நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….!!!பாலகுமாரன் அவர்களைப்பற்றி, அவர் மறைந்த உடனேயே எழுத வேண்டும் என்று தோன்றியது…… வலைத்தளத்தில் அவரைப்பற்றிய செய்திகள், கட்டுரைகள் நிறைய வந்துகொண்டிருந்தன…. எனவே, சில நாட்கள் போகட்டும் என்று காத்திருந்தேன்.

பாலகுமாரன் அவர்களை எப்போதிலிருந்து நான் அறிவேன்…? சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக…!!!
கடந்த 10-12 ஆண்டுகளாக, சென்னையிலேயே இருந்ததால், அவரை நிறைய நிகழ்ச்சிகளில் நேரிலும் பார்த்தேன்…
சில சமயம் அவருடன் பேசவும் கூடியது… அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நெருங்கிய நண்பரை பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்கு ஏற்படும்.

ஆசிரியர் சாவி ( சா.விஸ்வநாதன் ) அவர்கள் “குங்குமம்” பொறுப்பிலிருந்து விலகி, சொந்தமாக “சாவி” வார இதழைத் துவங்கிய சமயம்… வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு… அந்த காலங்களில்,( 25-30 வயதில் ) கிட்டத்தட்ட தமிழில் வெளிவந்து கொண்டிருந்த அத்தனை வார இதழ்களையும் நான் படித்து வந்தேன்….! “சாவி” யையும் முதல் இதழிலிருந்தே படித்து வந்தேன்.

சாவி அவர்கள் தான் பாலகுமாரனை எனக்கு (நமக்கு) அறிமுகப்படுத்தி வைத்தாரென்று சொல்ல வேண்டும்…. ‘சாவி’ வார இதழில் தான் பாலகுமாரன் தனது முதல் நாவலான ‘ மெர்க்குரிப் பூக்கள் ‘ -ஐ தொடர்கதையாக எழுதினார்…. இளம்பருவத்து ஆண்-பெண் உறவுகள் / உணர்வுகள் குறித்த விஷயங்கள் அப்போதெல்லாம் அவர் எழுத்தில் சற்று தூக்கலாக இருக்கும்…சாண்டில்யன் அவர்களைப்போல், நேரிடையான வர்ணனையாக இருக்காது… இருந்தாலும் படிப்பவர்களின் மனதில் சில உணர்வுகளை, கிளர்ச்சியை ஏற்படுத்தும்… கூடவே, தொழிலாளர் யூனியன், பிரச்சினைகள் சம்பந்தமான சில
நடைமுறை அனுபவங்கள் – துவக்க காலத்தில், அவர் விரைவில் புகழ்பெற அவரது அந்த நடை உதவியது…..!

– கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ச்சியாக, பாலகுமாரனை விடாமல் படித்து வந்தேன். அவரது எழுத்தில் கிட்டத்தட்ட 85-90 % படித்திருப்பேன்… இப்போது கூட என் வீட்டு நூலகத்தில், 40-45 பாலகுமாரன் புத்தகங்கள் இருக்கின்றன… கடைசியாக, புத்தக கண்காட்சியில் நான் வாங்கியது திருவண்ணாமலை மகான் ரமணர் பற்றி பாலகுமாரன் எழுதிய நூல்.

பாலகுமாரன் வயது கூடக் கூட , அவரது ரசனையும், விருப்பங்களும் மாறிக்கொண்டே வந்தன…அவரது எழுத்து நடை மாறவில்லையென்றாலும், எழுதும் பொருள் / விஷயம் மாறிக்கொண்டிருந்தது….

அவர் எழுத்தில் உண்மை இருந்தது… ஆழம் இருந்தது… சமூகத்தின் மீதான அக்கறை இருந்தது. நிறைய விஷயங்களை சமூகத்திற்கு, முக்கியமாக இளைய சமுதாயத்தினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிற அவா இருந்தது. மனிதர்களிடையே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளலின் அவசியம் பற்றி அவர் மிக அழகாக விவரித்து எழுதினார். முக்கியமாக, பெண்களைப்பற்றிய அவரது அக்கறை குறிப்பிடத்தக்கது….அவரது எழுத்து நடை அவருக்கு லட்சக்கணக்கில் வாசகர்களை உருவாக்கியது.

அவருக்கு புகழில் ஆர்வம் நிறைய உண்டு… தனது எழுத்தில் ஏற்பட்ட தன்னம்பிக்கையின் விளைவு அது. அதில் எந்த தவறும் காண இயலாது….திரையுலகம் என்கிற மாய உலகம் அவரை கவர்ந்திழுத்தது… திரைப்பட இயக்குநராக விரும்பினார்….

இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்….பாலசந்தர் முன் கோபி…. இவருக்கு சுயமரியாதை அதிகம்…. இருவருக்கும் ஒத்துவரவில்லை. மேலும் அவர் திரையுலகை வெளியிலிருந்து பார்த்தபோது இருந்த கவர்ச்சி, அதனுள் நுழைந்தபோது மறைந்து விட்டது. எனவே, எழுத்தாளர் என்கிற அளவிலேயே திரைத்துறையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார்.

தமிழில், எழுத்தாளரின் புகைப்படத்தை அட்டைப்படமாக பிரசுரம் செய்யும் வழக்கத்தை பாலகுமாரன் தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும்…

துவக்க காலத்தில், பதிப்பாளர்களிடையே தனக்கு உரிய விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்…. ஆனால், பிற்காலத்தில் – அவரது புகைப்படங்களே, புத்தகங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்க உதவியாக இருந்தது.

40 ஆண்டுகளாக, அவருடனும், அவரது எழுத்துடனும், நானும் வளர்ந்துகொண்டே வந்ததால், என் வயதும் ஏறிக்கொண்டே வந்ததால், சில சமயங்களில் அவரது ரசனை, அனுபவங்களை நானும் அனுபவித்துக் கொண்டிருப்பது போல் நான் உணர்ந்தேன்…. (நான் ஏற்காத சில விஷயங்களும் பாலகுமாரனிடம் உண்டு… ஆனால், அவை இங்கே தேவையற்றவை..)

தமிழ் இளைஞர்கள் பலரும், அவரை, தங்களுக்கு வாழ்வியலை கற்றுக்கொடுக்க வந்த ஒரு ஆசானைப்போல் உணர்ந்தார்கள். – என்னைப் பொருத்த வரை அவரை, எனக்குப் பிடித்த ஒரு சமவயது தோழனைப்போலவே உணர்ந்தேன்.

பாலகுமாரன் அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்க காலத்தில் எழுதியவற்றையும் இப்போது கடைசியாக எழுதியவைகளையும் ஒப்பிட்டு பார்த்தால், அவரது ரசனைகள்… பார்வைகள் – வயதிற்கேற்றாப்போல் மாறி வந்திருப்பதை உணர முடியும்.

கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, கொஞ்சம் கொஞ்சமாக, ஆன்மிக விஷயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு வந்தார்…. அவரது எழுத்திலும் அவை பிரதிபலித்தன…

பாலகுமாரன் அவர்களின் பேட்டி ஒன்று விகடன் வலைத்தளத்தில் அண்மையில் வெளிவந்தது… அதில் அவர் கடவுள், மதங்கள், இறை நம்பிக்கை, ஆன்மிகம் ஆகியவை குறித்து பேசியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. எல்லா மதங்களும் ஒன்றையே சொல்கின்றன, ஒரே இடத்திற்கு இட்டுச்செல்கின்றன என்பதை ஆணித்தரமாக அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது….

– இறப்பை பற்றி அவர் அதில் விவரமாகப் பேசுகிறார்…..

இந்த ஆன்மா உள்ளே இருக்கின்ற வரையில் தான்
நான் பாலகுமாரன்…

அது வெளியேறி விட்டால் – இது வெறும் ‘body’ தான்….
என்று அவர் கூறும் அந்த பேட்டியே –

அவர் கொடுத்துள்ள கடைசி பேட்டி என்பதை அறிய வியப்பாக
இருக்கிறது….. such a co-incidence…!!!

பாலகுமாரன் அவர்களின் அந்த பேட்டியை பலர் பார்த்திருக்கலாம். இன்னும் பார்க்காதவர்களுக்காக அதனை கீழே தந்திருக்கிறேன்….(நன்றி – விகடன் செய்தித்தளம் )

பாலகுமாரன் இன்னும் பல நூற்றாண்டுகள் நம்மிடையே இருப்பார் –
அவரது எழுத்துக்களின் வடிவத்தில்…….!!!

………….

நல்லவன் கெட்டவன் எல்லாருக்கும் சாவு வரும் !

…………..

இந்த வாழ்க்கையே முட்டாள் கூத்து!

——————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….!!!

 1. Pingback: நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….!!! – TamilBlogs

 2. Selvarajan சொல்கிறார்:

  பாலகுமாரன் : சிறு கதைகள் , ஞானம் , வாழ்வியல் கட்டுரைகள் , காேயில் , புராண வரலாறு , திரைத்துறை … ” பன்ச் டயலாக் ” என்பதை தாேற்றுவித்தவர் பாேன்ற பனமுகப் படைப்பாளி …என்பது அனைவரும் அறிந்தது …ஆனால்

  அவர் கவிதைகளும் பல படைத்திருக்கிறார் அதில் ஒன்று …

  இதே தளத்தில் அவரது அம்மா …அப்பா பற்றி வந்த ஒரு இடுகைக்கு ஏற்றார் பாேல ஒரு சிறு கவிதை .. தலைப்பு ” வடு ” ..

  ” அம்மா இழுத்த சூடும்
  அப்பா இறைத்த வசவும்
  இன்னும் என்னுள் இருக்கின்றன .பசுமையாய்…
  நடு மரத்தில் நம் பெயரை நீ செதுக்கின வடு மாதிரி…
  நீயாே மரம் மாதிரி ..!! எப்படி கவிதை …?

  எழுத்து சித்தர் … சித்தர்களுக்கு அழிவேது ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.