பெற்றால் தான் அம்மாவா என்ன …?


முதலில், என்னைப்பெற்ற அம்மாவைப்பற்றி சொன்னேன்…! அடுத்து, என்னைப் பெறாத அம்மாவைப் பற்றியும் அவசியம் சொல்லியாக வேண்டும்.

இது திருமதி சுலோசனா அவர்கள்…
என் மனைவியின் தாய்.
ஆனாலும் அவர் என்னிடம் வைத்திருந்த அன்பு, பாசம், காட்டிய அக்கறை… என் அன்னைக்கு சற்றும் குறைவானதல்ல.. நான் அவர் மீது கொண்டிருந்த பிடிப்பும், அபிமானமும் – இதே ரகம் தான்…. நான் அவரை மாமியார் வடிவத்தில் நினைப்பதில்லை. என்னுடைய இன்னொரு அம்மாவாகத்தான் நினைத்திருக்கிறேன்.

அவருடன் நான் பழகியது சில வருடங்களே… எனக்கும், என் மனைவிக்கும் திருமணம் ஆகி, 10-12 ஆண்டுகளில்,
சிறிய வயதிலேயே, இதயக்கோளாறு காரணமாக அவர் மறைந்து விட்டார். அவர் மறைந்து சுமார் 35 ஆண்டுகள்
ஆகி விட்டபோதும், இன்றும், வீட்டில், என் மனைவியை விட, அவரது தாயைப்பற்றி நான் தான் அதிகமாக
பேசிக்கொண்டிருப்பேன்.

பொதுவாக, நான் சாப்பாட்டைப் பொருத்த வரை, எனக்கென்று தனியாக விருப்பங்கள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. எதைப்போட்டாலும், எந்த குறையும் சொல்லாமல் சாப்பிடுவேன்….!

என் மனைவி, சில சமயங்களில் என்ன சமைக்கட்டும் என்று கேட்கும்போதெல்லாம் கூட- உனக்கு எது சௌகரியமோ, உனக்கு எது பிடிக்குமோ – அதைச் செய் என்று சொல்லி விடுவேன்….

ஆனால், காப்பி (coffee )யைப் பொருத்த வரை மட்டும், எனக்கென்று ஒரு தனி தேவை இருந்தது…. 19 வயதில் நான் வெளியூரில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து, தனியே வசிக்கத்துவங்கிய காலத்திலிருந்தே, உருவான பழக்கம் அது….

ஒவ்வொரு முறையும், fresh ஆக filter டிகாஷன் போட வேண்டும். இதற்காக, சின்னதாக ஒரு பித்தளை ஃபில்டர் வாங்கி வைத்திருந்தேன். பால் ஒரு முறை தான் காய்ச்சப்பட வேண்டும்.( பாலை இரண்டாம் முறை சுடவைக்கும்போது,
அதன் சுவை மாறி விடும்… அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த வித்தியாசம் தெரியும்…. )

பாலைக் காய்ச்சிய பிறகு, புதிய ‘திக்கான’ டிகாஷனை அதில் விட்டு, குறைவான சர்க்கரையுடன் – ஸ்டிராங்க் காப்பி தான் சாப்பிடுவேன்…. நான் தனியாக இருந்தவரை இதில் பிரச்சினை ஏதும் இல்லை… நானே தயாரித்துக் கொள்வேன்.
ஆனால், திருமணமான பிறகு….?

ஆரம்பத்தில் – என் மனைவிக்கு என் காப்பி டேஸ்ட் பற்றிய விஷயம் பிடிபடவில்லை.
ஏன்…….பால் வந்தவுடன் ஒட்டுமொத்தமாக முதலிலேயே காய்ச்சி விட்டு, நீங்கள் வரும்போது மீண்டும்சுட வைத்து
காப்பி கலந்தால் என்ன …? உங்களுக்கு சுடச்சுட காப்பி வேண்டும் அவ்வளவு தானே என்பார்….! நான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், அதன் வித்தியாசம் அவருக்கு புரியவில்லை….

சில மாதங்கள் அவஸ்தைப்பட்டேன்….. கடைசியாக இதற்கு ஒரு தீர்வை நானே கண்டுபிடித்தேன்…. காலையில் மனைவிக்கு முன்னதாக நான் எழுந்து விடுவது தான் அது…… ! காலையில், பால் காய்ச்சி, பில்டர் டிகாஷன் தயாரித்து,
முதல் காப்பி போடும் வேலையை நானே மேற்கொண்டேன்… நானே காப்பி கலந்து எடுத்துக்கொண்டு, மனைவிக்கும் காப்பி கலந்துவிட்டு, “அம்மா தாயே காப்பி ரெடி…. எழுந்திருக்கலாம்” என்று சொல்லி விடுவேன்…. 🙂 🙂

ஒரு முறை என் மனைவி, எதேச்சையாக அவரது தாயிடம் என் பழக்கத்தைப்பற்றி சொல்லி இருக்கிறார்…. அவரது தாய், என்னை காப்பி போட வைப்பது குறித்து, அவரை கடிந்து கொண்டாலும் – என் மனைவிக்கு இதைப் புரிய வைக்க முடியாது என்பது அவரைப் பெற்ற தாய்க்கு தெரியாதா என்ன……. 🙂 🙂

ஆனால் – அன்றிலிருந்து எப்போதெல்லாம், நான், மனைவியின் பிறந்த வீட்டிற்கு செல்ல நேரிட்டாலும் –

அங்கெல்லாம், காலையில் 4.45 மணிக்கெல்லாம் சைக்கிள் பால்காரர் வந்து விடுவார். ( பாக்கெட் பால் பற்றியெல்லாம் யாரும் சிந்தித்துக்கூட பார்க்காத நாட்கள் அவை…)

காலையில் 5 மணிக்கெல்லாம் பாலைக் காய்ச்சும்போது, தனியாக எனக்கென்று, ஒரு டம்ளர் பசும்பாலை தனியே காய்ச்சாமல் எடுத்து வைத்து விடுவார்…. பிற்பாடு, 6 மணியளவில் நான் எழுந்து வந்த பிறகு, அந்த ஒரு டம்ளர் பாலை தனியே காய்ச்சி, fresh டிகாஷன் போட்டு, நான் தயாரிப்பது போலவே டிகிரி காப்பி தயாரித்துக் கொடுப்பார்…..

முதல் தடவை அருந்தியவுடனேயே ருசியில் வித்தியாசம் எனக்கு தெரிந்தது. கிச்சனில் சென்று விசாரித்த பிறகு, அவர் செய்தது தெரிந்தது…. எவ்வளவு கரிசனம்… அவரவர்க்கு பிடித்த மாதிரி செய்து கொடுக்க வேண்டுமென்கிற அக்கறை…..!
இத்தனைக்கும், வால்வு பழுதுபட்டுப்போன, அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிப்படும் – ஒரு இதய நோயாளி அவர்…!
பழுதுபட்ட ஒரு நல்ல இதயம்…!

இது just ஒரு உதாரணத்திற்கு தான்…. இதுபோல், எப்போதும் இதமாக நடந்துகொள்வதும்,
யாரும் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதும், எல்லாரிடமும் பிரியமாக இருப்பதுமான – ஒரு நல்ல ஆத்மா…!
எத்தனை பேருக்கு – இத்தகைய ஒரு உறவிற்கு கொடுத்து வைத்திருக்க முடியும்…?

.
—————————————————————————————————————————-

பின் குறிப்பு – இன்னொரு விஷயத்தையும் இங்கே கூறினால் தான் பதிவு முழுமை பெறும். அண்மைக் காலங்களில்,
காலையில் எழுந்தவுடன், fresh ஆக, ஸ்டிராங்காக, என் ரசனைக்கு தகுந்தாற்போல, ஃபில்டர் காப்பி கிடைக்கிறது….. மனைவியே கலந்து தருகிறார்…!!!

(காரணம் …? எனது உணவு intake மிகவும் குறைந்து விட்டது… காப்பியும் காலையில் ஒரு டம்ளர், மாலையில் முக்கால் டம்ளர் மட்டும் தான்…
இருக்கின்ற கொஞ்ச நாளைக்காவது, விரும்பும் வண்ணம் செய்து கொடுப்போமே என்கிற
கருணை போலிருக்கிறது … 🙂 🙂 🙂 )

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பெற்றால் தான் அம்மாவா என்ன …?

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  இந்தப் பதிவும் அருமை. எங்க வீட்டிலும் காஃபி இப்படித் தான் தயாரிக்கிறோம். இப்போதும் அப்படித் தான். பாலை வாங்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுத் தேவைக்கு ஏற்ப எடுத்துக் காய்ச்சிக் கொள்வேன். முன்னெல்லாம் காஃபிக் கொட்டை வாங்கி வறுத்து வீட்டிலேயே அரைத்துத் தான் காஃபி! எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு அதிகம் ஆனதும் அதை விட்டு விட்டோம். :))))) காஃபிப் பவுடர் வாங்கினாலும் மொத்தமாய் வாங்கி வைத்துக் கொள்வதில்லை. அவ்வப்போது தான்!

 2. Geetha Sambasivam சொல்கிறார்:

  அதிர்ஷ்டம் வேண்டும், மாமனார், மாமியார், மருமகன், மருமகள் அமைய! நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! ;)))))))

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மறந்து விட்டீர்களே…

   கணவன் / மனைவி…. அமையவும் கூடத்தானே –
   அதிர்ஷ்டம் வேண்டும்…?? .. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Geetha Sambasivam சொல்கிறார்:

    அது அமைந்திருந்தால் தானே இருதரப்பு மாமியார், மாமனார்கள் அமைந்திருப்பார்கள்! இல்லை எனில் நீ யாரோ, நான் யாரோ தானே! :)))))))

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     – வாதத்தில் பெண்களை ஜெயிப்பது கடினம்…!

     – தோல்வியை (மகிழ்ச்சியோடு) ஒப்புக்கொள்கிறேன்….. 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. Srini சொல்கிறார்:

  Respected Sir,

  Ammavai patri pathivu pottu… pinnar manaiviyin amma vai patriyum vidamal ezthuthiyadharku….. vazthukal.

  May GOD bless you with good health and long life.

  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

   நான் எழுதும் அரசியல் கட்டுரைகள் , எனக்கும், எனக்குப்பிடித்த நண்பர்களுக்கும் இடையே – இடைவெளியை உண்டாக்கி விடுவது
   எனக்குப் புரிகிறது…….

   இருந்தாலும் – நான் அவர்களது நட்பை இழக்கவில்லை என்பது
   ஒரு ஆறுதல்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா அவர்களுக்கு,

  தங்கள் கிழேயுள்ள வாசகத்தை படித்தவுடன் என் சிந்தையில் ஓடியதை சும்மா கிறிக்கினேன். இது யாரையும் குறிப்பிடுவனவல்ல. பொதுவானவை.

  //நான் எழுதும் அரசியல் கட்டுரைகள் , எனக்கும், எனக்குப்பிடித்த நண்பர்களுக்கும் இடையே – இடைவெளியை உண்டாக்கி விடுவது
  எனக்குப் புரிகிறது…….//

  அப்போ அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்ப‌வர்கள் அல்ல என்று புரிகிறது. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

  நான் எதை விரும்புகிறேனோ அது தான் நியாயம். அதை தான் நீயும் விரும்பனும். இல்லாட்டி உன்னோட கா. இது ஒரு சிறுபிள்ளை குணம் மாதிரி தெரிந்தாலும் இது ஒருவிதமான‌ கருத்து வன்முறை.

  என் கருத்து என்னோடு உன் கருத்து உன்னோடு, என் கருத்தோ அதோடு ஒட்டிய‌ என் செயல்பாடோ உன் கருத்தோ அதோடு ஒட்டிய உன் செயல்பாடோ நம் யாரையும் பாதிக்காதவகையில் நாம் செயல்பட்டுக்கொள்வோம், ஒருத்தரை ஒருத்தர் மதித்து இடம் கொடுத்துக்கொள்வோம், என்று எப்போது இந்த சமுதாயம் நடக்க தலைப்படுகிறதோ அப்போது தான் இந்நாடு அமைதி பெரும்.

  ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கோஷம் எவ்வளவு விபரீதத்தை விளைவிக்க போகிறதோ என்று பெரும் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மையற்ற சூழலை உருவாக்கி நிம்மதியற்ற பெரும் பதற்ற நிலையை உருவாக்கிவிடுமோ இந்த கோஷம் என்று கவலையளிக்கிறது. எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற தன்மையை நோக்கி இந்நாடு வேகமாக நகர்வதாகவே படுகிறது.

  இறைவன் தான் காப்பாற்றனும்.

  • mekaviraj சொல்கிறார்:

   என் கருத்து என்னோடு உன் கருத்து உன்னோடு, என் கருத்தோ அதோடு ஒட்டிய‌ என் செயல்பாடோ உன் கருத்தோ அதோடு ஒட்டிய உன் செயல்பாடோ நம் யாரையும் பாதிக்காதவகையில் நாம் செயல்பட்டுக்கொள்வோம், ஒருத்தரை ஒருத்தர் மதித்து இடம் கொடுத்துக்கொள்வோம்.
   – வழிமொழிகிறேன் 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அறிவழகு,

   நீங்கள் சொல்வது பொதுவாகப் பொருந்தலாம்.
   ஆனால், நண்பர் ஸ்ரீநிக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு விதமானது.

   அவர் எனது அரசியல் இடுகைகளுக்கு பின்னூட்டம் எழுதாமல் இருப்பதே
   எனக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணி விடக்கூடாதே என்பதற்காகத்தான்.
   அவர் இதை ஏற்கெனவே எனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்….

   அவர் மாறுபட்ட கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம்… அதனால்
   எனக்கு எந்தவித மனவருத்தமும் ஏற்படாது என்று நானும் அவரிடம்
   கூறி இருக்கிறேன்…. இருந்தாலும் அவர் சங்கடத்தை தவிர்க்கிறார்…
   அவ்வளவே..

   எனவே எனக்கு அவர் மீது எந்தவித மனவருத்தமோ, குறையோ கிடையாது.
   இந்த உரிமையுடன் தான் அவருக்கு நான் பதில் எழுதி இருந்தேன்.

   என்னைப் பொருத்த வரை நட்பு வேறு… அரசியல் வேறு….

   என் பார்வைக்கு, சிந்தனைக்கு – தோன்றுவதை நான் இங்கு எழுதுகிறேன்.
   அவ்வளவே….எல்லாரும் அதே கோணத்தில் தான் சிந்திக்க வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன்…. அதே சமயம் அவரவர் பார்வையில் தோன்றுவதையும் இங்கு தாராளமாக எழுதலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Harish K சொல்கிறார்:

  Superb Perippa 🙂 Wonderful narration! I was able to visualize the scenes as I read it. Great job 🙂 I feel like meeting Paati now 🙂 Even my amma used to tell a lot about Sulo Paati 🙂

 6. Prakash சொல்கிறார்:

  Mother in laws are always special whenever I go to my in laws house no body gets food before me they wait until I come home.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.