எழுத்தாளர் சுஜாதாவின் ” அப்பா ” ….!!!


அண்மையில் சுஜாதா அவர்கள் தன் தந்தையைப்பற்றிய நினைவுகளைக்
கூறும், “அப்பா – அன்புள்ள அப்பா” என்கிற தலைப்பிலான கட்டுரையை
பார்க்க நேர்ந்தது… மிகவும் நெகிழ்வான நினைவுகள்…

அதையும் சுஜாதா சொல்லும் பாணி, அதற்கு தனிச் சிறப்பை தருகிறது….ஏற்கெனவே இந்த கட்டுரையை நான் படித்திருக்கிறேன்….

இருந்தாலும், இப்போது, சுலபமாக எடுத்துப் போடக்கூடிய இடத்தில்
பார்த்ததால், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி
கீழே பதிகிறேன். ( சுஜாதா ரசிகர்கள் என்பதற்காக காப்பிரைட்
உரிமையாளர்கள் நம்மை மன்னித்து விடுவார்கள் என்கிற
நம்பிக்கையில்… !!! )

—————————————————————-


செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா
படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.

“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு
வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை
வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப
இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்”
என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று
அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி
எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன்
முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி
சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய
விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான்
தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன
என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து
வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை
இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா
போவீர்கள்?”

“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு
என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி
இருக்கும். அம்மாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது.
அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக
இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ”
என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று
தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம்
வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து
இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண்
மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு
சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது.
சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக்
கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா
அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான்
வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம்
உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும்
குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி
மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும்
அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக்
கொண்டு சென்றவர்?

இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர்
“நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க”..
இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு
விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட்
பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” .

இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு
காஙகிரசில் சேருகிறேன் என்று காணாமல் போனவர் இவரா? “ஐ வாஸ்
கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும்
பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான்
ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப்
பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள்
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும்
நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப்
பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட்
ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல
நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை.

கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன்.
கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள்
ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச்
செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல்
படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா?
கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார்.
வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant
it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது.
இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடண்ட் பண்டில் கடன் வாங்கி
பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல்
கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும்
மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப
ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல்
மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி
மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ
சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர
வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம்
சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும்
அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான்
முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை
கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ்
வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு
சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது.

கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.
“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர
நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று
ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து
போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு
“என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும்
அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால்
நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக்
கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில்
எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி
காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக
எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம்.

இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி
வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார்
கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம்
செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக்
கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம்
இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா
மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு
முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when
death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின்
தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த
“ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு
குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல்
தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும்
அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள்
தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும்
சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” –
இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில
ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு
குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா
பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா
தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து
காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன்
வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி
வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை
கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர்
சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும்
இருக்கிறது!

———————————————————————————

என் குறிப்பு –

இதைப்படிக்கும்போது, என் அப்பாவின் நினைவு வந்தாலும் கூட,
அதை சட்டென்று தாண்டி –

“என் நினைவு” தான் எனக்கு வந்தது.
நெருங்கிய, பழைய நண்பர்களை, அபூர்வமாக நேரில்பார்க்கும்போது –
அவர்கள் கேட்கும் முதல் வார்த்தையே ” எப்படிடா இன்னும் …??? “”
தான்….!

அவர்களுக்கு தெரியும்…என் பழைய கதைகள் எல்லாம்.

இப்போது ஓடுவது “போனஸ் கணக்கில்”… முதல் ஹார்ட் அட்டாக்
வந்து, 17 ஆண்டுகளைத் தாண்டியும் இன்னமும் தாக்குப் பிடித்தால்…?

பதிலுக்கு நான் சொல்வது..” pack பண்ணி வெச்சுட்டு, ரெடியா காத்துக்
கிட்டிருக்கேன்… Flight வந்தா கிளம்ப வேண்டியது தான்…”
ஆமாம்.. I am always ready to FLY…!!!

சுவாமி சின்மயானந்தா அவர்கள் ஒருமுறை சொன்ன செய்தி
மனதில் ஆழப் பதிந்து விட்டது தான் …
நான் எந்தவித பயமுமின்றி இருக்க காரணம்…..

” நாம் இருக்கும் வரை சாவு வரப்போவதில்லை…
சாவு வந்து விட்டால் – நாம் இருக்கப்போவதில்லை…
பின், ஏன் அசட்டுத்தனமாக அந்த சாவை நினைத்து அஞ்ச வேண்டும்…? ”

ஒரே ஒரு பிரார்த்தனை தான் – கடைசி வரை உருப்படியாக
எதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்….
“சட்டென்று பறந்து விட வேண்டும்…”

————————-

ஒரே ஒரு ஆசை தான்… அதைமட்டும் விட முடியவில்லை…!
கண்கள் தானம் செய்யப்பட வேண்டும்…
காவிரிக்கரையில் எரிக்கப்பட வேண்டும்…!

இது என் கையில் இல்லை….
இன்னும் ஒரு ஆண்டு கழித்து, இங்கே சென்னையில், என் தேவைகள்
முடிந்து விடும்….

பிறகு, மீண்டும் காவிரிக்கரைக்கே, திருச்சிக்கே – சென்று settle ஆகி விடலாமென்று உத்தேசம்…

அதுவரை Flight வராமல் இருந்தால்… 🙂 🙂 🙂

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to எழுத்தாளர் சுஜாதாவின் ” அப்பா ” ….!!!

 1. Pingback: எழுத்தாளர் சுஜாதாவின் ” அப்பா ” ….!!! – TamilBlogs

 2. paiya சொல்கிறார்:

  for sages , they only decide their end. So all your wishes will be fulfilled. My prayer to lord almighty for your long life.

 3. Ram சொல்கிறார்:

  கே.எம்.சார்.

  நான் வெகு நீண்ட நாட்களாக விமரிசனம் தளத்தை படித்து வருகிறேன்.
  சமீபகாலமாக தான் பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன்.
  அருமையான எழுத்து நடை உங்களுடையது. சமயத்தில் “சோ” வை
  ஞாபகப்படுத்துகிறீர்கள். உங்கள் எழுத்தில் பல சமயங்களில் கோபம்
  கொந்தளிக்கிறது. ஆனால் சட்டென்று கூடவே நகைச்சுவையும் வருகிறது.
  நீங்கள் பத்திரிகைத்துறையில் முன்பே எழுத ஆரம்பித்திருந்தால்,
  மிகுந்த புகழுடன், பல்லாயிரம் வாசகர்களையும் பெற்றிருப்பீர்கள்.
  பழுத்த அனுபவமும், நல்ல பக்குவமும் பெற்றுள்ள உங்களுக்கு நான் என்ன
  புதிதாக சொல்லி விட முடியும். தனக்குப் பிடித்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்கள். நீங்கள் செய்யும் இந்த பணி
  உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.
  யாரையாவது ஆதரித்தாலும் சரி, எதிர்த்து எழுதினாலும் சரி, சுயநலம்
  இல்லாமல் சமூகநலத்தைத் தானே முன்வைத்து கருத்து சொல்லி வருகிறீர்கள்.
  பாஜகவினரைத்தவிர, மற்ற அத்தனை வாசகர்களுக்கும் உங்களை பிடிக்கும்.
  பாஜகவினர் கூட மனதுக்குள்ளே உங்களை நிச்சயம் மதித்து பாராட்டுவார்கள்.
  அரசியல் விமரிசனத்தை போலவே, நீங்கள் அவ்வப்போது பதிவு
  செய்யும் ஆன்மிகம், நகைச்சுவை, சுயமுன்னேற்ற செய்திகளும் மிகவும்
  சுவாரஸ்யமாக இருக்கின்றன.
  தொடருங்கள் சார் உங்கள் பணியை. ஆயிரக்கணக்கான வாசக நண்பர்கள்
  உங்களை விரும்புகிறார்கள் என்கிற நிலையே உங்களுக்கு நல்ல உடல் வலுவை
  கொடுக்கும். உங்களுக்கு துணையாக எப்போதும் கூடவே இருப்பான் ‘அவன்’

  நன்றியுடன்,
  ராம்

 4. அறிவழகு சொல்கிறார்:

  மரணம்.

  பிறந்த அனைத்து உயிரினங்களும் அடையப்போவது. அதை அனைவரும் அனுபவத்தில் கண்டும் ஏன் மர‌ணம் கண்டு பயம்.

  யார் அதை கண்டு பயப்படுவா…?

  பாவிகளும் இந்த உலகத்தை மோகித்தவர்களும்.

  மரணத்தை வேண்ட கூடாது. ஆனால், அதற்கு தயாராயிருப்பது…! பாக்யம்.

  எல்லோருக்கும் அப்படி ஒரு மன நிலை கிட்டுவதில்லை, பாவிகளை தவிர.

  சரியான நேரான பாதையில் செல்பவர்களே வெற்றி பெற்றராவர்.

  எது நேரான வழி…?

  தேடுங்கள். குறைந்த பட்சம் சுயபரிசோதனை செய்வோம்.

  நாம் எந்த வழியில் இருக்கின்றோம் என்று.

 5. புதியவன் சொல்கிறார்:

  சுஜாதா எழுதியதை வெகு முன்னமே படித்த ஞாபகம் இருக்கு. திரும்பவும் படிப்பதற்கும் இன்’டெரெஸ்டிங்காக இருக்கு.

  இறப்பைப் பற்றிய சிந்தனை சரிதான். இருந்தாலும் ஒரு குறிக்கோளுடன் இருக்கும்போது ஓரளவு அதை அச்சீவ் செய்யாமல் காலன் நம்மை நெருங்குவதில்லை (குறிக்கோள் நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில்). உங்களுக்கு வாழ்த்துகள்.

  • அறிவழகு சொல்கிறார்:

   // இருந்தாலும் ஒரு குறிக்கோளுடன் இருக்கும்போது ஓரளவு அதை அச்சீவ் செய்யாமல் காலன் நம்மை நெருங்குவதில்லை (குறிக்கோள் நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில்). //

   இதற்கு என்ன உத்தரவாதம்? யார் கொடுத்தா?

   ஒன்று அடுத்து மற்றொன்று என்று ஒருவர் நேர்மையான குறிக்கோளாக வைத்துக்கொண்டிருந்தால் அவர் இறப்பே அடையாத நிலை ஏற்படுமே. அப்படி யாராவது இருக்கிறார்களா இருந்திருக்கிறாகளா?

   தன் சொந்த கருத்துகளை சித்தாந்தமாக சொல்லாதீர்கள்.

   • Surya சொல்கிறார்:

    புதியவன் கூறியது அவர் சொந்தக் கருத்தாகவே இருக்கட்டுமே! அப்படி என்ன அவர் தவராகக் கூறி விட்டார்? அவர் சித்தாந்தம் என்று கூறினாரா? நீங்களாக அப்படி ஒரு அர்த்தம் (அனர்த்தம்) செய்து கொண்டு ஏன் அவர் மேல் பாய்கிறீர்கள்?

    நான் காவேரிமைந்தன் ஐயாவின் வெகு நாள் வாசகன். அவருடைய கருத்துக்களுடன் 100% ஒத்துப் போகாமல் இருந்தாலும் அவருடைய கருத்துக்களை அவர் எழுதுவதில் அவர் 100% சின்ஸியர் என்று உறுதியாக நம்புகின்றவன்.

    ஆனால் இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் பலர் அந்த மாதிரி இல்லை. புதியவன் அவர்களை தாங்கள் அர்த்தமில்லாமல் “target ” செய்து “கிரிட்டிசைஸ்” செய்வது இது முதல் முறை அல்ல. புதியவன் கௌரவமான முறையில் தன் வாதத்தை வைக்கிறார். அவர் காட்டும் டீசன்ஸியில் பாதியாவது உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    நன்றி

    • அறிவழகு சொல்கிறார்:

     சரி சூர்யா அவர்களே,

     //இதற்கு என்ன உத்தரவாதம்? யார் கொடுத்தா?

     ஒன்று அடுத்து மற்றொன்று என்று ஒருவர் நேர்மையான குறிக்கோளாக வைத்துக்கொண்டிருந்தால் அவர் இறப்பே அடையாத நிலை ஏற்படுமே. அப்படி யாராவது இருக்கிறார்களா இருந்திருக்கிறாகளா?//

     என்னுடைய பின்னூட்டத்தில் கேட்ட இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தருகிறீர்களா.

     // ஒரு குறிக்கோளுடன் இருக்கும்போது ஓரளவு அதை அச்சீவ் செய்யாமல் காலன் நம்மை நெருங்குவதில்லை (குறிக்கோள் நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில்). //

     இதை பொட்டாம் பொதுவாகவா சொல்லியுள்ளார்.

     “காலன் நம்மை நெருங்குவதில்லை” என்று தீர்மானமாக தானே சொல்லியிருக்கிறார். அதை நிரூபிக்க வேணாமா…?

     சரி அவர் தான் பதில் தரவில்லை.

     ஐயா ஞானவான் அவர்களே!

     தாங்களாவது பதில் தருகிறீர்களா…?

     பதில் இல்லை என்றால் காலன் மீது பொய்யுறைத்த குற்றம் அவர் மீதும் அதற்கு பரிந்து பேசிய குற்றம் தங்கள் மீதும் வராதா…?

     மேலும், இன்னொரு அவசியமான கேள்வி கேட்க தோன்றுகிறது. அது,

     எத்தனையோ ஆகச்சிறந்த நல்லவர்கள் உயரிய குறிக்கோள்களை லட்சியமாக கொண்ட பெரியார்கள் அவர்களின் அனைத்து லட்சியங்களும் அவர்கள் வாழ் நாளில் நிறைவேறாமலே மறைந்துள்ளார்களே. இதற்கு நீங்களோ புதியவன் அவர்களோ என்ன சொல்ல போகிறீர்கள்.

     போறபோக்கில் சும்மா எதையாவது சொல்லி போகும் போக்கு சரியா…!?

     • புதியவன் சொல்கிறார்:

      ஒரு நல்ல காரியத்தை முன்னிட்டு அதற்குரிய வேலை பார்த்துக்கொண்டிர்க்கும்போது சட் என்று மரணம் சம்பவிப்பதில்லை. அந்தக் காரியம் முடிவடையணும், அல்லது அதை ஏற்று நடத்த இன்னொருவர் தயாராகணும். இதெல்லாம் என் சொந்தக் கருத்தல்ல, பல சம்பவங்களைப் பற்றி பலர் எழுதியதை வைத்துச் சொன்னேன்.

      இதில் விதண்டாவாதத்துக்கு இடமில்லை.

     • அறிவழகு சொல்கிறார்:

      ஆக, காலனை இழுத்து நீங்கள் சொன்னதற்கும் அதை ஒட்டிய என் கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இல்லை. யாரோ எதுவோ சொன்னது தான் ஆதாரம்.

      சொல்லுங்கள் இப்போது யார் விதண்டாவாதம் செய்பவர் என்று.

 6. shiva சொல்கிறார்:

  அனாயாஸேன மரணம் வினா தைத்யேன
  ஜீவனம் | தேஹிமே க்ருபயா சம்போ த்வயி
  பக்திம் அசஞ்சலாம்||
  இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்

 7. அறிவழகு சொல்கிறார்:

  /// அனாயாஸேன மரணம் வினா தைத்யேன
  ஜீவனம் | தேஹிமே க்ருபயா சம்போ த்வயி
  பக்திம் அசஞ்சலாம்||
  இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ///

  இது எனக்கான பின்னூட்டமாக இருந்தால்…

  சாரி, எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. நீங்களே பொருளை சொல்லிவிடுங்கள்.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கிட்டத்தட்ட இன்று முழுவதும் பயணத்தில் இருந்தேன்.
  இப்போது தான் பின்னூட்டங்களை பார்க்க முடிந்தது ( இரவு 12 மணி…!!! )

  தங்கள் எண்ணங்களைக்கூறிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

  Shiva – தமிழ் அர்த்தத்தையும் சொல்லி விடுங்களேன்… 🙂 🙂

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. புதியவன் சொல்கிறார்:

  அநாயாசேன மரணம்
  விநா தைன்யேன ஜீவனம்
  தேஹிமே க்ருபையா சம்போ
  த்வயி பக்திம் அசஞ்சலாம்

  அர்த்தம் :

  உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா

  இது நெட்டில் இருந்து எடுத்தது. பக்திம் அசஞ்சலாம் – சஞ்சலமில்லாத விசுவாசமான பக்தி என்று தோன்றுகிறது. ‘அநாயாசேன மரணம்’ என்பதுதான் எல்லோருடைய ப்ரார்த்தனையாக இருக்க முடியும். ‘சட்’ என்று மரணம் வரணும், எப்படா இந்த ஆள் போகப்போறான்னு கூட இருப்பவர்கள் நினைக்கக்கூடாது, அவரே எப்போதுதான் உயிர் போகும் என்று தன் உடல் உபாதைகளால் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. அநாயசமா மரணம் சம்பவிக்கணும்.

 10. அறிவழகு சொல்கிறார்:

  சும்மா அலைந்துகொண்டிருக்கும் போது எழுத்தாளர் சமஸ் அவர்கள் திரு ஜெயகாந்தன் அவர்களிடம் எடுத்த பேட்டி கண்ணில் பட்டது. அதில் ஒரு கேள்விக்கு பதில்,
  —-
  • இளமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் முதுமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா? ஆஸ்பத்திரியில் உயிர்ப் போராட்டத்தை எதிர்கொண்டபோது மரணத்தை எப்படிப் பார்த்தீர்கள்?

  அந்த நினைப்பே வரவில்லை. ஏதோ ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறோம், மருந்து மாத்திரை கொடுக்கிறார்கள், உடம்பு சரியானதும் வீட்டுக்குப் போய்விடுவோம் என்று நினைத்தேன். அதேபோல, உடம்பு சரியானதும் வீட்டுக்கு வந்துவிட்டேன். மரணத்தின் மீது எந்தப் பயமும் இல்லை.
  —-

  இது ஒரு கொடுப்பினை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s