துக்கச் சுமை குறைய வழி – காஞ்சி முனிவர் சொன்னது …..காஞ்சி முனிவரின் வார்த்தைகளில் –

———————–

நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன?

பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான்.
அந்த ஒன்று இத்தனையாகவும் தோன்றுகிறது. இத்தனையான
தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால்
சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம்
ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக்
காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக
ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும்.
இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.

உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது
நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற
சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்?

வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு
ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான்
செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த
நிமிஷமே மறைகிறது.

அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக்
கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்
வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில்
கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு
ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான
ஒன்றை அறிவது தான்.

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள்
உண்டாகத்தான் செய்யும்.

பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல்
இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும்
அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம்.

ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும்,
அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில்
இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ,
சுளுக்காவதோடோ போய்விடும்.

பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே,
அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து
உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால்
உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற
கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது.

இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச்
சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே
மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக்
கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று
நினைத்துக் கொண்டிருக்கிறான்.

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத்
துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம்.
இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு
சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக்
கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க
வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத
ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா
என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது.
வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது
கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம்
வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு
அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம்.
அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில்
அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள்
இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி
அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.

..

ஓலைப்பாய், மரப்பலகை தலையணை, படிக்க ஒரு
பூதக்கண்ணாடி –
இந்த முனிவர்- நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே இந்த அளவு எளிமையை…!!!

..

————————————————

இதயத்தில் இருத்திக் கொள்ள –

இன்பமும், துன்பமும் – சந்தோஷமும், துக்கமும் –
நமக்கு வந்தது, வருவது, வரப்போவது – எல்லாமே

நமது செயல்களின் மூலம்
நாமே வரவழைத்துக் கொள்வது தான்
என்பதை உணர்ந்துகொண்டால்,

-எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொண்டால்,
இறை நினைப்பை எப்போதும் மனதில் இருத்திக் கொண்டால்,

– துன்பம் ஏற்படும்போதும் கூட,
அதன் சுமை நம்மை வருத்தாது…
மனம் இலேசாகும்…!

————————————————————

பின் குறிப்பு –
இன்றைக்கு வேறு எதையும் எழுதுகின்ற நிலையில் நான் இல்லை…

—————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to துக்கச் சுமை குறைய வழி – காஞ்சி முனிவர் சொன்னது …..

 1. ravikumar சொல்கிறார்:

  Karma theory was explained in Mahabharatha with so many example.

 2. Pingback: துக்கச் சுமை குறைய வழி – காஞ்சி முனிவர் சொன்னது ….. – TamilBlogs

 3. அறிவழகு சொல்கிறார்:

  /// இன்பமும், துன்பமும் – சந்தோஷமும், துக்கமும் –
  நமக்கு வந்தது, வருவது, வரப்போவது – எல்லாமே

  நமது செயல்களின் மூலம்
  நாமே வரவழைத்துக் கொள்வது தான்
  என்பதை உணர்ந்துகொண்டால், ///

  —– —– —–

  இப்போது அதாவது இந்த பிறவியிலேயே அவரவர் செயல்களின் பலனே என்று நம்புகிறேன்.

  அது ஏன் பல அல்லது ஏழு பிறவிகள்.

  எல்லா பிறவிகளிலும் ஒருவர் தீமையே செய்தால்…!?

  அத‌ன் பின் கொடுக்கப்படக் கூடிய தண்டனை என்றால் ஒரு பிறவிலேயே நன்மை தீமை கணக்கிடப்பட்டு தண்டனையோ வெகுமதியோ கொடுப்பது தானே லாஜிக்கலாக இருக்கும்.

  அதேபோல் முதல் பிறவியிலேயே ஒருவர் ரொம்ப நல்லவராக இருந்தால் அவரை மறுபிறவி எடுக்கவைப்பதென்பது சரியா…?

  ஒரு பிறவியின் பலன் மறு பிறவியில் என்றால் சொர்க்கம் நரகம் எந்த பிறவிக்கு…!?

  பதில் ஏழாவது பிறவிக்கு என்று இருக்குமேயானால் அது ஏன் முதல் பிறவிக்கே அதாவது ஒரு பிற‌விக்கே இருக்க கூடாது.

  இந்த பிறவி எத்தனையாவது என்று யாராலும் சொல்ல முடியாது என்கின்ற நிலையில்…

  முதல் பிறவிலேயே ஒருவருக்கு நன்மை அல்லது தீமை ஏற்படுவது எதனால்..!?

  இதற்கு முதல் வரியில் சொன்னது தான் சரியாக லாஜிக்கலாக இருக்கும்.

  இது என் நம்பிக்கை.

 4. புதியவன் சொல்கிறார்:

  அறிவழகு – காஞ்சிப் பெரியவர் சொன்னதில் அர்த்தம் உண்டு, ஆனால் அவற்றை மஹான்’களே தொடர முடியாது.

  நாம் உட்கார்ந்திருக்கிறோம். புலி ஒருவனைத் துரத்திக்கொண்டு வருகிறது. அவன் நமக்கு இடப் பக்கமாக ஓடுகிறான். புலி நம்மிடம் அவன் எந்தப் பக்கம் ஓடினான் என்று கேட்கிறது. நாம் அவனைத் தப்புவிக்க பொய் சொன்னால், நம் கணக்கில் பொய் சொன்ன பாவம் ஏறும், புலியின் பசிக்குக் காரணமான பாவமும் உண்டு.. உண்மையைச் சொன்னால் மனிதனுக்குக் கெடுதி செய்த பாவம் உண்டு. தர்மம் சூட்சுமமானது. எந்தச் செயல்களுக்கும் நன்மை தீமை உண்டு. முழுவதும் நன்மை செய்பவர் என்பது அபூர்வத்திலும் அபூர்வம், அனேகமாக இல்லை.

  நன்மைக்கான விளைவையும் தீமைக்கான விளைவையும் அடுத்த ஜென்மத்தில் அவன் அடைகிறான். ஆனால், அந்தோ, அந்த ஜென்மத்திலும் புதிதாக நன்மை தீமைகளைச் செய்கிறான். இப்படி வாழ்க்கைச் சுழலில் மீண்டும் மீண்டும் அவன் சிக்கிக்கொண்டு நன்மை தீமைகளை அடைகிறான். நாம் சொல்லும் சுவர்க்கம், நரகம் இரண்டும் மனிதப் பிறப்பிலேயே அவன் அனுபவிக்க நேரிடுகிறது. ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறப்பெடுக்கும்’ என்பது கான்செப்ட்.

  ஆன்மா மெதுவாக முன்னேறி, முற்றிலும் பாவத்தைத் தொலைக்கும்போது அது மேன்மை நிலையை எய்துகிறது. இதற்குப் பலப் பல ஜென்மங்கள் தேவை.

 5. அறிவழகு சொல்கிறார்:

  நன்றி தூயவன்.

  என்னுடைய கேள்வி மிகவும் எளிமையானது.

  1. ஒரு மனிதன் முதன் முதலில் பிறவி எடுக்கும் போது அவனுக்கு நன்மை தீமை ஏற்படுவது எந்த கர்மத்தை கொண்டு.

  எந்த மனிதனும் முழுமையானவர் இல்லை. நன்மையும் தீமையும் செய்பவரே. அது தான் நியதி. அப்படி தான் மனிதன் படைக்க பட்டிருக்கிறான்.

  2. இந்த நியதியின் அடிப்படையில், அவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் நன்மை தீமை செய்பவனாக தான் இருப்பான். எனில், முடிவேது.

  இன்னும் துணை கேள்விகள் உண்டு. இந்த கேள்விகளுக்கு முதலில் ஒரு தெளிவு கிடைக்கட்டும். பார்க்கலாம்.

  • அறிவழகு சொல்கிறார்:

   யாரும் பதில் சொல்ல வரவில்லை.

   ஆகவே, ஒரு பிறவி தான் என்று ஊர்ஜிதமாகிறது.

   அந்த ஒரு பிறவிலேயே மனிதன் தான் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் அடைகிறான். இது தான் அறிவுடைமை என்று தீர்மானித்து கொள்கிறேன்.

 6. Mani சொல்கிறார்:

  ஒரே பிறவி மட்டும் தான் என்றால்,
  பிறக்கும்போதே ஒரு குழந்தை சகல செல்வங்களும் உடைய
  வசதியான உயர்குடும்பத்திலும், இன்னொருகுழந்தை பஞ்சை பராரியின்
  குடிசையில் ஐந்தாவதாகவோ, ஆறாவதாகவோ பிறந்து கஞ்சிக்கு கூட
  வழியில்லாமல் தெருவில் அலைகிறதே அது ஏன் ?
  இதற்கு உங்கள் ‘அறிவுடைமை’ சொல்லும் விளக்கம் என்னவோ ?

  • அறிவழகு சொல்கிறார்:

   சகோ;

   நீங்கள் தான் சொல்லுங்களேன் எந்த ‘கர்மா’ காரணம் என்று.

   நான் சொல்வேன் விதி என்று.

   • அறிவழகு சொல்கிறார்:

    என்னுடைய முந்தைய பின்னூட்டங்களில் இரண்டு கேள்வி கேட்டிருந்தேனே. அதற்கு பதில் சொல்லலாமே.

    என் ஐயப்பாட்டை நீக்கி வைத்த பெரும் புண்ணியம் கிடைக்கும்.

   • Mani சொல்கிறார்:

    அது தான் முதல் பிறவி என்றால்,
    மொத்தமே ஒரு பிறவி மட்டும் தான் என்றால் –
    அதற்கு “கர்மா” எப்படி, எங்கிருந்து வரும் ?

    சரி “விதி” என்றால் என்ன ?

    • அறிவழகு சொல்கிறார்:

     //அது தான் முதல் பிறவி என்றால்,
     மொத்தமே ஒரு பிறவி மட்டும் தான் என்றால் –
     அதற்கு “கர்மா” எப்படி, எங்கிருந்து வரும் ?//

     நான் கேட்டதை அப்படியே ஆமோதிக்கிறீர்.

     “கர்மா” எப்படி, எங்கிருந்து வரும்….!? முதல் பிறவியிலேயே.

     ஆக ஒரு பிறவி என்பது தான் ஏற்றுக் கொள்ளும் படி இருக்கு.

     “விதி” என்றால் என்ன ?

     இதை பற்றி அதிகம் விவாதிக்க படாது. இருந்தாலும் நான் அறிந்த வரையில் சொல்ல முயற்சிக்கிறேன்.

     இறைவனால் மனிதர்கள் அனைவரையும் படைப்பதற்கு முன்பே இன்னின்னாரக்கு இன்னின்ன என்று தீர்மானித்தவையே விதி என்று சொல்லலாம்.

     ஏற்கனவே தீர்மானித்து இருந்தால் சொர்க்கம் நரகம் ஏன்? என்றெல்லாம் விதண்டாவாதம் செய்பவர்கள் உண்டு. அதற்கெல்லாம் நான் போகவில்லை.

     விதியை பற்றி அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை. இறைவனை தவிர.

     சரி. பல பிறவிகளா ஒரு பிறவி தாமா? அதற்கு வருவோம்.

     நான் ஏற்கத்தக்க விளக்கம் கிடைக்கும் வரை ஒரு பிறவி தான் என்கின்ற நிலையிலேயே இருக்கிறேன். சரி தானே.

     • Ganpat சொல்கிறார்:

      நண்பர் அறிவழகு!..மிகவும் நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளீர்கள்.
      அடியேன் சிற்றறிவிற்கு எட்டியவரை இதற்கு பதில்கூற முயற்சிக்கிறேன்.
      ஒரு கேள்விக்கு பதில் என்பது ஒருவரின் அறிவாலும் அனுபவத்தாலும் உருவாவது.இந்த பிரபஞ்சத்தின் வயதை கணக்கில் கொண்டு அதை நம் அறிவு அனுபவத்துடன் ஒப்பிட்டால் இரண்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு என்று அறிவோம்.உதாரணத்திற்கு 1894 ஆம் ஆண்டு சிலர் ராமாயணத்தை பற்றி விவாதிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

      அப்பொழுது ஒருவர் “புஷ்பக விமானம் என்பது எப்படி சாத்தியம்?.மனிதர்களை ஏற்றிக்கொண்டு ஆகாயமார்க்கமாக பயணிப்பதா?இது நடக்குமா? ஒரு சிறிய பந்தே ஆகாயத்தில் விட்டெறிந்தால் கீழே விழுந்து விடும் போது ஒரு பெரிய இயந்திரம் எப்படி நிலையாக நிற்கும்?” என்றெல்லாம் கேட்டு, மற்றவர்கள் விடை அறியாமல் திகைத்திருக்கலாம்..ஆனால் சரியாக பத்தாண்டுகளுக்குப் பின்,
      ரைட் சகோதரர்கள் இதற்கான விடையை உலகிற்கு அளித்தனர்.

      நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே..
      ஆனால் பதிலுக்கு பொறுத்திருங்கள்.
      அது பத்தாண்டுகளோ,
      நூறு ஆண்டுகளோ அல்லது
      பல்லாயிரம் ஆண்டுகளோ?
      இறைவனே அறிவார்!

     • அறிவழகு சொல்கிறார்:

      நன்றி சகோ. கன்பத்.

      அதற்குள் நம் வாழ் நாள் முடிந்து விடும். இந்த நம்பிக்கையிலேயே ஒருவர் இறந்தால் அவர் முடிவு எப்படி இருக்கும்.

      ஊழியூழி காலமாக ஏழு பிறவி என்று இருந்து வருகிறது. ஒருவருக்குமா இந்த சிந்தனை வரவில்லை. அப்படி வந்திருக்கும் பட்சத்தில் இது வரை விளக்கம் கிடைக்காமலா இருக்கு?

 7. Mani சொல்கிறார்:

  // என்னுடைய முந்தைய பின்னூட்டங்களில் இரண்டு கேள்வி கேட்டிருந்தேனே. அதற்கு பதில் சொல்லலாமே.//

  எல்லாம் தெரிந்தவர் யார் இருக்கிறார்கள் இங்கே ?

 8. Mani சொல்கிறார்:

  //அந்த ஒரு பிறவிலேயே மனிதன் தான் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் அடைகிறான். இது தான் அறிவுடைமை என்று தீர்மானித்து கொள்கிறேன்.//

  இது தான் அறிவுடைமை என்று தீர்மானத்திற்கு வந்து விட்டேன் என்று
  நீங்கள் சொன்னது தான் என்னை கேள்வி கேட்க வைத்தது.
  நீங்கள் நினைப்பது போல், அவ்வளவு எளிதாக ஒரு கேள்வி-பதில் session-ல்
  முடிந்து விடக்கூடிய விஷயமா இது ?

  தேடுங்கள் நண்பரே; தொடர்ந்து தேடுங்கள்.

 9. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Scientifically,CAUSE&EFFECT theory holds good

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.