மாறன் சகோதரர்கள் வழக்கு ….!இந்த வழக்கை, துவக்க காலத்தில் தீவிரமாக எடுத்துச்சென்ற திரு.குருமூர்த்தி அவர்களுக்கும், அவர் தீவிரமாக ஆதரிக்கும் பாஜக தலைமைக்கும் இந்த செய்தி சமர்ப்பணம் :-

2 ஜி வழக்குக்கு அடுத்தபடியாக, அதே திசையில் செல்லும்
அடுத்த வழக்கு இது …

திரு.குருமூர்த்தி அவர்களுக்கும் தெரியாமல், பாஜக தலைமை கொள்கை முடிவுகளில் எதாவது மாற்றம் செய்திருக்கும் போல…!!!

சிபிஐ – சரியான ஆதாரங்களை தரவில்லை; குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கும் அடுத்த வழக்கு இது…

சத்யமேவ ஜெயதே… (கனவுகளில்…)…!!!

———————————————————————————

செய்தி –

மாலை 7, புதன், 14 மா 2018
பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!
—————————-

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரை விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத்தொடர்புத் துறை
அமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும்,

பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள்
பொது மேலாளர் பிரம்ம நாதன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என 7 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எனினும், இந்த மனு மீது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கூடாது என சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார்.

அதன்படி, இன்று (மார்ச் 4) பிற்பகல் 2.30க்கு இந்த வழக்கில் தீர்ப்பு
அறிவிக்கப்பட்டது. வழக்கிலிருந்து தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘ இந்த வழக்கில் தயாநிதிமாறன் மோசடி செய்ய வேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் பிஎஸ்என்எல் இணைப்புகளை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ நிரூபிக்கவில்லை. கலாநிதிமாறன் சன் குழுமத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கும் அடிப்படை ஆதாரமில்லை.

சன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்காத நிலையில்,
அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை இந்த வழக்கி்ல் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதேபோல பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை.

எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான
சான்றாவணங்கள் சிடி வடிவி்ல் உள்ளது. அந்த சிடி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடைசி வரையிலும் அந்த சிடி ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

சிபிஐ தனது குற்றச்சாட்டை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

( https://minnambalam.com/k/2018/03/14/86 )

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மாறன் சகோதரர்கள் வழக்கு ….!

 1. கார்த்திகேயன் சொல்கிறார்:

  தண்டிக்கபட்டால் மட்டுமே அது செய்தி. இதெல்லாம் எதிர்பார்க்க பட்டதே. எப்படி தா கிருட்டிணன் நடைப்பயிற்சி செல்லும் போது தன்னைத்தானே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரோ அது போலவே இதுவும்… தொலைபேசியகம் அதாவே வந்தது அப்படியே தானகவே சென்றது.
  கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா…

 2. Mani சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இதற்கான பின்னணி ஏற்கெனவே உங்கள்
  பழைய இடுகை ஒன்றில் இருக்கிறது:-

  // தான் சார்ந்த, தான் உருவாக்கிய, அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் -க்கு எதிராக, பாஜக ஆட்சி முடிவுகளை எடுக்கும்போது –

  அதனை துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பாரா…? அல்லது மோடிஜியின் உறவும், நெருக்கமும் தான் முக்கியம் என்று இந்த கொள்கை விரோதங்களை கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பாரா…?

  ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூட ஏற்கெனவே அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது…!!!

  ஆனால், திரு.குருமூர்த்தி அவர்கள் இதுவரை – சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் – மோடிஜி அரசுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவித்ததாக தெரியவில்லை.

  தான் கொண்ட, கடைபிடிக்க விரும்பும் – கொள்கைகள் முக்கியமா…?
  அல்லது மோடிஜியுடனான நெருக்கமும், உறவும் தான் முக்கியமா…?//

  ( திரு.குருமூர்த்தி அவர்களுக்கு – கொள்கையா அல்லது மோடிஜியுடனான நெருக்கமா….? எது முக்கியம்…?
  Posted on ஜனவரி 17, 2018 by vimarisanam – kavirimainthan)

  கொள்கையாவது, லட்சியமாவது;
  அதிகாரத்தின் நெருக்கத்தினால் கிடைக்கக்கூடிய வசதிகளை
  அனுபவிப்பவர்களுக்கு, அதை விட்டுக்கொடுக்க அவ்வளவு சுலபத்தில் மனம் வருமா ?

 3. புதியவன் சொல்கிறார்:

  நாம மோடி அரசைக் குறை சொல்வதைவிட, இதற்கு சிபிஐ டீமைத்தான் குறை சொல்லவேண்டும். அவர்கள் capable இல்லையென்றால், ஏன் இதனை நாம் அவுட் சோர்ஸ் செய்யக்கூடாது? அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேச அதிகாரிகள் மிக மிக நேர்மையானவர்கள் ( இந்தியர்களைவிட, 100 பங்குக்குமேல் நேர்மை உள்ளவர்கள் எல்லா வளர்ந்த நாட்டின் அரசு அதிகாரிகள்). மொத்த சிபி.ஐ விங்கையே நாம் நீக்கிவிட்டால் பல லட்சம் கோடி வரிப்பணமாவது மிச்சமாகும். ஒருவேளை ‘நீதி அவசியமில்லை’ ஆனால் ‘இந்தியர்தான்’ இந்தப் பதவிக்கு வேண்டும் என்றால், அவர்கள் எல்லோருக்கும்பதிலாக, என்னை ஒற்றை சிபிஐ நீதிபதி/வக்கீல்/ஊழியர் என்ற ஆல் இன் ஆல் அழகுராஜாவாக, மாதம் 2 லட்சம் ரூபாய் தந்தால் போதும் (ஆயிரக்கணக்கான அதிகாரிகள், லட்சக்கணக்கான ஊழியர்கள் தேவையில்லை). என் வேலை மிகவும் சிம்பிள். எந்த வழக்கையும் எடுத்துக்கொண்டு, ‘ஆதாரமில்லை’ என்ற ஒரு வரியை டைப் செய்தால் போதுமானது. எல்லோருக்கும் நேரம் மிச்சம்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  // நாம மோடி அரசைக் குறை சொல்வதைவிட, இதற்கு சிபிஐ டீமைத்தான் குறை சொல்லவேண்டும்.//

  cbi யை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ மோடிஜியால் முடியாது என்றால் பிறகு அந்தப்பதவிக்கு அவர் ஏன்…?
  வேறு எவர் வேண்டுமானாலும் – அந்த சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாமே ?
  ( லாலு பிரசாத் உட்பட … )

  ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் போட்டு, பதவிக்கு வந்தது, இப்படி வரிசையாக அவ்வப்போது எடுக்கும் “கொள்கை” முடிவுகளின்படி வேண்டப்பட்டவர்களை “ரிலீஸ்” செய்வதற்காகவா ?

  உங்களுக்கு தெரியாமல் இல்லை… ஆனாலும் அவ்வப்போது “மறந்து” விடுகிறீர்கள் – இருந்தாலும் நினைவுபடுத்த விரும்புகிறேன்… சிபிஐ சார்பாக கோர்ட்டில் வாதாடுவது, வழக்கை முன்கொண்டு செல்வது எல்லாம் அரசு அதிகாரிகள் அல்ல.

  மத்திய அரசால் நியமிக்கப்படும், அரசியல் சார்புள்ள (ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட ) வழக்குரைஞர்கள் தான்… எனவே, கோர்ட்டில் வழக்கு எந்த திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு இந்த வழக்குரைஞர்களே முக்கிய பொறுப்பு. கண்டுக்கொள்ளாதே என்று அரசோ அமைச்சரோ “கொள்கை” – முடிவெடுத்து இவர்களிடம் சொல்லி விட்டால், இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். எதிர்பார்க்கும் ரிசல்ட் தன்னால் வந்து விடும்…

  • புதியவன் சொல்கிறார்:

   “ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் போட்டு” – அடக் கடவுளே… இன்னும் நீங்க இதை மறக்கலையா? ‘அரசியல்வாதி உண்மை பேசுவார்’ என்று எதிர்பார்க்கலாமா சார்? மோடி அவர்களுக்கு தேர்தல் பரப்புரையில் பேச பாக்கி இருப்பது, ‘ராமர் கோவில் அயோத்தியில் கட்டுவேன்’ என்பதுதான். மற்றபடி, ‘ஊழலை ஒழித்தேன்’, ‘கருப்புப் பணத்தைக் கொண்டுவந்தேன்’ என்றெல்லாம் ஆரம்பித்தால் மேடையில் உள்ளவர்களே அடக்கமுடியாமல் சிரித்துவிடுவார்கள். ‘முஸ்லீம் தீவிரவாதிகள்’, ‘மாட்டுக் கறி’ என்றெல்லாம் சொன்னால் இந்துக்கள், ‘அடிக்க வராத குறையா’ எரிச்சல் படுவார்கள்.

   ஊழல் ஒழிப்பு லட்சணத்தைத்தான் உள்ளங்கை நெல்லிக்கனியாக 2000 ரூ கோடிக்கணக்காகப் பிடிபட்டபோது பார்த்துவிட்டேனே.

   ‘வழக்கறிஞர்கள்’ – இவர்களைப் பற்றி ரொம்ப பெருமையா நான் எண்ணுவதில்லை. எப்படி ஃப்ராடு பண்ணுவது என்பதைத்தான் இவர்கள் பெரும்பாலானவர்கள் (60% இல்லை 99%) செய்கிறார்கள். ‘அரசு வழக்கு’ தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன. நியாயம் நிலை நாட்டினால் அவர்களுக்கு ஏது வருமானம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.