து.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – ? அதோடு நிற்குமா…?
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வரிசையாக தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

முதலில், தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் திருமதி பிரமீளா குருமூர்த்தி…

அடுத்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரிஜி….

இப்போது, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, கர்நாடகாவின் திரு.சூரப்பா…

இவர்கள் எல்லாருமே வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பின்னணிகள் நமக்கு சரியாகத் தெரியாது… எனவே, வீணாக அவர்கள் மீது பழி சுமத்துவது நியாயமில்லை…ஒருவேளை, அரசியல்வாதிகளின் செல்வாக்கையும், ஊடுருவலையும் – தாண்டி,
அவர்கள் நேர்மையாக செயல்பட்டால் – அது நமது அதிருஷ்டம்….!!!

இருந்தாலும், அவர்கள் தனியாக வருவார்களா…? தாங்கள் “வசதி” யாக
செயல்பட தங்களுக்கு துணையாக இன்னும் சிலரையும் “இறக்குமதி”
செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

———————————

ஆனால் –

துணைவேந்தர் பதவியை வகிப்பதற்கு பொருத்தமான நபர்களே தமிழகத்தில் இல்லையா…?

மத்திய பாஜக மறைமுகமாக தமிழ்நாட்டில் – கல்வியில் காவியை
புகுத்துகிறதா..?

தமிழர்கள் என்ன தன்மானம் இல்லாதவர்களா…?

கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை பெற்றுத்தர வக்கில்லாதவர்கள்,
துணைவேந்தரை புகுத்தி, தமிழர்களை சீண்டுகிறார்களா…?

– என்று, தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர்கள் அத்தனை பேரும் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்… சாடுகிறார்கள்… அறிக்கை விடுகிறார்கள்…

அப்புறம்…?

அப்புறமென்ன….? அவ்வளவு தான்….

எதிர்த்து, கண்டித்து – தமிழகத்தை ஆளும் கட்சி மத்திய பாஜகவுக்கு
அடிமையாகி விட்டது என்று அறிக்கை விடுவதோடு அவர்கள் கடமை
தீர்ந்து விட்டது தானே…. ?

ஆனால் நமக்கு ….?

நாம் இதை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த பல வருடங்களாக, இந்த து.வே. பதவியை தமிழக அரசியல் கட்சிகள், (அவ்வப்போது ஆண்ட கட்சிகள்…) பணம் காய்ச்சி மரமாகவே பயன்படுத்தி வந்தன… அவர்கள் தயவில், கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து அந்த இடத்திற்கு வந்தவர்கள், பல்கலைக்கழகங்களை பணத்தோட்டங்களாக மாற்றினார்கள்…. செழித்து வளர்ந்தார்கள்…

கொழுத்த அறுவடைகளை நிகழ்த்தினார்கள். தங்களை அங்கு அமர்த்தியவர்களுக்கும் “உரிய” விதத்தில் “காணிக்கைகள்” செலுத்தினார்கள்.

ஊரே நாறியது…இந்தியாவே காரித்துப்பியது… கோவையில் துணைவேந்தர் பதவியில் இருந்தவர், லஞ்ச குற்றச்சாட்டில் கையும் களவுமாக பிடிபட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டபோது….

அடுத்து, அண்ணா பல்கலையின் முன்னாள் து.வேந்தரும் தற்போது
கம்பி எண்ண போய்க்கொண்டிருக்கிறார்…

ஏற்கெனவே இருந்தவர்கள் மீதும், இப்போது இருப்பவர்களில் பலர் மீதும்
நிறைய குற்றச்சாட்டுகள்…

இப்படி வரிசையாக துணைவேந்தர்கள் லஞ்ச ஊழலில் சிக்கி சிறைக்கு போவது, அவர்களுக்கோ, அவர்களை தேர்ந்தெடுத்தவர்களுக்கோ அவமானமாக இல்லை. ஆனால் பொதுமக்களாகிய நாம் தான் வெட்கித் தலைகுனிய வேண்டி இருக்கிறது.

கல்வித்தரத்திற்கு உலகப்புகழ்பெற்றிருந்த தமிழகபல்கலைக்கழகங்கள்
இன்று எது எதற்கோ புகழ்பெறுகின்றன…

இந்த நிலையை பார்க்கும்போது – இன்னும் சில ஆண்டுகளுக்கு
தமிழகத்திலிருந்து எவரும் இந்த பதவியில் அமராதிருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. வெளிமாநிலத்துக்காரர்களுக்கு, உள்ளூர் நிலவரமும், பழக்கங்களும், புழக்கத்திற்கு வர, நெளிவு-சுளிவு புரிபட கொஞ்ச காலம் பிடிக்கும்… அதுவரையாவது நாம் நிம்மதியாக இருக்கலாமே என்று தோன்றுகிறது…

ஆனால் – வருபவர்கள் – சத்தியவந்தர்களா …? அவர்கள் பின்னணி நமக்கு சரியாகத் தெரியாது தான். ஆனாலும், அவர்களை தேர்ந்தெடுத்து இங்கே அனுப்பி இருப்பவர்களின் பின்னணி நமக்கு நன்றாகவே தெரியுமே….

து.வே. நியமனம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தபாஜக தலைவர்
ராஜ்பவன் சென்று வந்தது, காமிரா வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்ததே.
இது இன்னும் எத்தனை இறக்குமதிகளுக்கு வழி வகுக்குமோ…?

இவ்வளவு ஆண்டுகளாக, ஆளும் கட்சி விரும்புபவர்கள் தான் இந்த பதவியில் அமர்த்தப்படும் சூழ்நிலை இருந்தது. தற்போதைய – ஆளும் கட்சியின் பலவீனத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் மத்திய பாஜக – அந்த உரிமையை தன் வசம் எடுத்து / பிடுங்கிக் கொண்டது…!!!

எத்தனையோ புதிய புதிய மானங்கெட்ட காட்சிகள் தினம் தினம் அரங்கேறுகின்றன. அவற்றோடு இதையும் சேர்த்துக் கொள்வதை விட, நாம் வேறு என்ன செய்து விட முடியும்…?

சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில், கர்நாடக மக்களுக்கு,
தங்களை தேர்ந்தெடுத்தால், இது போல் இன்னும் எவ்வளவோ செய்ய
முடியும் என்று பாஜக தலைமை “ஆசை” காட்டுகிறது….!

அவர்கள் “ஆசை” நிராசையாக வேண்டுவோம்…!!! (நம்மால், வேறென்ன
செய்ய முடியும்…..???)

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to து.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – ? அதோடு நிற்குமா…?

 1. Pingback: து.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – ? அதோடு நிற்குமா…? – TamilBlogs

 2. BVS சொல்கிறார்:

  மாநில அரசு பெயருக்கே அதிமுக அரசு.
  அதிகாரம் பூராவும் பாஜகவிடம் தான்.
  எனவே காவி நுழைவதை தடுக்க முடியாது.

 3. N S Raman சொல்கிறார்:

  Tamil Nadu political leaders going to London / Singapore or importing doctors from abroad. The same way their lawyers also from North India. Even though they are spending their own money !!!! It is clear that for their personal welfare they need a best resources.

  Why they are not allowing best resources for the benefit of students from public money. How we treated nobal laurents like shri. CV Raman and he finally settled in Mysore is a known history. In the recent event example is Mrs Vasanthi Devi.

  As you rightly pointed in the recent past VC post used for ” vasool channel”. Quality of Engineering education in Tamil Nadu degraded by political appointees. It is the same case or even worst in law colleges. Most of the law colleges are working as a training ground for politician cum rowdies.

 4. வடிவேலு சொல்கிறார்:

  வெளிமாநில விசி லிஸ்ட்டில் எப்படி பிரமிளா குருமூர்த்தி இடம்பிடித்தார் ? அவரது பெற்றோரில் ஒருவர் திருநெல்வேலி, அவர் படித்து வளர்ந்தது சென்னையில். ஆக அவர் தமிழர்தான்.

  பிறமாநிலத்தவர்கள் இப்படி விசி ஆவது தவறா என தெரியவில்லை. ………….மோடிஜியின் மாநிலத்திலேயே ஒரு தமிழர் – பெயர் மகேசன்- ஒரு பல்கலையில் விசியாக இருக்கிறார்.

  இதைவிட இந்த பதவிக்கு எந்த வித‍த்தில் தகுதியில்லாதவர், அவரைவிட தகுதிபெற்ற ஒருவரை கவர்னர் நிராகரித்தாரா என்பது பற்றி எல்லாம் யாரும் விவாதம் செய்வதாக தெரியவில்லை.

  முன்பு வெளிநாட்டுக்கார‍ர்கள் நமது கல்லூரிகளில் பாடம் நடத்தியது உண்டு. ஆனால் நிலைமை இப்படியாகி விட்டது.

 5. புதியவன் சொல்கிறார்:

  இதில் எனக்கு இரு வேறு கருத்துகள் இருக்கு. து.வே ஊழல்களுக்கு அரசும் அரசியல்வாதிகளும் முழுமுதற் காரணம். தன் சொந்த வீட்டிற்கு, மகன் காசு வாங்கி ஆளை வேலைக்கு வைத்தால், வேலைக்காரன் திருடனாய்த்தான் நடந்துகொள்வான். இப்போது நியமிக்கப்பட்டவர்கள் எவ்வளவு திறமை இருப்பினும், இது பொலிடிகல் நியமனம் என்பதால் நிச்சயமாக தமிழ்நாட்டில் படித்த competent personஐ மட்டும்தான் நியமனம் செய்யவேண்டும். இதில் குஜராத் அது இது என்று உதாரணம் காட்டுவது தவறு. பாஜக செய்வது encroach. இதைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.