டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது …..திருச்சி அருகே, கம்பரசன்பேட்டையில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை


காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா ?
முதல்வரின் அறியாமை அவமானத்துக்குரியது –
என்று கோபப்படுகிறார் அன்புமணி ராமதாஸ்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

தடுப்பணைகளை மிக மிக எளிதாக, குறுகிய காலத்தில்,
மிகக்குறைந்த செலவில் கட்டி விடலாம். ஒரு பத்தடி உயர தடுப்பணையை கட்ட அதிக பட்சம் 15-20 கோடி ரூபாய் செலவாகலாம். காவிரியை ஒட்டியே சர்வே செய்தால், அதற்கு தோதான இடங்கள் நிறைய கிடைக்கும்.

இது பிரமாதமான பயன்பாடு உள்ள விஷயம். கம்பரசம்பேட்டை
தடுப்பணை கட்டிய பிறகு, அதன் பலன்களை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். காவிரியிலும், கொள்ளிடத்திலும், நீர் பெருகும்போது, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், காவிரிக்கரையோர விவசாய நிலங்களிலும், பாசன, குடிநீர்க் கிணறுகளிலும், ஆழ்துளைகுழாய்களிலும் குறைந்த மட்டத்திலேயே நீர் கிடைக்கிறது.

உபரி நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுக்கவும் – ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படுவது மிகவும் அவசியம்… ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போதே, 2014-ல் இதுபற்றிய தமிழக அரசின் கொள்கை முடிவுகள் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அம்மாவின் அரசு என்று சொல்லிக்கொண்டால் போதாது…. அம்மா அறிவித்த கொள்கையை மறந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்….முதல்வரின் தற்போதைய அறிவிப்பு தவறானது, ஜெயலலிதா அவர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுக்கு மாறானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை….

இதை கவுரவப்பிரச்சினையாக கருதாமல், அவர் தனது தவறான கருத்தை பகிரங்கமாக திரும்பப்பெற்று, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கும் தடுப்பணைளை கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்..

காவிரியில் மட்டுமல்ல… மற்ற ஆறுகளிலும், அதிகபட்சம் தடுப்பணைகள்
துரிதமாக கட்டப்பட வேண்டும்.

————

காவிரியில், திருச்சியை அடுத்த கம்பரசன்பேட்டையில் – காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையை நிரப்பி விட்டு,
சல சலவென்று காவிரி நீர் வழிந்து ஓடும் மகிழ்ச்சி தரும் ஒரு காணோளி காட்சி கீழே –

———————————————————————————————–

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை கீழே –
( ஆதாரம் – தினமணி வலைத்தளம் -19/07/2018 )

———————-

காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா?
முதல்வரின் அறியாமை அவமானத்துக்குரியது! அன்புமணி ராமதாஸ்
By DIN | Published on : 19th July 2018 02:22 PM |

——

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நீர் மேலாண்மை குறித்த அறியாமை
அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி
ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகள் என்பதால் அங்கு தடுப்பணைகளை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

முதல்வர் பதவியில் மட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நீர் மேலாண்மை குறித்த அறியாமை அதிர்ச்சியளிக்கிறது. ஒருவேளை தடுப்பணைகள் கட்டப்பபட்டால் மணல் கொள்ளையடிக்க முடியாது என்பதால் இப்படி கூறினாரா? என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள்; அங்கு தடுப்பணைகளை கட்டினால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று கூறியுள்ளார். முதல்வரின் இக்கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

காரணம்… எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மட்டுமல்ல, பொதுப்பணித்துறை அமைச்சரும் ஆவார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் தான் நீர்ப்பாசனத்துறையும் வருகிறது. அதனால் நீர் மேலாண்மை குறித்த அனைத்து புள்ளி விவரங்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், சமவெளிப் பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்ட எந்த தடையும் இல்லை என்ற அடிப்படை அறிவு கூட முதல்வருக்கு இல்லை.
இப்படி கூறியதற்காக அவர் அவமானத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சமவெளிப்பகுதிகளில் பெரிய அளவிலான அணைகளைத் தான் கட்ட முடியாதே தவிர, தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. திருச்சியை அடுத்த கம்பரசன்பேட்டையில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுப்பட்டிருக்கிறது.

அதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, அப்பகுதியில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.

கல்லணையில் தொடங்கி நாகை மாவட்டத்தில் கடலில் கலக்கும் கொள்ளிடம் ஆறு மொத்தம் 110 கி.மீ நீளம் கொண்டதாகும். இந்த ஆற்றில் மொத்தம் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று பாசனத்துறை பொறியாளர்கள் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இதையெல்லாம் முதல்வர் பழனிச்சாமி படித்திருக்க வேண்டும்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால்
தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், அதைத் தடுக்க இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட ஆணையிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 09.06.2014 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில்

தடுப்பணைகள், தளமட்ட சுவர்கள், கதவணைகள் என 61 சிறு அணைகளை ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை அமைச்சர் இல்லை என்றாலும் கூட, பின்னர் அந்த பதவிக்கு வந்தவுடன் இதுகுறித்தெல்லாம் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை முறையாக நடத்தியிருந்தால் கூட இப்படி ஓர் உளறலை அவர் செய்திருக்கமாட்டார்.

இதற்கெல்லாம் மேலாக, யாருடைய வழியில் ஆட்சி நடத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரோ, அதே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 04.08.2014 அன்று ட்டப்பேரவையில்,‘‘குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

இந்த உண்மைகள் ஒன்று கூட தெரியாமல் காவிரி பாசன மாவட்டங்களில் தடுப்பணைகளை கட்ட முடியாது என்று கூறியதன் மூலம் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி என்பது மணல் கொள்ளை நடத்தி கோடிகளை குவிப்பதற்கான துறை என்று நினைப்பவர்களுக்கு தடுப்பணை குறித்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, நீர் மேலாண்மை குறித்த பொது அறிவு சிறிதும் இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிலிருந்து விலக வேண்டும். பொதுப்பணித்துறையை இரண்டாக பிரித்து நீர்வள மேலாண்மைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.

இரு துறைகளை அவை சார்ந்த புரிதல் உள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிலுவையிலுள்ள தடுப்பணைத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதுடன், அனைத்து ஆறுகளிலும் குறைந்தது 5 கி.மீ தொலைவுக்கு ஒரு தடுப்பணைக் கட்டும் திட்டத்தை ஐந்தாண்டு காலத் திட்டமாக வகுத்து செயல்படுத்தவும் அரசு முன்வர வேண்டும் –

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது …..

 1. Pingback: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது ….. – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  யானை மாலை போட்டு பதவிக்கு வந்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

  மணல் கொள்ளையோடு, இந்த மாநிலத்தை தொழிற் பேட்டையாக கருதி விவசாய வளம் கொழிக்கும் எம் மாநிலத்தை தரிசாக்க துடிக்கும் மத்திய ஆட்சியாளர்களின் அவர் தம் கார்ப்பரேட்களின் ஆலோசனையாக கூட இருக்கலாமோ….!?

  இரண்டு ஏழரையும் ஒழிந்தாலொளிய விடிவு இல்லை.

 3. seshan சொல்கிறார்:

  check dams will keep the water always. it will disturb the sand looting. so they will not show any interest.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.