பிறப்பும், இறப்பும்…


..

பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய
ஒரு இடுகையை பார்த்தேன்….

நான் நீண்ட நாட்களாக சொல்லிக்கொண்டிருப்பதும், எனக்காக
இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதுமான ஒரு விஷயம்….

முதலில் இடுகையை படியுங்களேன்…

———————

திரு.இந்திரா பார்த்தசாரதி –
‘பிறப்பது அபத்தம், இறப்பது உறுதி’

———

இன்று ‘வாட்சப்பில்’ எனக்கு ஒரு செய்தி வந்தது. 2040ல் மனிதனுக்குச்
சாவே நேராது, இறந்து போக வேண்டுமென்றால் அது ஒருவன்/ஒருத்தி
முடிவாக இருக்குமென்று.

இது எனக்கு மகாபாரதத்தில் வரும் இரண்டு உட்கதைகளை
நினைவுறுத்தியது.

ஒன்று, யயாதிப் பற்றியது. இன்னொன்று துரோணர் மகன்
அஸ்வாத்தமன் குறித்து. ஒன்றில் சுக்கிராச்சாரியார் தமது மருமனாகிய
அரசன் யயாதிக்குச் சாபம் கொடுக்கிறார். இன்னொன்றில், கிருஷ்ணன்,
அஸ்வத்தாமனுக்கு சாபம் கொடுக்கிறான்.

யயாதிக்குக் கொடுக்கப்பட்ட சாபம் அவன் உடனே வயோதிகப் பருவம்
எய்த வேண்டுமென்பது.

அஸ்வத்தாமனுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் அவனுக்கு என்றும் சாவு
நேரக் கூடாதென்பது.

நீங்கள் ஆச்சர்யப்படலாம், ‘சிரஞ்சீவி’யாயிரு என்பது சாபமா வென்று.
கிருஷ்ணன் கெட்டிக்காரன். ‘ உனக்குச் சாவே நேராது’ என்று
சொன்னானே தவிர உனக்கு முதுமைப் பருவம் என்றும் வந்தடையாது’
என்று சொல்லவில்லை.

ஆனால் யயாதிக்கு மரணம் சம்பவிக்காது என்று சுக்கிராச்சாரியார்
உறுதியளிக்கவில்லை. கிழப்பருவம் எய்த நிலையில் சில ஆண்டுகளில்
அவனுக்கு மரணமே விடுதலையைத் தந்திருக்கக் கூடும்!

ஆனால் அஸ்வத்தாமனுக்கு உரிய வயதில் கிழப்பருவம் கூடினாலும்
அப்பருவத்திலேயே என்றென்றும் அவன் துன்பப்பட வேண்டுமென்பது
தான் சாபம்!

இதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிரஞ்சிவித்
தன்மையின் இலக்கணம்.

கிருஷ்ணன் முக்காலங்களையும் உணர்ந்தவன். இன்றையக் காலக்
கட்டத்தில், சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உறவு முறைகளே சிக்கலாகிக்
கொண்டு வரும் நிலையில், வயோதிகப் பருவம் மனிதனுக்கு எத்தனைப்
பிரச்னைகளை ஏற்படுத்தித் தருமென்று!’

இளமையிலும், நடு வயதிலும் அற்புதமான விற்போர் போராளியாக
இருந்திருக்கக் கூடிய அஸ்வத்தாமனை, வயதினால் பிணியுண்டு,
தோல் திரைத்து, நரை கூடிய ஒரு ‘குடு குடு கிழவனாக’க்
கற்பனை செய்து பாருங்கள். அவன் முதல் எதிரி கண்ணாடியாக
இருந்திருக்கும்!

குடும்பங்கள் இருக்கும்போதே இக்காலத்து முதியோர் அடைக்கல
இல்லங்களை நாடிச் செல்லும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பு இருந்த ஒரு கிழவன் யாரைத் தேடி எங்குப் போக முடியும்?

யயாதியாவது, தன் மகன் புரூவிடமிருந்து இளமையைக் கடன் வாங்கிச்
சில ஆண்டுகள் சுகமாக இருந்துவிட்டு கிழப் பருவம் எய்தும் முன்னே
சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான்!

அஸ்வத்தாமன், பாவம், கிழப் பருவத்தை அடைந்திருந்தாலும்
அவனால் சாக முடியாது. இந்தக் காலக் கட்டத்தில் நெருங்கிய உறவு
என்பதெற்கெல்லாம் ஒரு ‘shelf-date’ இருக்கும்போது ,
அஸ்வத்தாமனால் யாருடன் உறவு கொண்டாட முடியும்?

ஆகவே விஞ்ஞானிகளுக்கு என் வேண்டுகோள். இயற்கை விதிச்
சட்டங்களுடன் விளையாடதீர்கள். நோயில்லாமல் மனித இனம் வாழ
வழி செய்யுங்கள். பிறப்பும், இறப்பும் இயற்கையின் மேல்வரிச்
சட்டங்கள்.

——————————————————-

என்னுடைய பிரார்த்தனை –

இறைவா… எத்தனை ஆண்டுகள் – என்பது உன் விருப்பம்.. உன் விதி…!!
ஆனால், இருக்கும்வரை நோய்த்தொல்லை இன்றி வாழ அருள் புரி.
இறப்பு வரும்போது, நொடியில் சாகக்கூடிய வரத்தை மட்டும் தா…!!!

.
——————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பிறப்பும், இறப்பும்…

 1. Pingback: பிறப்பும், இறப்பும்… – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  ஆனால், எத்தனை வயதானாலும், உடலில் எவ்வளவு உபாதைகள் இருந்தாலும் கூட, பொதுவாக யாருக்கும் வாழ்க்கை போதுமென்று தோன்றுவதில்லையே.
  எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ; 89 வயது; இல்லாத வியாதிகளே இல்லை.
  சர்க்கரை, இரத்த அழுத்தம், முழங்கால் மூட்டுகளில் பிரச்சினை-நடக்க முடியவில்லை; இதயக் கோளாறு; இருந்தாலும் பேத்தியின் கல்யாணத்தை
  பார்த்து விட்டு தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பேத்திக்கு
  இப்போது தான் 12 வயது ஆகிறது !

 3. தமிழன் சொல்கிறார்:

  ‘சாவு’ என்பது மேலுலகச் சட்டம். அதை யாரும் மாற்றமுடியாது.

  மனிதனின் இயல்பான தன்னுணர்வு, ‘இன்னும் வாழவேண்டும்’ என்ற ஆசை. வேறு வழியில்லை என்று நினைப்பவர்களும், உணர்ச்சிவசப்படுபவர்களும் மட்டும்தான் ‘தற்கொலை’ முயற்சி செய்கின்றனர். எந்த வயதானவரும், ‘இன்னும் ரொம்ப வருஷம் நீங்க இருக்கணும்’ என்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வார்.

  என்னைப் பொறுத்தவரையில், எல்லோருக்குமே 70-80 முடிவாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. அல்லது, அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும்படியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால், 80ஏ போதுமானது என்பது என் எண்ணம். அதிகாரம் உள்ளவராக இருந்தால், ‘எப்படா போகப்போறார், தனக்கு அதிகாரம் கிடைக்கணுமே’ என்றும், பணக்காரனாக இருந்தால், ‘எப்போது அவருடைய பணம் தங்களை வந்துசேரும்’ என்றும், உடல்நிலை சரியில்லாதவராக இருந்தால், ‘எப்போது போவார்’ என்றும் நினைப்பதுதான் உலக இயல்பு. இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.

 4. bandhu சொல்கிறார்:

  எழுத்தாளர் நரசய்யா , ஆயுள் தண்டனை என்பது ஒரு விதத்தில் ‘ஆயுளே தண்டனை ‘ என்பது.. என்று எழுதியிருப்பார். எவ்வளவு உண்மை!

 5. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  உங்கள் பதிவிற்கு பதில் கருத்து எழுதினேன் அது பதிவு போல பெரியதாக இருக்கிறது நீங்கள் உங்கள் இமெயில் ஐடி அனுப்பினால் அதற்கு அனுப்புகிறேன்.படித்து பார்த்து வேண்டுமானால் எடிட் செய்து வெளியிட்டு கொள்ளுங்கள்

 6. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  வெகு காலத்திற்கு முன், நான் படித்த இது சம்பந்தமான ஒரு நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.புரிந்து கொள்வது சற்று சிரமமும் தான்.
  ஒரு சாமானியன் ஒருவன் தனக்கு சாவே வரக்கூடாது என்று மிகுதியாக ஆசை பட்டு கடவுளை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தான்.பல வருட கடுமையான தவத்திற்கு பின் கட்வுள் உள்ளம் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார்.
  கடவுள் : மகனே நான் உன் தவத்தை மெச்சினேன், என்ன வரம் வேண்டும்.
  சாமானியன் : கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது. இதற்காகத்தான் தவம் இயற்றினேன்.
  கடவுள்: சரி, அப்படி ஒரு வரத்தை நான் உனக்கு தந்தால் ,நீ எவ்வாறு உணர்வாய் ?
  சாமானியன் : மிகுந்த “ச”ந்தோஸம் .
  கடவுள்: (ஒரு நிமிட யோசனைக்கு பிறகு) சரி நீ கேட்ட வரத்தை தருகிறேன்.உனக்கு இனிமேல் சாவே வராது. இப்போது சந்தோசமா?
  சாமானியன் : மிகுந்த “த”ந்தோஸம்.

 7. Ganpat சொல்கிறார்:

  எழுபது வயது வரை தினந்தோறும் இரவு பத்து மணிக்கு படுத்து காலை ஐந்து மணிக்கு விழித்து கொண்டு. .எழுபதுக்குப்பிறகு “அவர்”தேர்வு செய்யும்
  எதோ ஒரு நாளில் இரவு பத்து மணிக்கு வழக்கம்போல படுத்து பிறகு எழுந்துக்கொள்ளாதவர் எவரோ,அவர்தான் உலகிலேயே அதிருஷ்டசாலி
  எனையாளும் ஈசன் செயல்.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கண்பத்,

  // “அவர்”தேர்வு செய்யும்
  எதோ ஒரு நாளில் இரவு பத்து மணிக்கு வழக்கம்போல படுத்து பிறகு எழுந்துக்கொள்ளாதவர் எவரோ,அவர்தான் உலகிலேயே அதிருஷ்டசாலி //

  இந்த அதிருஷ்டசாலிகளின் பட்டியலில் – என் பெயரையும் சேர்த்துக்கொள்ள

  உங்களையாளும் ஈசனிடம் எனக்காகவும்
  ஒரு வேண்டுகோள் வையுங்களேன் கண்பத். ….!

  -வேண்டுதலுடன்,
  காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   அண்ணா!,நிச்சயம் செய்கிறேன் மேலும் அந்த நாள் இன்னும் எட்டாயிரம் நாட்களுக்குப்பின் வரவேண்டும் என்றும் அதுவரை நீங்கள் நோய் நொடி இன்றி இந்த தளத்தை வழிநடத்தவேண்டும் என்றும் நீங்கள் கேட்காமலேயே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கண்பத்…

    ஆனாலும் இவ்வளவு…..? வேண்டாம் – punishment ஆகி விடும்…!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  அனைவருக்கும் பேராசைதான்.
  நோயில்லாமல் வாழணும்…
  தேவையான(?) பணத்தோடு வாழணும்
  குழந்தை குட்டியோடு வாழணும்
  சந்தோஷத்தோட வாழணும்
  நிம்மதியாக வாழணும்
  புகழோடு வாழணும்
  அறிவோடு வாழணும்
  இப்படி ஆளாளுக்கு பலப்பல பேராசைகள்.
  இப்படி பேராசைகளோடு ஆளாளுக்கு செத்துசெத்து வாழ்கின்றனர்.

  //நோயில்லாமல் மனித இனம் வாழ
  வழி செய்யுங்கள்//
  சான்சே கிடையாது ஐயா!
  நீங்கள் வைத்த இந்த வேண்டுகோளுக்கு யாரும் பதில் கூறவேமாட்டார்கள். ஏனெனில் பாதிக்கும் மேல் நோய்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் “சைகோ”-க்கள் தான் பலரும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அஜீஸ்,

   மற்ற ஆசைகளை கட்டுப்படுத்தவோ, விட்டு விடவோ – முயன்றால், பயிற்சி செய்தால் முடியும். முற்றிலுமாக இல்லாவிட்டாலும் – ஓரளவிற்கு என்னால் அதை அனுபவத்தில் கொண்டுவர முடிகிறது.

   ஆனால், நோயற்ற வாழ்வு என்கிற ஆசையை, sudden and quick End என்கிற வேண்டுகோளை – பிரார்த்தனையை விட முடியவில்லை.

   ஹிந்தியில் ஒரு வார்த்தை உண்டு… நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.. எவ்வளவு தான் பண வசதிகள், உறவுகள் – இருந்தாலும் – ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் – “ஜீனா ஹி முஷ்கில் ஹை….” என்பது தான் நிஜம்.

   அன்றைக்கு இறுதி நிகழ்வில் பேராசிரியர் அன்பழகனை பார்த்தபோது – எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது…
   என்ன இருந்து என்ன பயன்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.