“ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குஷ்வந்த் சிங் -ஐ நன்கு அறிவர். பல விஷயங்க’ளுக்கு புகழ் பெற்றவர்…

வக்கீல் ….ஜர்னலிஸ்ட், அரசியல்வாதி, நாவலாசிரியர் ….என்று பல துறைகள்… பெண் பித்தர்., மதுப்பிரியர்… என்கிற வெளிப்படையான அடையாளங்கள்… எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்…

அவர் உடல் நிலை “இடம் கொடுத்த காலம்” வரை “சகலத்தையும்” அனுபவித்தவர்…!!! ஆனால் எதையும் மறைத்ததில்லை….தன் “அனுபவங்களை” ப்பற்றி வெளிப்படையாக பேசியவர் அவர்….!!! 99 வயது வரை வாழ்ந்து
2014-ல் மறைந்தவர்…

குஷ்வந்த் சிங் பற்றி நன்கு அறிந்தவர்கள் – இந்த இடுகையை படித்த பிறகு வியந்து போவார்கள். அவரது இயல்புக்கு முற்றிலும் மாறான இந்த – குஷ்வந்த் சிங் டிப்ஸை படித்தவுடன் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவார்கள்.

உண்மையிலேயே இந்த ‘டிப்ஸ்’ குஷ்வந்த் சிங் – தந்திருப்பது தான்… ஆனால், இவற்றை நிச்சயம் யாரும் அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்க முடியாதது….!!!

———————-

சந்தோஷமாக வாழ்வது – சந்தோஷமாக சாவது… எப்படி…???

1) முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது எப்போதும் உடல்நலத்திற்கு தான்…. நல்ல உடல்நலம் இல்லையேல், வேறு எது இருந்தும் பயனில்லை… மிகச்சிறிய நோய் கூட, உங்கள் மகிழ்ச்சியை கெடுத்து விடும்…!

2) ஒரு கணிசமான அளவிலான வங்கிச் சேமிப்பு… அது கோடிக்கணக்கில் இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை… உங்கள் சாதாரண தேவைகளை, சிரமமின்றி நிறைவேற்றிக்கொள்ள போதுமானதாக இருக்க வேண்டும்… அவ்வப்போது, திரைப்படங்கள், விழாக்கள் என்று சில கேளிக்கைகளுக்காகவும், குறிப்பிட்ட இடைவெளிகளில், மனதிற்கு பிடித்த ஊர்களுக்கு / இடங்களுக்கு சுற்றுலா சென்று வரவும் அது போதுமானதாக இருக்க வேண்டும்…. மற்றவரிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதோ, கடன் வாங்கும் நிலையில் இருப்பதோ – கொடுமை.

3) மூன்றாவதாக – சொந்தமாக ஒரு வீடு… ரொம்ப பெரியதாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. வீட்டைச்சுற்றி, சிறிய தோட்டம்… உங்களுக்கு பிடித்த பூச்செடிகள், மரங்களை நீங்களே நட்டு, தண்ணீர் விட்டு – வளர்க்கக்கூடிய ஆனந்தம் உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்… அந்த மரம், செடிகளுடன் உங்களுக்கு சொந்தம் உண்டாகக்கூடிய அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) நான்காவதாக – உங்கள் மனதிற்கு பிடித்தமானவராகவும், உங்களை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவராகவும் ஒரு நிரந்தரத் துணை….அது மனைவியாகவோ( அல்லது கணவராகவோ), பெண் நண்பராகவோ, ஆண் நண்பராகவோ இருக்கலாம்….சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை போட்டுக் கொள்ளாமல், விட்டுக்கொடுத்து வாழ தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

5) உங்களை விட, பணத்திலோ, புகழிலோ, வசதியிலோ – சிறந்தவர்களைக்கண்டு பொறாமைப்படுவதை சுத்தமாக விட்டு விட வேண்டும். மற்றவர்களோடு, நம்மை, நம் நிலையை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது – நிம்மதியை குலைத்து விடும்.

6) அடுத்து – அடுத்தவர்களைப்பற்றி, வீண் வம்பு பேசுபவர்களை அடியோடு தவிர்த்து விடுங்கள்… இத்தகையோருடன் நட்பு வைத்திருப்பது – எப்போதும் உங்களை தேவையின்றி சோர்வடையச் செய்து விடும்.

7) ஏழாவதாக – உங்களை எப்போதும் எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்… தோட்டம் போடுதல், எழுதுவது, படிப்பது, மனதிற்கு பிடித்த பாடல்களை ரசிப்பது – போன்ற விதங்களில்.

சும்மா கிடைக்கும் மது விருந்துகளில் கலந்துகொள்வதற்காகவும், பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும், க்ளப்-புகளுக்கு போவது உபயோகமில்லாத வேலை… எப்போதும், எந்த விதத்திலாவது உங்களுக்கு பயனுள்ள விதங்களிலேயே செயல்படுங்கள்…

8) எட்டாவதாக – ஒவ்வொரு நாளும், காலையிலும், மாலையிலும் ஒரு இருபது நிமிடங்களை தியானத்திற்காகவும், சுயபரிசோதனைக்காகவும் ஒதுக்குங்கள்… காலையில் 10 நிமிடங்களை எதைப்பற்றியும் யோசிக்காமல், மனதை சலனமின்றி
வைத்துக் கொள்ளும் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

அடுத்து, அன்றைய தினம் நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்களை தீர்மானித்து, அதைப்பற்றி யோசியுங்கள்…

மாலையில், 5 நிமிடங்கள் சலனமின்றி அமைதியாக இருக்கவும். 10 நிமிடங்களை நீங்கள் செய்ய நினைத்தவையும், செய்து முடித்தவை பற்றியும், அடுத்து இனி செய்ய வேண்டியவை பற்றியும் யோசியுங்கள்…

9) எந்த விஷயத்திற்காகவும் கோபப்படுவதை விட்டு விடுங்கள்… சட்டென்று உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கப் பழகுங்கள்… உங்களிடம் யாராவது பழிவாங்கும் உணர்வுடன் செயல்பட்டாலும் கூட, நீங்கள் அதை மறந்து விட்டு,
அடுத்த நிகழ்வைப்பற்றி யோசியுங்கள்…

10) கடைசியாக – உங்கள் இறுதிப்பயணத்தை மேற்கொள்ள நேரிடும்போது –
யாரைப்பற்றியும்,
எதைப்பற்றியும் –
எந்தவித வருத்தமும் இன்றி,
அமைதியாக பயணப்படுவதற்கு தயாராக – உங்களை நீங்களே பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்…

————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”

 1. paamaran சொல்கிறார்:

  அய்யா … ! இந்த — இந்துவில் வந்த // குஷ்வந்த் சிங் 10 // என்பதையும் http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-10/article6847685.ece

  சேர்த்துக்கொண்டால் — தற்போதைய தலைமுறைக்கு ஓரளவு அவரைப்பற்றிய ” அவுட் லைன் ” கிடைக்குமல்லவா .. ! அந்த காலத்தில் “குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் ” என்பது மிகவும் அதிகமாக பேசப்பட்ட — ரசிக்கப்பட்ட ஒன்று — இந்த பெயரில் ஏகப்பட்ட புத்தகங்கள் தமிழிலும் வெளிவந்து கிச்சு – கிச்சு மூட்டியவை — குமுதம் ” அரசு கேள்வி -பதிலில் ” சர்தார்ஜி ஜோக்ஸ் விரும்பி கேட்கப்பட்ட ஒன்று .. !

  அவர் தன்னுடைய புத்தகத்தில் கூறும் ஒரு கருத்து : // எனது வீட்டின் படிப்பறையில் இந்திரா, அன்னை தெரசாவின் படங்களைத் தான் வைத்துள்ளேன். இவர்கள் தான் என்னை மிகவும் கவர்ந்த இரு மனிதர்கள். அதே போல காந்தியையும் நான் அதீதமாக நேசிக்கிறேன். எனக்கு ஏதாவது குழப்பமான நிலைமை வந்தால், இந்த நேரத்தில் காந்தி என்ன முடிவெடுப்பார் என்று கற்பனை செய்து பார்த்து அந்த முடிவையே எடுக்கிறேன். // என்று தனது ” Absolute Khushwant: The Low Down on Life, Death and Most Things in-between” புத்தகத்தில் எழுதியுள்ளார் — ஒரு முறையேனும் இந்த புத்தகத்தை வாசித்தால் அன்றைய இந்தியாவின் நிலை — அரசியல் – அரசியல்வாதிகள் – தலைவர்களைப்பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம் — மஹா தைரியசாலி …!!!

 2. Pingback: “ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்” – TamilBlogs

 3. Ram சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது போல், இவை குஷ்வந்த் சிங்கிடமிருந்து வருவது
  தான் அதிசயம். என்ன இருந்தாலும் அனுபவம் பேசுகிறது.
  பல விஷயங்களையும் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

 4. அறிவழகு சொல்கிறார்:

  //10) கடைசியாக – உங்கள் இறுதிப்பயணத்தை மேற்கொள்ள நேரிடும்போது –
  யாரைப்பற்றியும்,
  எதைப்பற்றியும் –
  எந்தவித வருத்தமும் இன்றி,
  அமைதியாக பயணப்படுவதற்கு தயாராக – உங்களை நீங்களே பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்…//

  இந்த பத்தாவது தான் முதலில் நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

  இறுதி பயணத்தை அதிகம் நாம் நினைவு கூர்ந்தால்…

  எல்லா விதமான பாவங்களை விட்டும் மற்றவர்களிடம் முறையாக நடந்து கொள்ளவும் யாருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணம் கூட இல்லாமலும் வாழ அந்த எண்ணம் நம்மை வழி நடத்தும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.