ஆதர்ச உலகம்……!!!


எப்போதாவது தெருக்களில், கண்பார்வையற்ற மனிதர்கள்
யாராவது, கையில் மெலிதான ஒரு கோலின் துணையுடன்,
தெருவை குறுக்கே கடந்து செல்வதற்காக காத்திருப்பதை
பார்த்திருக்கிறீர்களா…?

..

..

நீங்கள் எந்த வேலையை முன்னிட்டு சென்று கொண்டிருந்தாலும் கூட,
ஒன்றிரண்டு நிமிடங்கள் அங்கே நின்று, அவர்கள் கையை பிடித்து,
மெதுவாக அழைத்துச்சென்று அடுத்த பக்கத்தில் கொண்டு சேர்த்து
விட்டு, ஒருக்கணம் அங்கேயே நின்றீர்களானால், உங்கள் மனதில்
ஒரு பெருமிதமும், ஆனந்தமும் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்…!

பலவீனமான மனிதர்களுக்கு உதவி செய்வது, மனதில் அத்தனை
சந்தோஷத்தை உடனடியாக (instant happiness…) நமக்கு ஏற்படுத்துகிறது.

முன்பு, 25-30 ஆண்டுகளுக்கு முன்னர், எங்கள் நண்பர்கள் குழு,
அபூர்வமாக செய்து கொண்டிருந்த ஒரு விஷயம், இப்போது நிறைய குடும்பங்களில் மிக சகஜமாக, வழக்கமாக செய்யப்படுவதை பார்க்கிறேன்…..

இல்லங்களில், குழந்தைகளின் பிறந்த நாள்,
தம்பதிகளின் திருமண நாள்
பெற்றோர்களின் நினைவு தினம் ஆகியவற்றின்போது,
அக்கம்-பக்கத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று
அங்கு வாழும் அனைவருக்கும், இனிப்புகளும், தின்பண்டங்களும்,
உணவும் கொடுக்கின்ற வழக்கம் இப்போது நிறைய குடும்பங்களில் பரவி வருவது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த பழக்கம்
மேன்மேலும் பரவ வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்னால், ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஒரு
நண்பரின் மூலம் எனக்கு இந்த பழக்கம் ஏற்பட்டது….
இயன்றபோதெல்லாம், பார்வையற்றோர் உறைவிடத்திற்கு சென்று,
அங்கே தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு பத்திரிகை, புத்தகங்கள் படித்துக்
காண்பித்து, விளக்கங்கள் சொன்னது எல்லாம் நினைவிற்கு வருகிறது… .

பொதுவாக, மற்ற மாற்றுத்திறனாளிகளை விட,
பார்வையற்றோருக்கு சற்று தன்னம்பிக்கையும், சுயகௌரவமும்
அதிகமாக இருப்பதை பார்க்கலாம்… அவர்கள், லேசில் பிறரிடமிருந்து
உதவி கோர மாட்டார்கள்… முடிந்தவரை தங்கள் தேவையை தாங்களே
பூர்த்தி செய்துகொள்ளத்தான் முயல்வார்கள்….

இத்தகைய மனிதர்களுக்கு –
உதவி செய்வது தான், நம்மை முழுமையாகப் படைத்த இறைவனுக்கு
நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்று எனக்குத் தோன்றுகிறது…..

வீட்டில் நமது குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை –
இயலாதவர்களிடம் இரக்கம், கருணை காட்டுவது, அவர்களுக்கு
உதவி செய்வது – ஆகிய பண்புகளை நாம் தான் கற்றுக் கொடுக்க
வேண்டும்….

அந்தக்காலம் போல் இதையெல்லாம் பள்ளி ஆசிரியர்கள்
பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விடக்கூடாது…

அண்மையில் மனதிற்கு நிறைவான ஒரு வீடியோவை பார்த்தேன்….
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அதனை கீழே பதிகிறேன்.
உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை அவசியம் காட்டுங்கள்….!
இது போன்ற மற்ற நிகழ்வுகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்…

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஆதர்ச உலகம்……!!!

  1. Sridhar சொல்கிறார்:

    thanks sir for sharing

  2. Pingback: ஆதர்ச உலகம்……!!! – TamilBlogs

  3. D. Chandramouli சொல்கிறார்:

    Very touching.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.