ஆடி அடங்கும் வாழ்க்கை …!!! (பகுதி-7) முடிவில்லாத கேள்விகள்…


முந்தைய பகுதியை பார்க்க ….

அவர் ஜெயிலுக்கு சென்று விட்டு திரும்ப வருவதற்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ் திரையுலகிலும், பொதுமக்களின் ரசனையிலும், சமுதாயத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன…

சரித்திர, புராண-இதிகாச படங்களின் மீது மக்களுக்கு இருந்த ஆர்வம்,
சமூகப்படங்களின் மீது திரும்பி விட்டது. 40-50 பாடல்களைக் கொண்ட
படங்கள் வெளிவந்த காலம் போய், வசனத்திற்கும், அதிரடி சண்டைகாட்சிகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கத் துவங்கி விட்டது.
நடிகர்களுக்கு பாடத்தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் போய் விட்டது…..பாடல்களுக்கென புதிதாக நிறைய பின்னணி பாடகர்கள் வந்து விட்டனர்.

இரண்டரை ஆண்டுக்கால சிறைவாசம் பாகவதரின் மனநிலையை மிகவும் பாதித்திருந்தது…. பணம், புகழ் எதுவுமே நிரந்தரமானதில்லை என்கிற எண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு,
இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை
என்கிற முடிவிற்கு வந்து விட்டார்… வெளியே வந்த பிறகு சில தயாரிப்பாளர்கள் பாகவதரை ஒப்பந்தம் செய்ய அணுகினார்கள்.

பாகவதர் இனி தனக்கு நடிப்பதில் விருப்பமில்லை என்றும், தான்
மேடைக்கச்சேரிகளில் ஈடுபடப்போவதாகவும் சொல்லி விட்டார். மேலும், தான் சிறைக்கு சென்றபோது, அட்வான்ஸை திரும்பக்கேட்டு தன்னை துன்புறுத்திய தயாரிப்பாளர்களின் மீது அவருக்கு அளவுகடந்த வெறுப்பு மேலிட்டிருந்தது.

அவருக்கு பணத்தின் மீதும், புகழின் மீதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டுமே நிலையில்லாதவை என்றும், இரண்டுமே கையை விட்டு போகும்போது பெரும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்துபவை என்பதையும், சிறைவாசம் அவருக்கு உணர்த்தியிருந்தது.

வெளியே வந்ததும் நேராக வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றவர், தொடர்ந்து, கோவில் கோவிலாக பக்திப்பயணம் சென்றார்.

வந்த சில திரைப்பட வாய்ப்புகளையும் வெறுத்து ஒதுக்கி விட்டு,
பாகவதர், கோவில் திருவிழாக்களிலும், இசைவிழாக்கள், சபா-கச்சேரிகள்
ஆகியவற்றிலும் ஈடுபட ஆரம்பித்தார்…

கோவில் நிகழ்ச்சிகளுக்கு அவரை விரும்பி அழைத்தனர்….
அவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்…
ஆனால் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் பணம் பெற மறுத்து விட்டார். தன்னுடன் வந்த பக்க வாத்தியக்காரர்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கச் சொன்னார்….

பாகவதரின் திரைப்பட புகழ் காரணமாகவும்,
திரைப்பட பாடல்களால் அவர் பெற்றிருந்த புகழைக்கண்டும் –
பொறாமையும், ஆத்திரமும் கொண்டிருந்த
அன்றைய கர்நாடக இசைக்கலைஞர்களும், சபாக்களும், அவருக்கு
சபா மேடைகளில் இடம் கிடைக்காதபடி பார்த்துக் கொண்டார்கள்.

இப்படி மேடை வாய்ப்புகளையும் இழந்த பாகவதர், கோவில்களில் பாடுவதை மட்டும் தொடர்ந்தார்… சில காலம் கழித்து மீண்டும் ஒரு முயற்சியாக தானே சொந்தமாக “ராஜமுக்தி” என்கிற ஒரு படத்தை அவரே தயாரித்தார். அதன் பிறகு இன்னமும் மூன்று நான்கு படங்களிலும் நடித்தார்….ஆனால் அவை எதுவும் எடுபடவில்லை….

மக்களின் ரசனை மாறி இருந்தது… கடவுள் மறுப்பு, சுயமரியாதை இயக்கங்கள் செல்வாக்கு பெறத் துவங்கி இருந்த காலம் அது.

பாகவதர் அத்தகைய படங்களில் நடிக்க மறுத்தார். வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் அவர் தெய்வ நம்பிக்கையை இழந்தவரில்லை. அசையா இறை நம்பிக்கை கொண்டிருந்தார்.

எனவே சுயமரியாதை கொள்கைகளை வைத்து “சொர்க்க வாசல்” என்கிற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டபோது, “ஒரு லட்சம் ரூபாய்” தருவதாகச் சொல்லி பாகவதர் அதில் நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால், பாகவதர் மறுத்து விட்டார்…( பிறகு அதில் கே.ஆர்.ராமசாமி நடித்து, படமும் ஹிட் ஆனது…)

அவரை அரசியலும் அழைத்தது… காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில்
போட்டியிடுமாறு தலைவர் காமராஜரே அழைத்தார். இருந்தாலும், பாகவதருக்கு அரசியல் ஆர்வம் இல்லை. தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி, தலைவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டார்.

எல்லா பக்கங்களிலும் தோல்வியையும், துன்பங்களையும், சந்தித்து வந்ததில், பாகவதரின் உடல்நிலை சீர்கேடடைந்தது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதிகளோடு, கண் பார்வையில் கோளாறும் உண்டானது.

பாகவர் எந்த நிலையிலும் தன் இறை நம்பிக்கையை இழக்கவில்லை.
மாரியம்மன் தன்னை கைவிட மாட்டாள் என்று நம்பினார்….
சமயபுரத்தில் ஒரு இடம் எடுத்து தங்கிக்கொண்டு, 45 நாட்கள் தினமும் சமயபுரம் மாரியம்மன் சன்னதியில் பக்திப்பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்… அதைக்கேட்கவும் பெருங்கூட்டம் வந்தது.

பல பொதுநல நிகழ்ச்சிகளில், உதவிநிதி கச்சேரிகளை நடத்தி – நிதிதிரட்டிக் கொடுத்தார். ஆனால், அந்த நிலையிலும் தன் பக்திப்பாடல் நிகழ்ச்சிகளுக்கு பணம் பெற்றுக் கொள்ள மறுத்தார்.

அந்த காலகட்டத்தில், திருச்சி வந்த, தென்னிந்திய நடிகர் சங்க
செயலாளராக இருந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பாகவதரின் நிலையைக்கண்டு மனம் வருந்தி, அவரை, தன்னுடன் சென்னைக்கு வருமாறும், நடிகர் சங்கத்தின் சார்பாக அவருக்கு நிதி உதவி செய்வதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் அழைத்தார்.

ஆனால், பாகவதரின் தன்மானம் இதையும் மறுத்தது….

இறுதியில், நோய் முற்றிய நிலையில், தானாகவே சென்னை சென்று
1959, அக்டோபர் 22, அன்று, அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக ‘அட்மிட்’ ஆனார்….

தமிழ்த்திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர், துணைக்கு
யாருமின்றி, தன்னந்தனியாக, உள்நோயாளியாக அரசின் இலவச
மருத்துவமனையில் சேரக்கூடிய துர்பாக்கியத்திற்கு உள்ளானார்….

இந்த கட்டத்தில், பாகவதரின் இளமைக்க்கால வரலாறு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்….

பிறந்தது மாயவரம்- மார்ச் 1, 1910….
தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆசாரி.. பொற்கொல்லர்…
அவரது சிறு வயதில் – அவர் குடும்பம் திருச்சிக்கு குடிபெயர்ந்தது.
சிறுவயதிலேயே இசையில் நாட்டம்….
படிப்பில் கவனம் போகவில்லை…

படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று தந்தை கோபித்துக் கொண்டதால், சொல்லிக்கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்…

எங்கெங்கோ, மகனைத் தேடி அலைந்த தந்தையிடம், யாரோ,
ஆந்திராவில், கடப்பாவில் “தியாகராஜனை” பார்த்ததாகவும்,
அங்கங்கே கூட்டங்களில் பாட்டுப்பாடி வருவதாகவும்,
அவனுக்கு பெரும் கூட்டம் திரள்வதாகவும் சொல்லவே, தந்தை
கடப்பாவிற்கு போய் மகனைப் பார்த்து திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்தார்…

மகனின் ஆர்வத்தையும், திறமையையும், உணர்ந்துகொண்ட அவர்,
மகனுக்கு அவன் மனம் போல் வாழ்க்கை அமைய முயற்சி எடுத்துக் கொண்டார்… இசைப்பயிற்சி கொடுக்க முயற்சித்தார்.
மதுரையைச் சேர்ந்த பொன்னு அய்யங்கார் என்பவரிடம், தியாகராஜன் 6 வருடங்கள் கர்நாடக இசையில் பயிற்சி எடுத்துக் கொண்டான்.

அந்த சமயத்தில் திருச்சியில், ரெயில்வேயில் பணியாற்றி வந்த
F.G.நடேச அய்யர், (இப்போதும் அவர் பெயரில் மேலண்ட புல்வாரில், இயங்குகிறது “திருச்சி, ரசிக ரஞ்சனி சபா”) இசை, நாடகங்களில் பெறும் ஆர்வம் கொண்டு, நாடகங்களை அரங்கேற்றி வந்தார்.

அவர் ஒரு இசைநிகழ்ச்சியில் தியாகராஜனை பார்த்து விட்டு, தனது ஹரிசந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடம் கொடுத்து, அரங்கேற்றினார்….. அந்த வேடத்தின் மூலம், நாடக மேடைகளில் தியாகராஜன் புகழ் பரவத் துவங்கியது.

1934-ல், (பாகவதரின் 24-வது வயதில்), அவர் அர்ஜுனனாக நடித்த புராண நாடகமான “பவளக்கொடி”யை, வர்த்தகரும், செல்வந்தருமான லக்ஷ்மண செட்டியார், ஆர்.எம்.அழகப்ப செட்டியார், புகழ்பெற்ற
டைரக்டர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை)
ஆகியோர் பார்க்க நேர்ந்தது…. டைரக்டர் சுப்ரமணியம் பவளக்கொடி
நாடகத்தை திரைப்படமாக்கலாம் என்று சொல்ல லஷ்மண செட்டியாரும்
ஒப்புக்கொண்டார். பவளக்கொடி திரைப்படம், முழுவதும் சென்னை அடையாறில் படமாக்கப்பட்டது.

பாகவதரின் முதல் திரைப்படமான “பவளக்கொடி”
மிகப்பெரிய வெற்றியை பெற்றது….
பாகவதர், தமிழ்த் திரையுலகில் ஒளிவிடும் நட்சத்திரமாக
பிரகாசிக்கத் துவங்கினார்….

1934-ல் ல் துவங்கிய பாகவதரின் ஏறுமுகம்
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு,
1944-ல் ஹரிதாஸ் ரிலீஸ் ஆகும் வரை தொடர்ந்தது….

அடுத்தடுத்து, நவீன சாரங்கதரா, சிவகவி, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், ஹரிதாஸ்… என்று வரிசையாக ஹிட்ஸ்….

இதில் சிந்தாமணி, அம்பிகாபதி, ஹரிதாஸ் ஆகியவை
Super Hit திரைப்படங்கள்…..சிந்தாமணியில் கிடைத்த
லாபத்தைக் கொண்டே,
அதன் தயாரிப்பாளர் மதுரையில் “சிந்தாமணி”
தியேட்டரைக் கட்டி விட்டார்….

பாகவதர் அதிகம் படங்களில் நடிக்கவில்லை…
அவர் நடித்தது மொத்தமே
14 படங்கள் தான்…

மருத்துவமனையில் சேர்ந்த 10 நாட்களில் – 1.11.1959 அன்று,
அதே மருத்துவமனையில் அகால மரணமாக 49 வயதிலேயே அவரது உயிர் பிரிந்தது.

கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற 1944 நவம்பரிலிருந்து, கடைசியில் உயிர்பிரிந்த நவம்பர் 1959 வரையில் உண்டான அவரது பிந்தைய வாழ்க்கையின் 15 வருட காலம் அவர் அனுபவித்த துன்பங்கள் நமக்கே நினைக்க வேதனையூட்டுவதாக இருக்கின்றன. இதை உண்மையில் அனுபவித்த அவரது மனம் என்ன பாடு பட்டிருக்கும்…?

அற்புதமான குரல் வளமும், இசை ஞானமும், அழகான தோற்றமும் கொண்ட, மக்களின் மனதைக்கவர்ந்த, தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஒருவரை – நமக்குத் தெரிந்து இந்த பிறப்பில், எந்தவித பாவச்செயலும் செய்யாத ஒருவரை, வாழ்க்கை இப்படி புரட்டிப்போட்டது எப்படி….? ஏன்…?

நிறைய தான, தர்மங்கள் செய்து, கேட்டவருக்கெல்லாம் உதவிசெய்து, பொதுநிகழ்ச்சிகளில் பாடி பணம் திரட்டி, கோவில்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி செய்து – பல நற்காரியங்களிலும் ஈடுபட்டு புகழின் உச்சியில் இருந்த ஒருவரை –

தலைகுப்புற கவிழ்த்து, கொலைகாரர் என்று பழி சுமத்தி, சிறைக்கு அனுப்பி, ஆயுள் தண்டனையும் விதிக்கப்பெற்று, வீடு வாசல் சொத்து சுகங்களை எல்லாம் இழக்க வைத்து,

இறுதிக்காலத்தில், அநாதரவாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, உயிர் விட வைத்த கொடுமை; MKT பாகவதரின் வாழ்க்கைக்கும், முடிவிற்கும்
யார் காரணம் சொல்ல முடியும்….? என்ன காரணம் சொல்ல முடியும்…?

ஆனால், இது பாகவதருக்கு மட்டும் தானா…?
அவர் வாழ்க்கையில் மட்டும் தானா…?

( அடுத்து பகுதி-8-ல் தொடர்வோம்…)

சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்.. சிவகவி….

——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஆடி அடங்கும் வாழ்க்கை …!!! (பகுதி-7) முடிவில்லாத கேள்விகள்…

 1. paiya சொல்கிறார்:

  Dear KM Sir
  excellent narration. You wrote a life history a person, who never deviated from good principles come what may . Good learning for younger generation. Thanks.

 2. Mani சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  இந்த பகுதி மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
  இந்த தலைப்பில் நீங்கள் எழுதும் எல்லா கட்டுரைகளுமே
  நன்றாக இருக்கின்றன. அதிலும் பாகவதரின் வாழ்க்கையை
  நீங்கள் சித்தரித்த விதம் மனதை உருக்குகிறது.
  விதியின் வலிமையைப்பற்றி சொல்ல இதைவிட வலுவாக என்ன வேண்டும் ?
  தொடர்ந்து நீங்கள் இதுபோல நிறைய எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி மணி,

   முயற்சிக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  உங்களின் வரிகள் படிப்பவர்களின் மனதை கனப்படுத்துகின்றது.
  சில சமயம் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மூச்சு முட்டிக்கொண்டு வருவதையும் உணர்ந்தேன். அருமையான எழுத்தாற்றல் மற்றும் இந்த படைப்பிற்காக எவ்வளவு தேடுதல்கள் மேற்கொண்டிருப்பீர்கள் என்பதையும் உணர முடிகின்றது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   எழுதுபவனுக்கு உற்சாகம் தரும் சொற்கள்.
   நன்றி நண்பரே.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: ஆடி அடங்கும் வாழ்க்கை …!!! (பகுதி-7) முடிவில்லாத கேள்விகள்… – TamilBlogs

 5. புதியவன் சொல்கிறார்:

  இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது.

  எதற்கும் காரணம் அவ்வளவு சுலபத்தில் தேடிவிட முடியாது. அவங்க அவங்களே ஒரு வேளை யோசித்தால் காரணம் கிடைக்கலாம். அப்படியே கிடைக்காவிட்டால், அது ‘விதி’ என்றுதான் எண்ணி ஆறுதல் படவேண்டும்.

  ஒரே செடியில் பூக்கும் மலர்கள், சில, கோவிலில் கடவுளர்களை அலங்கரிக்கிறது, சில பெண்களின் கூந்தலில், சில, இறந்தவர்களை.

  ‘முன் ஜென்ம வினை’ என்று சொல்லாமல், நடக்கும் நிகழ்ச்சிகள் எவற்றையும் நாம் புரிந்துகொள்வது கடினம்.

  மிகுந்த ஏழை, சாப்பிடவே வசதியில்லை. ஒரு ஜோதிடர் அவனைப் பார்த்து, இன்னும் ஓரிரு வருடங்களில் நீ பல வண்டிகளை வைத்திருப்பாய் பெரிய நிலைக்கு வருவாய் என்று சொல்கிறார். ஆனால், அன்றைக்கு அவனுக்கு சாப்பிட வழியில்லை. சில வருடங்களில் (2-3 வருடங்கள் என்று ஞாபகம்) அந்த ஜோதிடர் தனக்குத் தெரிந்தவர்களின் திருமணத்துக்குச் செல்கிறார். மண்டபத்தில் அவரை நோக்கி ஒருவர் வந்து வணங்கி க் காலில் விழுந்து, தான் அவர் கூறிய ஜோதிடத்தின்படி பணமுள்ளவனாக ஆகிவிட்டேன் என்கிறார். (எப்படி நடந்ததென்றால், கிராமத்தில் தூரத்து உறவினர், வயதான அம்மாள் இறந்துவிடுகிறார். இவரும் அங்கு சென்றிருக்கிறார். அந்த வயதான அம்மாளின் நெருங்கிய சொந்தங்கள் வரவில்லை. ஊர்ப்பெரியவர்கள், இவரைக் கொள்ளி போட்டு 10 நாள் காரியத்தை முடியுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி, இவர் எல்லாவற்றையும் முடித்தார். கடைசி நாளில், பக்கத்து ஊர் வக்கீல் வந்து, ‘இந்த அம்மாள், தனக்குக் கடைசிக் காரியம் செய்தவனுக்கு எல்லாச் சொத்தையும் எழுதியிருக்கிறார்’ என்று சொல்லி, ஊர்மக்கள் சொன்னதற்கேற்ப, இவருக்கே எல்லாச் சொத்தும் வந்துசேர்கிறது. அதில் இவர், ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்து சில வண்டிகள் ஓடுகின்றனவாம். அவர் அந்த பிஸினெஸை இன்னும் பெரியதாக்கத் திட்டமிட்டுள்ளாராம், என்று சொன்னார்).

  நாம் அண்ணாந்து பார்த்த புகழ் பெற்ற பலரும் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டிருக்கின்றனர். பலர், அவர்களது விதியின் பயனாகச் செய்த தவறுகளால். வி.கே.ராமசாமி போன்ற பலர் அதில் அடங்கும். (அத்தகைய விதி அவர்களைத் தள்ளும்போது, அவர்களுக்கு என்ன உதவினாலும் அதனால் பயன் இருக்காது, அதாவது விதியின் குறுக்கே நாம் நிற்க முடியாது. வி.கே.ராமசாமி அவர்களுக்கு ரஜினி கடைசி காலத்தில் உதவினார்-25 லட்சம், ஆனால் அது அவருக்குப் பயன் தரவில்லை. வலம்புரி ஜான், தாமரைக்கனி அவர்களும் விதியின் பயனாக கஷ்டப்பட்டவர். நான் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாற்றைப் படித்திருக்கிறேன், அவர் எழுதியது. அதிலும் விதியின் கரங்கள் நமக்குத் தெரியும். சுருக்கமாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார், தொழில் எதிலும் ஈடுபடமுடியவில்லை. அவரது அத்யந்த சிநேகிதன், அப்போ பெரும் அளவிடமுடியாத பணக்காரனாக இருப்பவர், எங்கேயோ சென்றவர், காரில் அவரைத் தேடிவந்து பார்த்து வருந்தி, இப்போதே பணத்தை எடுத்துக்கொள் என்று சொல்கிறார், பின்பு, அவரே பணம் வேண்டாம், என் இடத்தையே உனக்கு எழுதிவைக்கிறேன், சேலம்(?) சென்று தகவல் கொடுக்கிறேன், உடனே வா என்று சொல்லிச் சென்றவர், திடீரென இறந்துவிடுகிறார், இதுபோல் பல நிகழ்ச்சிகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்… காரணம், விதி அவருக்கு பணம் சேரக்கூடாது என்று வைத்திருக்கிறது. எழுத எழுத இவை நீண்டுவிடும். அதனால் நிறுத்திக்கொள்கிறேன்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது.//

   நன்றி புதியவன்.

   அதே போல் உங்கள் பின்னூட்டமும் சிறப்பாக இருக்கிறது. இதைப்போன்ற, நிறைய சுவாரஸ்யமான,
   பயனுள்ள தகவல்களுடன் கூடிய பின்னூட்டங்கள் இந்த தளத்திற்கு கூடுதல் பலம் தருகின்றன.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.