க்காமல், துக்ளக் ஆசிரியர் “சோ”அவர்கள் துக்ளக்கில் இந்த விஷயம் குறித்த தனது ஆதரவான பார்வையை வெளிப்படுத்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது……

உடனே, அதை முன்வைத்து விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை
எழுதினேன். அது கீழே –

——————————————————

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ – “கருணைக்கொலை” குறித்து கூறுவது
…..மகிழ்ச்சி அளிக்கிறது….!!
Posted on ஓகஸ்ட் 6, 2014 by vimarisanam – kavirimainthan

————-

மிக முக்கியமான ஒரு விஷயம் ஜூலை மூன்றாவது
வாரத்தில் உச்சநீதி மன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) முன்
விசாரணைக்கு வந்தது.

உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த பிறகும்,
இறக்காமல் நீண்ட காலமாக அவதிப்படுகிறவர்களை,
குணமடைய வாய்ப்பே இல்லாமல், செயற்கை கருவிகளின் உதவியால்
உயிர் பிழைத்திருக்கும் நிலையில் இருப்பவர்களை,

கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு
சுப்ரீம் கோர்ட் முன் வந்தது.

மத்திய அரசின் வழக்கறிஞர் முதல் நிலையில், இதைத்தீவிரமாக
எதிர்த்தார். பின்னர் இது குறித்து கருத்து சொன்ன மத்திய
அரசு, இந்த விஷயத்தைக் குறித்து சரியான முடிவெடுக்கும் இடம்
பாராளுமன்றமன்றமாகத் தான் இருக்க முடியும் என்றும் கோர்ட் இது
விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும் சொன்னது.

உச்சநீதிமன்றம் இது குறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வழக்கு இன்னும் விசாரணை நிலையில் இருக்கிறது.

கடந்த வாரம், இது குறித்து துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் தன்
கருத்தை தெரிவித்திருக்கிறார் –

—————

– கோர்ட் தலையிட்டு ஒரு உத்திரவைப் பிறப்பித்து
அதன் மூலம் கருணைக்கொலைகளை சட்டரீதியாகச்
செய்ய முயற்சி நடக்கவில்லை. இது பற்றி ஒரு
விவாதம் தொடங்க நீதிமன்றம் கூறிய கருத்துக்கள்
உதவியிருக்கின்றன. அவ்வளவு தான்.

கருணைக்கொலை என்பது சிலருக்கு மிகவும்
உதவக்கூடிய விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை.

உடல் நலம் சீரடைய வழியில்லை; உபாதைகளைத்
தந்து கொண்டிருக்கிற வியாதிகளின் தீவிரமும் குறைய
வாய்ப்பில்லை; செயற்கையாக இதயத்துடிப்பை மட்டும்
நீட்டித்துக்கொண்டு, எந்த வகையிலும் செயல்படாத
நிலையில் நோயாளியை அப்படியே வைத்திருப்பது
என்பது மருத்துவ ரீதியாக நடக்கக்கூடியதே;
அப்படி நடந்தும் வருகிறது.

இந்த நிலையை பலர் விரும்புவதில்லை.
அம்மாதிரி விரும்பாதவர்களுக்கு
சில கட்டுப்பாடுகளை விதித்துச் செயற்கை நீட்டிப்பை
துண்டித்து விடலாம் என்பது தான் கருணைக்கொலை.

ஆனால், இதில் வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன.
“நோயாளிதான் விரும்பினார்” என்று சொல்லிகொண்டு
மற்ற சிலர் யாராவது இந்த முடிவை எடுத்து விடலாம்.
அப்போது அது கொலையே ஆகி விடக்கூடிய ஆபத்தும்
இருக்கிறது. உறவினர்களுக்குள் ஏற்படும் பகைமையின்
காரணமாக இந்த வாய்ப்புகள் பயன்படுத்தப்படலாம்.

இதற்கெல்லாம் இடம் இல்லாத வகையில்,
கடுமையான மேற்பார்வையின் கீழ் இதில் ஒரு வசதி
செய்யப்பட்டால் அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

—————-

பொதுவாக “பழமையாளர்” ( கன்சர்வேடிவ்) என்கிற
இமேஜைக் கொண்டிருக்கிற ஆசிரியர் ‘சோ’ அவர்கள்
‘கருணைக்கொலை’ க்கு இந்த அளவு ஆதரவாக கருத்து கூறியிருப்பது
எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாராளுமன்றத்தில் பேசி முடிவெடுக்கிறோம் என்று
மத்திய அரசு கூறுவது
கதைக்கு உதவாத
விஷயம்.

40 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டையே
கிடப்பில் போட்டு வருபவர்கள் இதில் என்ன தீவிரம்
காட்டப் போகிறார்கள் ….?

சிறந்த வழி –

இந்த விஷயம் மக்கள் முன் விரிவான விவாதத்திற்கு
வைக்கப்பட வேண்டும். அவர்கள் அச்சம் போக்கப்பட வேண்டும்.

சமூக அமைப்புகளின் மூலம், வலைத்தளங்கள் மூலம்,
தொண்டு நிறுவனங்களின் மூலம்
நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைப் பெற்றும்,
ஊடகங்களின் மூலம் விவாதங்கள் நடத்தியும்
கூடிய வரை தகுந்த கட்டுப்பாடுகளுடனும்,
உரிய மேற்பார்வை அமைப்புகளின் மூலமும்
இந்த கருத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஆதரவான ஒரு நிலை
எடுக்கப்பட வேண்டியது அவசியம்
.

இந்த விஷயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன், பொது
மக்களிடையே கருத்தொற்றுமை உண்டாக்கப்பட வேண்டும். அப்போது
தான் மத்திய அரசு விஷயத்தை கிடப்பில் போடாமல் உரிய சட்டங்களை
முனைப்புடன் கொண்டு வரும்.

———————————————

தொடர்கிறது – பகுதி-3-ல்

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to (பகுதி-2) கொலையென்று சொல்லாதீர் …. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொன்னது….

  1. Pingback: (பகுதி-2) கொலையென்று சொல்லாதீர் …. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொன்னது…. – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.