ஒரு தோல்வி – இத்தனை சந்தோஷம் தருமா …??? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 4 )


ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 )

———————–

அதே ஜி.எம். நிர்வாகத்தில் பணி புரிந்த காலத்தில் நடந்த இன்னொரு
மறக்க முடியாத நிகழ்வு இது…

—————-

36-37 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்..
அப்படியே சொல்வது கடினம்….சில விஷயங்கள் விடுபடக்கூடும்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி
(house rent allowance) கொடுக்கப்பட வேண்டுமானால் அவர்கள்
பணி புரியும் இடம் நகரத்தின் எல்லையிலிருந்து 8 கி.மீ.
தொலைவிற்குள் இருக்க வேண்டுமென்று ஒரு விதி இருந்தது.
ஆனால், திருச்சி தொழிற்சாலை.. ஊருக்கு வெளியே, நகர
எல்லையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது…

நிதியமைச்சகத்தின் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு,
தங்களுக்கு HRA தரப்பட வேண்டுமென்று தொழிலாளர்களும், அவர்களது
யூனியன்களும் அவர்களால் இயன்ற விதங்களில் எல்லாம்
போராடினார்கள்…
தொடர்ந்து நுழைவாயில் கூட்டங்கள்,
தொடர் உண்ணாவிரதங்கள்,
உள்ளிருப்பு வேலை நிறுத்தம் – என்று பல வழிகளில்.

துவக்கத்தில், இது மத்திய அரசின் பொது விதி…தங்களால் இதில்
ஒன்றும் செய்வதற்கில்லை என்று தொழிற்சாலை நிர்வாகம் கைவிரித்து
விட்டது.

ஆனால், போராட்டங்கள் வலுவடையவே, ஒருவழியாக, நிர்வாகம்
இதன் அவசியத்தை உணர்ந்து, கல்கத்தாவிலுள்ள தலைமையகத்தை
வலியுறுத்த தொடங்கியது… முதலில் தலைமையகம் கைவிரித்தாலும்,
பின்னர் அதுவும் கள நிலவரத்தை புரிந்து கொண்டு, பாதுகாப்பு
அமைச்சரகத்தை வலியுறுத்த துவங்கியது.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விதிவிலக்கு
உத்திரவு பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் மத்திய நிதியமைச்சகத்திடம் தான்
இருந்தது. பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்திய போதும்,
நிதியமைச்சகம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் தான்
பாதுகாப்பு அமைச்சர். ஒரு தடவை அவர் திருச்சி தொழிற்சாலைக்கு
விஜயம் செய்ய இருந்தபோது,

அவன், ஜி.எம்.மிடம் தொழிலாளர் பிரதிநிதிகளைக்கொண்டு
அமைச்சரிடம் நேரடியாக இந்த கோரிக்கையை வற்புறுத்த வழி
செய்யலாம்…அமைச்சருக்கு இந்த பிரச்சினை குறித்த நேரடி அனுபவம்
ஏற்படும்; அவரும் அக்கறை கொள்வார் – என்று சொன்னான். ஜி.எம்.
ஏற்றுக் கொண்டார். அமைச்சரின் விஜயத்தின்போது, தொழிலாளர்
பிரதிநிதிகள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தொழிற்சாலையை பொறுத்தவரை, சாதாரணமாக இத்தகைய VIP
வருகைகளை ஒன்றிணைக்கும் பணியை அவன் தான் பொறுப்பேற்று
செய்து வந்தான். எனவே, இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை
செய்வதில் அவனுக்கு சிரமம் ஏதும் இல்லை…

தொழிலாளர் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து அமைச்சரை சந்தித்து
மனு அளித்து HRA குறித்த தங்கள் கோரிக்கையை சொல்லி, அவர்
அவசியம் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போதும், அதன் பின்னர், பாதுகாப்பு அமைச்சரும்,
தொழிற்சாலை ஜி.எம்.மும்அலுவல் ரீதியாக பேசிக்கொண்டிருந்தபோதும்,
அவனும் உடனிருந்தான்…

ஆர்வி அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,
தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்பினார்.
டெல்லி சென்ற பிறகு அவரே, நிதியமைச்சருடன் இது குறித்து
பேசி இருக்கிறார்…

ஆனாலும், இந்த ஒரு தொழிற்சாலைக்கு மட்டும், 8 கி.மீ. விதியிலிருந்து
விலக்கு அளிக்கப்பட்டால், அது இந்தியா முழுவதும் உள்ள மேலும் பல
அலுவலகங்களிலிருந்தும் அதே போன்ற கோரிக்கைகள் உருவாக
வழிவகுக்கும் என்றும் எனவே, இதை மேற்கொண்டு வலியுறுத்த
வேண்டாம் என்றும் ஆர்வி அவர்களுக்கு சொல்லப்பட்டு விட்டது.

கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்கவில்லை என்று பாதுகாப்பு
அமைச்சகத்திலிருந்து ஜி.எம். அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது.
அது தொழிற்சங்கங்களுக்கு தெரிய வர மீண்டும் நிம்மதியின்மை…!!!

அப்போது அவனுக்கொரு யோசனை தோன்றியது…
தொழிற்சங்க செயலாளரிடம் தனிப்பட்ட முறையில் ஒரு ஆலோசனை
சொன்னான்…

அதன் தொடர்ச்சியாக – சென்னை உயர்நீதிமன்றத்தில், அனைத்து
தொழிலாளர்களின் சார்பாகவும் யூனியன் செயலாளரால் ஒரு வழக்கு
தொடரப்பட்டது –

திருச்சியில் பணிபுரியும் ரெயில்வே தொழிற்சாலை மற்றும் தபால் தந்தி
இலாகா ஊழியர்கள் அனைவருக்கும் HRA அளிக்கப்படும்போது,
தங்களுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது அநீதி என்றும், உயர்நீதிமன்றம்
தலையிட்டு, தங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதும்
கோரிக்கையாக வைக்கப்பட்டது…. !

தொழிற்சாலை சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளை கவனித்துக்
கொள்ளும் பொறுப்பு, அலுவலக ரீதியாக அவனிடம் தான்
வழங்கப்பட்டிருந்தது….

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும்.
சென்னையில், உயர்நீதி மன்றத்தில், மத்திய அரசின் வழக்குகளை

கையாளும் Senior CGSC ( Central Govt. Standing Counsel ) ஒரு
சனிக்கிழமையன்று, ஜி.எம்.அவர்களை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு, தொழிற்சாலை சார்பாக பதில் மனுவை (counter affidavit)
தயாரித்து எடுத்துக் கொண்டு, அந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த
அதிகாரியை திங்கட்கிழமை காலையில் தன்னை வந்து சந்திக்க
அனுப்பி வைக்குமாறு சொல்லி இருக்கிறார்.

நிர்வாகப் பிரிவில், அவனுக்கும் ஜி.எம். அவர்களுக்கும் இடையே
இரண்டு மூத்த அதிகாரிகள் உண்டு. அதில் ஒரு அதிகாரி
விடுமுறையில் இருந்தார். மற்றவர் டெபுடி மேனேஜர் எஸ்.ஆர்.

அப்போதே சனிக்கிழமை மதியம் ஆகிவிட்டது….
அவசரம் காரணமாக ஜி.எம். உடனடியாக அவனையும்,
அந்த மற்றொரு அதிகாரியையும் உடனே நேரில் அழைத்து,
counter affidavit -ஐ மறுநாளைக்குள் தயாரித்து எடுத்துக்கொண்டு,
திங்கள் காலை அவனால் சென்னையில் அரசு வக்கீலை சந்திக்க
முடியுமா ? என்று கேட்டார்.

அவன், அன்றிரவு அலுவலகத்தில் அமர்ந்து எந்நேரமானாலும்,
counter-ஐ தயாரித்து விடுகிறேன் என்றும், மறுநாள் ஞாயிறு விடுமுறை
என்பதால், காலையில் ஜி.எம். அவர்களின் இருப்பிடத்திற்கு வந்து,
அவரது ஒப்புதலையும், கையெழுத்தையும் பெற்று, நேராக சென்னை
செல்கிறேன் என்றும் சொன்னான்..

டெபுடி மேனேஜர் எஸ்.ஆர்., தான் வீட்டிலேயே இருப்பதாகவும்,
இரவு எந்நேரம் ஆனாலும், draft தயாரித்து முடித்தவுடன், தன்னை
தொடர்பு கொண்டு தொலைபேசியிலேயே (internal) படித்துக் காட்டி
விடும்படியும், மாறுதல் எதாவது தேவைப்பட்டால் அப்போதே
சரி செய்து விடலாமென்றும் மறுநாள் ஜி.எம். அவர்களை சந்தித்தபிறகு
அவன் நேரடியாக சென்னை சென்று விடலாமென்றும் சொன்னார்.

அவன் அலுவலகத்திலேயே தொடர்ந்து அமர்ந்து இரவு
draft ஐ முடித்தான் உடனே தொலைபேசியில் எஸ்.ஆர்.அவர்களுக்கு
படித்துக் காண்பித்தான்…
ஒரு முக்கியமான இடத்தில் வழக்கை பலவீனமாக்கக்கூடிய ஒரு
தகவலை அவன் சேர்த்திருந்தான். ஆனால், அவரால் அதை உணர
முடியவில்லை……அவன் மீது அத்தனை நம்பிக்கை அவருக்கு…!
அதனால், அவர் எந்த மாற்றங்களையும் செய்யச் சொல்லவில்லை.

இருந்தாலும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. தான் என்ன
செய்திருக்கிறேன் என்பதையும், அதன் விளைவு என்னவாகலாம்
என்பதையும் அவருக்கு எடுத்துச் சொன்னான்…
அவர் பதறி விட்டார்.. இது தவறில்லையா என்று கேட்டார்.

அவன் அவரிடம் “சார், அந்த பொறுப்பை என்னிடம் விடுங்கள்…
நாளை காலையில் நான் ஜி.எம். அவர்களிடம் இது குறித்து நேரிலேயே
விளக்குகிறேன்.. அவர் ஒப்புக்கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது… ஒருவேளை அவர் ஏற்கவில்லையென்றால், மீண்டும்
ஆபீசுக்கு வந்து மாற்றி மீண்டும் எடுத்துக் கொண்டு போகிறேன்..
என் மன திருப்திக்காக இந்த முயற்சியை நான் அவசியம் மேற்கொள்ள
விரும்புகிறேன்.
ஆனால், எதைச்செய்தாலும், அதை ஜி.எம். அவர்களிடம்
வெளிப்படையாக பேசி, அவர் ஒப்புதலோடு தான் செய்வேன் ”
என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தான்.

மறுநாள், ஞாயிறு காலை அவன், ஜி.எம். இருப்பிடத்திற்கு சென்றான்.
ஜி.எம். மனைவி அவனை ஏற்கெனவே அறிவார்….பொது நிகழ்ச்சிகளில்
சந்தித்திருக்கிறார்கள்… இன்முகத்துடன் வரவேற்றார். coffee தந்தார்.

பின்னர், ஜி.எம். அவர்களிடம் counter affidavit – ஐ படிக்கத் தரும் முன்னர்,
“சார், நீங்கள் படிக்கும் முன்னர் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்”
என்றான்..

“yes yes go ahead” .. என்றார்.

இந்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு HRA கிடைக்க வேண்டும் என்று
நாம் நிர்வாகத்தின் சார்பாக மிகவும் முயற்சி செய்தோம்…
இந்த விஷயத்தை முழுமனதுடன், பாதுகாப்பு அமைச்சர் வரை எடுத்துச்
சென்றோம். பாதுகாப்பு அமைச்சர் கூட ஆர்வத்துடன் இது
கிடைக்க வேண்டுமென்று முழுமூச்சுடன் முயற்சி செய்தார்.

இருந்தாலும், சில official formalities காரணமாக நிதியமைச்சகம்
நிராகரித்து விட்டது…. நாம் நேரடியாக செய்ய முடியாததை கோர்ட்
மூலம் மறைமுகமாக நிறைவேற்றி வைத்தால் என்ன என்று
தோன்றுகிறது” என்றான்.

மௌனமாக, ஒருக்கணம் அவனையே உற்றுப்பார்த்தார்…
” எப்படி உனக்கு இந்த யோசனை தோன்றியது..?” என்று கேட்டார்.

” இந்த வழக்கில் நம் எல்லாருடைய விருப்பமும் ஒன்றே
தான். அது நிறைவேற வேண்டும்; வழியைப்பற்றி கவலைப்பட
வேண்டாம்; ரிசல்ட் தான் முக்கியமென்று தோன்றியது… அதான்” –
என்றான்.

” நீ சொல்வதில் நியாயம் இருந்தாலும் – அரசுக்கு எதிராக வழக்கு என்று
வந்துவிட்டால், நாம் எதிர்த்து தானே ஆக வேண்டும்… அது நம் கடமை
அல்லவா? ” என்றார்..

“தொழிலாளர்கள், உள்ளூர் நிர்வாகம், கல்கத்தா தலைமையகம்,
பாதுகாப்பு அமைச்சர் – இத்தனை பேரும் விரும்பக்கூடிய ஒரு
முடிவைப்பெறுவதற்காக, நாம் வழக்கில் தோற்றுப்போக முயற்சி
செய்வதில் தவறில்லை என்று நினைத்தேன் ” என்றான்.

அற்புதமான அதிகாரி அவர்…..அவரிடம் இந்த அளவிற்கு
வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசக்கூடிய அளவிற்கு அவர்
அவன் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமும் தந்திருந்தார்…

“நீ சொல்வது சரி தான்… ஆனால், நமக்கு எதிர்க்க வேண்டிய கடமை
இருக்கிறதே…நாளை மேலிடத்திற்கு நாம் பதில் சொல்ல வேண்டுமே..?”
என்றார்.

“நீங்கள் ஒப்புதல் தருவீர்கள் என்கிற நம்பிக்கையில் counter-ல்
தேவையே இல்லாமல் ஒரு தகவலை சேர்த்திருக்கிறேன்… அது
நாம் தோற்க உதவி செய்யும் ” என்றான்.

தொழிற்சாலை ஊழியர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற
நல்ல எண்ணம் கொண்ட ஒரு அதிகாரி என்று அவரை அவன்
புரிந்து வைத்திருந்ததும் –

இவன் எதைச்செய்தாலும், சரியாகவே செய்வான் என்று அவர், அவன்
மீது நம்பிக்கை வைத்திருந்ததாலும் –

அந்த counter affidavit அப்படியே ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜி.எம்.
அவர்களின் கையெழுத்தையும் பெற்றது.

மறுநாள் திங்கள் காலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனியர் CGSC
திருவேங்கடம் அவர்களை சந்தித்தான்… மற்ற வழக்குகள் மூலம், அவர்
அவனை ஏற்கெனவே அறிவார். இருவரும் சகஜமாக பழகக்கூடிய
அளவிற்கு அவர்களுக்குள் பழக்கம் உண்டு.

“என்னப்பா, counter affidavit தயாரா…? எல்லாம் சரியாக இருக்கிறதா..?”
என்றார்…

“எல்லாம் ரெடி சார்… ஆனால் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல
வேண்டும்… எங்கள் ஜி.எம். நேரில் உங்களிடம் சொல்லச் சொன்னார்.
இந்த வழக்கில், எதிர்மனுதாரரை எதிர்த்து, நாம் மிகவும் தீவிரமாக
வாதாட வேண்டாம்.. ஒரு formality- க்காக எதிர்த்தால் போதும்..

ஏனெனில், தொழிலாளர்களுக்கு HRA கிடைக்க வேண்டும் என்று
தொழிற்சாலை நிர்வாகமும் விரும்புகிறது” என்றான்.

“அதெப்படி.. கேஸ் தோற்றுப்போவதற்காக நான் வாதாட முடியுமா ?”
என் reputation என்ன ஆகும் ? என்றார்…

” என்னவோ சார்.. ஜி.எம். சொல்லச் சொன்னதை சொல்லி விட்டேன்.
இனி உங்கள் விருப்பம்… ” என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டான்.

————————————

இடுகை நீண்டு விட்டது.
எழுதிக் கொண்டிருக்கிறேன்.. அடுத்த பகுதியில்
மீண்டும் வருகிறேன்…!
( தொடரும்… பகுதி-2-ல்)

—————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஒரு தோல்வி – இத்தனை சந்தோஷம் தருமா …??? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 4 )

 1. கங்கை மைந்தன் சொல்கிறார்:

  தங்களின் கதை நிஜ சம்பவம் போலவே சுவாரஸ்யமாக இருந்தது, தொடரும் போட்டது தான் நெருடலாக இருந்தது. அடுத்த பகுதியில் அந்த பெயரில்லா அவன் பாத்திரத்தின் ஜகதல பிரதாப சாகசங்களை எதிர் நோக்கும் உங்கள் அன்பு வாசகன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கங்கை மைந்தன்…!!!

   இன்று தான் உங்கள் பின்னூட்டத்தை முதல் தடவையாக இங்கே பார்க்கிறேன்.
   இந்த வலைத்தளத்திற்கும் இப்போது தான் வருகிறீர்களா இல்லை ஏற்கெனவே
   வருவதுண்டா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Sridhar சொல்கிறார்:

  “Your” Intention to help for the “genuine” needs of others and for that taking bold steps is really a great attitude sir. Salute you for the same.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஸ்ரீதர்.
   இந்த வாய்ப்புகளை எனக்கு அளித்தமைக்காக நான் தான் கடவுளுக்கு
   நன்றி சொல்ல வேண்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Pingback: ஒரு தோல்வி – இத்தனை சந்தோஷம் தருமா …??? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 4 ) – TamilBlogs

 4. Surya சொல்கிறார்:

  அன்புள்ள காவிரிமைந்தன் அய்யாவிற்கு,

  வணக்கம். வழக்கம் போல் ஒரு அற்புதமான பதிவு. தயவு செய்து அடுத்த பாகத்திற்கு வெகு நாட்கள் காக்க வைத்து விடாதீர்கள்!

  இரண்டு கேள்விகள்!

  1) அந்தக் காலக் கட்டத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப் பட்டிருந்தனவா? அப்படி இருந்ததென்றால் திரு. நாராயணன் தலைவராக இருந்த சங்கம் எந்த அரசியல் காட்சியைச் சார்ந்திருந்தது?

  2) திரு ஆர்.வி அவர்களின் நிர்வாகத் திறன் பற்றி உங்கள் கருத்து என்ன?

  நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சூர்யா,

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   1) அந்த காலத்தில் -அகில இந்திய அளவில் இரண்டே அமைப்புகள் தான
   (Federations..) இருந்தன.
   இதில் அளவில் பெரியதாக இருந்தது இடதுசாரி இயக்கங்களின் தலைவர்களை
   கொண்ட AITUC ( All India Trade Union Congress – இதில் காங்கிரஸ் என்று பெயர் முடிந்தாலும், உண்மையில் கம்யூனிஸ்ட் சார்புடையது…! )

   இரண்டாவது, அப்போதைக்கு அகில இந்திய அளவில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி சார்புடைய INTUC (Indian National Trade Union Congress…)

   அந்த காலத்தைய தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு அகில இந்திய அமைப்பில் எதாவது ஒன்றுடன் இணைந்திருந்தன (Affiliated to any one of these two…)

   நாராயணன் -மார்க்ஸிஸ்ட் சிந்தனையாளர்… அவர்களுக்கென்று அப்போது
   தனி federation இல்லாததால், கம்யூனிஸ்ட் தொழிற்சங்க கூட்டமைப்புடன் இருந்தார்.

   2) ஆர்.வி.அவர்கள் மனதளவில், செயலளவில் மிகச்சிறந்த மனிதர். அவரும் அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர் தான். திரு.காமராஜ் அவர்களின் மிக நெருங்கிய சகா. தேசபக்தி, நேர்மை – தமிழக நலனில் மிகுந்த அக்கறை காட்டியவர்…

   அவருடன் எனக்கு நேரடியாக ஏற்பட்ட ஒரு நாள் அனுபவத்தைப்பற்றி
   இங்கு விமரிசனம் தளத்தில் ஒரு தடவை எழுதி இருந்தேன்… எங்கே இருக்கும் என்று தெரியவில்லை… தேடி கண்டுபிடிக்க முடிந்தால், அதையும் மீண்டும் பதிப்பிக்கிறேன். சுவாரஸ்யமான ஒரு சம்பவம் அது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.