ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்…திருச்சி அருகே, காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது…

பல ஆண்டுகளுக்கு முன்னர், திருச்சியில் பணியாற்றி வந்தபோது, சில தடவைகள் நான் இங்கு சென்றிருக்கிறேன்…..அற்புதமான சூழல், மனதிற்கு நிறைவான, மகிழ்ச்சியான அனுபவம்…! ஒரு தடவை நான்
கண்ட ஒரு இனிமையான காட்சி இன்னமும் என் நெஞ்சில் நீங்காத நினைவாக இருக்கிறது. அதிகாலையிலேயே
சென்றிருந்தேன்…. ஒரு பெரிய கிணறு.. காவிரிக்கு அருகிலேயே இருந்தபடியால், மேல் மட்டத்திலேயே தண்ணீர்.

கிணற்றில் நிறைய ஜகடைகள் (நீர் இறைக்கும் சக்கரங்கள்) கயிற்றுடன் தொங்கிக் கொண்டிருந்தன… ஒவ்வொன்றிலும்
சின்ன சின்ன பக்கெட்டுகள்… குட்டிப் பையன்கள் வரிசையாக போய் கிணற்றடியில் உட்கார, பெரிய பையன்கள்
ஜாலியாக தண்ணீர் இழுத்து, அந்த குட்டிப்பையன்களின் தலையில் விட்டு, குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள்.
சிறுவர்களுக்கு குளித்தலே ஒரு கொண்டாட்டம் தான்…!!! (இது பல வருடங்களுக்கு முன்பு… இப்போது நவீனமாகி
இருக்கக்கூடும்…!!!). சின்னப் பையன்களை, பெரிய பையன்கள் ஆதரவாக, அன்போடு, நட்போடு பார்த்துக் கொள்கிறார்கள். அத்தகைய ஒரு சூழல் அவர்களை கவனித்துக் கொள்ளும் சந்நியாசிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படிப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, தியானம், கூட்டு வழிபாடு என்று சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. குடிலில் நிறைய பசுமாடுகள் வளர்க்கப்படுவதால், பாலுக்கு பஞ்சமே இல்லை.

தந்தை, அல்லது தாய் யாராவது ஒருவரை இழந்திருந்தால் கூட, அந்த சிறுவன் இங்கு ஆதரவற்றவனாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறான்…

எந்தவித ஜாதி, மத – வித்தியாசமுமின்றி, அனைத்து தரப்பினரும் ஏற்கப்படுகிறார்கள்.

மிகப்பழைய புகைப்படம்… இப்போது இந்த சிறுவர்கள் எந்தெந்த ஊர்களில், எந்தெந்த நிலைகளில் இருக்கிறார்களோ…?
இவர்கள் “குடிலை” நிச்சயம் நினைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.


..

புதிதாக சிறுவர்களை சேர்த்துக் கொள்வது பற்றி, நேற்றைய தினம் குடிலில் இருந்து வந்த ஒரு அறிவிப்பை கீழே தந்திருக்கிறேன்.

இதைக்காணும் நண்பர்கள், தங்கள் வட்டத்தில், தங்களுக்கு தெரிந்த யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

—————————————-

திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி

—–

இதுகுறித்து இந்த குடிலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த ஆசிரமத்தில் ஓர் துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10- ஆம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி உள்ளது. இந்த மாணவர்கள் அரசு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து தொழிற்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அத்துடன் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். மேலும், நடப்பாண்டு முதல் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓவியம், நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தை இருவருமே இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டு வந்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து படிக்க வைக்க
இயலாத ஆண் குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இங்கு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை-639115. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொலைபேசி: 0431- 2614235, 0431- 2614548 மற்றும் செல்லிடப் பேசி 9442352770 ஆகியவற்றில் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிலின் பள்ளிகளில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு, குடிலில் இருந்து ரூபாய் ஆயிரம் டெபாசிட் அவர்களுடைய எதிர்கால நலனுக்காக செய்து வைக்கப்படுகிறது. அவர்கள் படிப்பு முடிந்து குடிலை விட்டு வெளியே சொல்லும்போது, டெபாசிட்டின்
கூடுதல் தொகையையும் சேர்த்து அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

———————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்…

 1. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  good

 2. paiya சொல்கிறார்:

  useful information

 3. Pingback: ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்… – TamilBlogs

 4. paamaran சொல்கிறார்:

  அய்யா … ! இந்த குடில் பற்றி கொஞ்சம் கூடுதல் செய்திகள் :–
  // ஈரோடு மாவட்டம், சத்திய­மங்கலம் அருகிலுள்ள கெம்ப­நாயக்கன் பாளையத்தில் பிறந்த ” ராமசாமி ” , ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி சித்பவானந்தரால் ஆன்மிகப் பாதைக்கு இழுக்கப்பட்டவர். அவரது அணுக்கத் தொண்டராக இருந்த ராமசாமி பிறகு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக 1949ல் திருச்சி அருகிலுள்ள திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்’ என்ற தர்ம ஸ்தாபனத்தைத் துவக்கினார். ..!

  ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசத்தை மட்டுமே நெஞ்சில் கொண்டு, மிகப்­பெரிய அறநிலையத்தை உருவாக்கி வளர்த்தெடுத்­திருக்கிறார், ” பிரம்மச்சாரி ராமசாமி. ” இவருக்கு பக்க பலமாக, கிருபானந்த வாரி­யார் சுவாமிகள், ஜஸ்டிஸ் மகா­ராஜன், திருச்சி முன்­னாள் கலெக்டர் மலையப்­பன், நங்க­வரம் பண்ணையார், ரங்க­நாதய்யர் உள்­ளிட்ட அன்பர்கள் பேரு­தவி புரிந்திருக்கிறார்கள்….!

  பெரிய வகுப்பு மாணவர்கள் சமையல் செய்கிறார்கள்; மாணவர் விடுதிகளைப் பராமரிப்பது மற்றொரு மாணவர் குழு; பசுமடத்தைப் பராமரிக்க ஒரு மாணவர் குழு; கட்டிடங்களை சுத்தப்படுத்துவது ஒரு மாணவர் குழு; பூஜை வழிபாடுகளை நடத்துவது ஒரு மாணவர் குழு. இவ்வாறு மாணவர்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் மாணவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் அவர்கள் வளர்கிறார்கள் …!

  காவிரி ஆற்றை ஒட்டியுள்ள 70 ஏக்கர் நிலம், அழகிய தென்னந்தோப்பாக விரிந்திருக்­கிறது. இதை அமைத்தவர்களும் மாணவர்கள்தான், பராமரிப்­பதும் மாணவர்கள்தான். இந்த தோப்பில் கிடைக்கும் வருவாய், மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்கு போதுமானதாக இருக்கிறது….!

  இங்கு பயின்ற மாணவர்கள் மிகப்பெரிய பதவிகளில் இல்லாதபோதும், மன­நிறைவான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் ஐ.டி.ஐ., தொழில்­ படிப்பு முடித்து திறன்மிகு தொழி­லாளர்களாக உயர்ந்திருக்­கிறார்கள். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்­சந்திரனது உதவி அடித்தள­மிட்டது. குடில் மாணவர்­கள் பத்து பேருக்கு ஆண்டுதோறும் திருச்சி அரசு ஐ.டி.ஐ., யில் இடம் அளிக்க அவர் உத்தரவிட்­டது, இன்றும் தொடர்கிறது.
  .
  முன்னாள் முதல்வர்கள் காம­ராஜ், அண்ணா­துரை, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகி­யோர் இக்­குடிலுக்கு வருகை தந்து மகிழ்ந்­திருக்கிறார்கள்…! //

 5. paamaran சொல்கிறார்:

  // இந்தியாவின் புராதன பெருமைச் சின்னங்கள் போல் உலகைக் கவர
  சீனாவில் அதிகம் இல்லை- // இது முந்தைய இடுகையில் தங்களின் மறு மாெழி … உண்மை தான் … ! அதை சார்ந்த ஒரு செய்தி : இன்று செங்காேட்டை …நாளை ..? ….. புராதன அடையாளங்களை கூட பராமரிக்க முடியாதவர்கள் ..வரி வருவாயில் மட்டும் துடிப்புடன் செயலாற்றுகிறார்களா…?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த யோசனை ஆட்சியில் இருப்பவரிடையே எவர் மண்டையில் முதலில் உதித்ததோ, அவர் மட்டும் நம்மிடம் சிக்கினால் தேவலை…
  வெட்கம், மானம், சூடு, சொரணை, சுயகௌரவம் எதுவுமே இல்லாத அயோக்கியர்கள்… சொந்த நாட்டைப்பற்றிய எந்தவித பெருமையும் இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம், வருமானம் கிடைக்குமென்றால், வாய்ப்பு கிடைத்தால், சொந்த குடும்பத்தையே கூட “லீசு”க்கு விட தயங்க மாட்டார்கள்.

  “Maintenance of heritage property” என்று காரணம் சொல்வார்கள்… ஏன், அசந்தால், இவர்களுக்கு எதாவது கிடைக்குமென்றால், எதிர்காலத்தில் – இந்த நாட்டையே கூட “Maintenance” -க்காக யாரிடமாவது அடமானம் வைத்துவிடவும் தயங்க மாட்டார்கள்….
  ( உண்மையில், அரசுக்கு வருமானம் கிடைக்குமென்பது காரணம் அல்ல. அதன் பின்னணியில் வேறு காரணங்கள்
  இருக்கின்றன…. அதனை நான் இப்போது இங்கு பேச விரும்பவில்லை… அவசியம் ஏற்பட்டால் பிறகு பேசலாம்.! )

  வெகுண்டெழுந்து இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன…வெட்கக்கேடு. அவமானம்.

 7. Selvaraju சொல்கிறார்:

  அண்ணா நல்ல தகவல்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.