“நான் யார் தெரியுமா…? ” – ” நான் யார்…? “
” நான் யார் தெரியுமா…? ” என்று ஒரு மனிதன் பிறரிடம் கேட்பது அவனது ஆணவத்தின் உச்சகட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தை…

ஆனால் ” நான் யார்…?” என்று ஒரு மனிதன் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டால், அது அவனது ஆத்மவிசாரத்தின், சுயபரிசோதனையின் – முதல் கட்டம்.

” நான் யார்….? ” – இந்த வார்த்தையை கேட்டவுடன் ஆன்மிகத்தில்
நாட்டமுடையவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களின் நினைவிற்கு வருவது – திருவண்ணாமலை மகரிஷி ரமணர் தான்….!

..

..

திருச்சுழியில் அவதரித்து, திருவண்ணாமலையில் குடிகொண்ட ரமணர் தானிருந்த இடத்தை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. ஆனால், உலகம் முழுவதுமிருந்து ஆன்மிக நாட்டமுடையவர்கள் அவரை நோக்கி திருவண்ணாமலைக்கு வந்துகொண்டே இருந்தார்கள்.
இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னர், 1940-களிலேயே, ஏகப்பட்ட மேலை நாட்டினரை, அவரது தவ வலிமை திருவண்ணாமலையை நோக்கி கவர்ந்திழுத்தது.

ரமணர் அதிகம் பேசியதில்லை…
அதிகம் உபதேசங்களும் செய்ததில்லை…

மிகச்சில கேள்விகள்…
மிகச்சில வியாக்கியானங்கள்… உபதேசங்கள்.
ஆனால் அந்த கேள்விகள் உண்டாக்கிய
சிந்தனைகள்…, விளைவுகள்…? ஏராளம்…!

அவரது மிக முக்கியமான ஒரு கேள்வி – ” நான் யார் …? ”

இந்த உடல் தான் மனிதனா…? மூச்சா, பார்வையா, கேட்டலா, உணர்தலா, பேசுதலா – ஐம்புலன்களா… ? எது அந்த ” நான்…? ”

இறந்த பின் ஒரு மனிதனுக்கு என்ன நிகழ்கிறது…?

ரமணரின் வாழ்க்கை தான் நமக்கு உபதேசம்… அவர் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தினார்… மனிதர்களிடையே ஜாதி, மதம் – உயர்ந்தவன், தாழ்ந்தவன் – ஏழை, பணக்காரன், ஆண்-பெண் போன்ற எந்தவித பேதங்களையும் அவர் பார்க்கவில்லை.

அனைவரின் உள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றே தான்
என்பது அவர் அனுபவம், மொழி, வாக்கு.

” இந்த உடல் வேறு – “நான்” வேறு என்கிற சிந்தனையுடன்,
கடுமையான புற்றுநோயால் ஏற்பட்ட வேதனைகளைப்பற்றி சற்றும் நினக்காமல், இயல்பாக அந்த வலியை ஏற்றுக் கொண்ட ஒரு உண்மையான மகான்.

சென்னையில் ” மகாலட்சுமி பெண்கள் நாடக குழு ட்ரஸ்ட் ” என்கிற பெயரில் முழுக்க முழுக்க பெண்களே நடிக்கும் நாடகக்குழு ஒன்று இயங்கி வருகிறது….. திருமதி பாம்பே ஞானம் அவர்கள் இதை நிர்வகித்து வருகிறார்….

..

..

இவரது எழுத்து, இயக்கத்தில் ரமணரைப் பற்றிய நாடகம் ஒன்று
“பகவான் ஸ்ரீ ரமணர்” என்கிற பெயரில் அரங்கேறுகிறது என்று அறிந்தபோது, ஒரு நாடகத்திற்கு தேவையான அழுத்தமான திருப்பங்களுடன் கூடிய கதை இந்த தலைப்பில் கிடைக்காதே…

எந்த அளவிற்கு இதை சுவாரஸ்யமுடையதாக அவர்களால் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே தான் நாடகத்திற்கு சென்றேன்.

ஆனால், நாடகத்தை பார்த்தபோது, திறமையும், நல்ல கலைஞானமும்
சேர்ந்திருந்தால், எந்த விஷயத்தையும் – விறுவிறுப்பானதாகவும்,
சுவாரஸ்யமானதாகவும் கொண்டு செல்ல முடியும் என்பது உறுதியானது.

ரமணரின் வாழ்க்கையில் முக்கியமான செய்தி … அவர் வாழ்ந்த விதமும், அவர் கூறிய வெகு சில கருத்துகளும் தான்.

மிக அழுத்தமான வசனங்களால்,
ரமணரின் உபதேசங்களை மிக அழகாக,
மிக எளிதாக அனைவருக்கும் புரியக்கூடிய விதத்தில்
எழுதி, பேசியது – இந்த நாடகத்தின் சிறப்பு….

ரமணரின் கருத்துகள், உபதேசங்கள், எளிய மக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மிகத் தெளிவாகவும், புரியும் வண்ணமும் அமைந்திருக்கின்றன நாடக வசனங்கள்.

நாடகத்தில் நான் ரசித்த ஒரு காட்சி –

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் –
தினமும் மதிய வேளையில் அன்னதானம் உண்டு…
ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும், எந்தவித ஜாதி, மத வித்தியாசமுமின்றி, ஒரே பந்தியில் அமர்ந்து உணவெடுத்துக் கொள்வார்கள்.

( இது நடந்தது 1940-களில் என்பதை நினைவில் இருத்திக் கொண்டால் தான் அதன் அருமை புரியும்…..)
” நாராயண சேவா” என்று ஆசிரமத்தில் அதற்கு பெயர்.

ரமணரின் தாயாரும், ஆசிரமத்திலேயே வசித்து வருகிறார்…. உலகுக்கே
உபதேசிக்கும் ஒரு சந்நியாசியின் தாயாராக இருந்தபோதும், அவருக்கே
என்றிருந்த சில பழக்க, வழக்கங்களை அவரால் விட முடியவில்லை –
” பிராம்மண ஆசார, அனுஷ்டானங்களை ” தீவிரமாக கடைபிடிக்கும்
அந்த அம்மையாரால்.

ஒரு சமயத்தில், பிராம்மணர் அல்லாதோர் சாப்பிட்ட பிறகு தான்
உணவு உட்கொண்டால் அது “சேஷம்” ஆகி விடும்… என்று ஆசிரமவாசி
ஒருவரிடம் அந்த தாய் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே
ரமணர் அங்கு வந்து விடுகிறார்….

அவர், தன் தாயிடம் கேட்கிறார்….

“நீங்கள் தினமும் ராமரை பூஜிப்பது உண்டா…?
நைவேத்தியம் செய்வது உண்டா..?
கிருஷ்ணரை பூஜிப்பது உண்டா..?
நைவேத்தியம் செய்வது உண்டா…?”

தாய் சொல்கிறார் ஆமாம் என்று.

பின் ரமணர் கேட்கிறார்…

” ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நைவேத்தியம்
செய்த பிறகு நீங்கள் சாப்பிடுவீர்களா அல்லது
நீங்கள் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு
நைவேத்தியம் செய்வீர்களா..?” …

தாய் அவசரமாக அதை மறிக்கிறார். “சுவாமிக்கு நைவேத்தியம் செய்யாமல் நான் எப்படி சாப்பிடுவேன்… முதலில் நைவேத்தியம், பிறகு தான் சாப்பாடு ..”

ரமணர் கேட்கிறார்….

” நீங்கள் தினமும் பூஜை, நைவேத்தியம்
செய்யும் ராமரோ ஒரு க்ஷத்திரியர்;
கிருஷ்ணர் ஒரு இடையர்-யாதவர்.
அவர்களுக்கு நைவேத்தியம் செய்த பிறகு
பிராம்மணராகிய நீங்கள்
சாப்பிட்டால் அது “சேஷம்” ஆகி விடாதா…?

மனிதர்கள் அனைவரின் உள்ளேயும் இருப்பது ” ஒரே ஆன்மா” தான்;
எனவே ஜாதி வித்தியாசம் பார்ப்பது தவறு என்பதை ரமணர் தன் தாய்க்கே உணர்த்தும் ஒரு அருமையான காட்சி அது….!!!

நிறைய சொல்லலாம்…..
வாய்ப்பு கிடைப்பவர்கள், அவசியம் இந்த நாடகத்தை பாருங்கள்…

திருமதி பாம்பே ஞானம் மற்றும் அவரது ” மகாலட்சுமி பெண்கள் நாடக குழு ட்ரஸ்ட் ” – ஆற்றுவது ஆன்மிகப்பணி மட்டுமல்ல…
ஒரு சமுதாயப்பணியும் கூட…. அவர்கள் பணி இனிதே தொடர நமது
வலைத்தளத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகள்.

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “நான் யார் தெரியுமா…? ” – ” நான் யார்…? “

  1. Mani சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    நான் கூட இந்த நாடகத்தை பார்த்தேன்.
    எதிர்பார்க்கவே இல்லை.
    இவ்வளவு சிம்பிளாக ரமணரின் தத்துவத்தை சொல்ல முடியும் என்று.

  2. Pingback: “நான் யார் தெரியுமா…? ” – ” நான் யார்…? “ – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.