பத்து காசுக்கு கூட பயனற்ற விவசாய சங்கங்களும்… அதன் தலைவர்களும்…


நிஜத்தில், தமிழ்நாட்டில் – தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மூன்றே மூன்று மாவட்டங்களத் தான் டெல்டா மாவட்டங்கள் என்று சொல்ல வேண்டும்.. முற்றிலுமாக காவிரி நீரை நம்பி விவசாயம் நடக்கிறது என்று இந்த இடத்தைத் தான் சொல்ல வேண்டும்….

நீளவாக்கில் 100 முதல் 150 கி.மீ.., அகலத்தில் ஆற்றிற்கு இருபுறமுமாக
மிஞ்சிப் போனால் முப்பது கி.மீட்டர்கள்.

இந்த 3 மாவட்ட விவசாயிகளுக்காக, மொத்தம் எத்தனை விவசாய சங்கங்கள் இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா…? விவசாயிகளுக்காக சங்கங்களா… அல்லது தங்களை தலைவர்களாக்கிக்கொள்ள, சுயநலவாதிகள் உருவாக்கியவை சங்கங்களா…?

ஊருக்கு ஒரு சங்கம் என்று சொன்னால் கூடப்பரவாயில்லை……
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சங்கம்… அதைத்தவிர
கட்சி எதுவும் இல்லாத தலைவர்களுக்காக சில சங்கங்கள்…..
இத்தனை சங்கங்கள் இருந்தென்ன பயன்…?

தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பது,
ஒரு அடி தூரத்திலேயே மைக் இருக்கும்போது காட்டுக்கூச்சல்
போடுவது, அவ்வப்போது வகை வகையான போராட்டங்களை
கண்டுபிடித்து, தொலைக்காட்சிகளுக்காக அரங்கேற்றிக் காட்டுவது –

இதை மட்டும் தானே அவர்கள் செய்கிறார்கள்…?
உருப்படியாக பாசிடிவ்வாக -விவசாயிகளுக்காக அவர்கள் எதையாவது செய்து பார்த்திருக்கிறோமா …?

இது கையாலாகாத அரசு என்றே வைத்துக் கொள்வோம்…
அரசு திட்டங்கள் எல்லாவற்றிலும் ஊழல்… வாஸ்தவம்..
திட்டச்செலவில் பாதியை லஞ்சமாகவே அரசியல்வாதிகள் கொள்ளை
அடிக்கிறார்கள்… உண்மை தான்… ஆனால், இதை ஒழிக்க யாருக்காவது
வக்கிருக்கிறதா…? ஒழித்தால் புதிய அரசு வந்தால் மட்டும் நிலைமை
மாறி விடும் என்கிற உத்திரவாதம் இருக்கிறதா …? எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே…?

இதில் இவர்களுக்கு பொறுப்பே இல்லையா…?
காவிரியில் தண்ணீர் வர வேண்டும் என்று மாதக்கணக்கில் போராட்டம்
நடத்தியவர்களுக்கு,

தண்ணீர் வரும்போது விவசாயத்திற்கு தாங்கள்
தயாராக இருக்க வேண்டுமென்று தெரியாதா…?
தங்கள் ஊருக்கு நீர் வரும் வழிகள் அடைப்பில்லாமல்
இருக்கின்றனவா என்று பார்ப்பது,
குளங்கள் தூர் வாரப்பட்டு, நீர் வரத்து
கால்வாய்கள் சரிசெய்யப்பட்டு விட்டனவா என்று உறுதி
செய்துகொள்வது அவர்கள் பொறுப்பில்லையா…?

ஆற்றில் நீர் வந்த பிறகு –

3 கி.மீ. தள்ளி, 2 கி.மீ. தள்ளி – காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது ஆனால் எங்கள் ஊருக்கு தண்ணீர் வரவில்லை…
குளங்கள் நிரம்பவில்லை… வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை என்று திரும்ப திரும்ப புகார்கள்… அலுத்துப் போகும் அளவிற்கு புகார்கள்…

குடி மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அரசு அறிவித்தபோது, இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்..? அந்த வேலைகள் சரியாக நடக்கின்றனவா… அதன் மூலம் தங்கள் தேவைகள் நிறைவேறுமா…? தங்கள் இடத்திற்கு தண்ணீர் வருவது உறுதி செய்யப்படுமா என்று அப்போதே இவர்கள் ஏன் கவனிக்கவில்லை…?

ஏன்…இப்போது கூடத்தான் –
இத்தனை விவசாயிகள் இருக்கிறார்களே…,
இத்தனை விவசாய சங்கங்கள் இருக்கின்றனவே….
எங்கெல்லாம் தண்ணீர் வரவில்லை…
தண்ணீர் வராததற்கு என்ன காரணம்…?
எங்கே அடைப்பு இருக்கிறது.., எங்கே தடுக்கப்படுகிறது..?
எங்கே தூர் வாரப்பட வேண்டும்.., எங்கே ஆழப்படுத்த வேண்டும்…
என்று இத்தனை குறுகிய ஒரு நிலப்பரப்பிற்குள் கண்டுபிடிக்க,
கணக்கெடுக்க எத்தனை நேரம் பிடிக்கும்…?

அந்தந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இதை சரி செய்ய முடியாதா…?
பட்டியல் போட்டுக்கொண்டு கலெக்டரை போய் பார்க்க முடியாதா…?
அவரை பிரச்சினையுள்ள இடங்களுக்கு பார்வையிட அழைத்து வர
முடியாதா…? வரமாட்டேனென்று சொல்லி விடுவார்களா…?

அரசாங்க உதவியே இல்லாவிட்டாலும் கூட,
அந்தந்த ஊர்ப் பஞ்சாயத்துக்களே இதைச் செய்யலாமே…
கிராம பஞ்சாயத்துகளை நிர்வாகம் செய்வது
அந்தந்த கிராம மக்கள் தானே…? 100 நாள் –
150 நாள் வேலைத் திட்டங்களை வைத்துக் கொண்டு, இந்த
தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதா…?

நூற்றுக்கணக்கான தடுப்பணைகளை, கிராம பஞ்சாயத்துகளின்
உதவியுடன், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் –
ரலேகான் சித்தியில் அன்னா ஹஜாரே கட்டி – பாலைவனத்தையே
பச்சைப்பசேல் கிராமங்களாக்கி காண்பித்திருக்கிறாரே…


..

இந்த so called தலைவர்கள் அதையெல்லாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படக்கூடாதா…?
கோஷம் போடவும், போராட்டம் நடத்தவும் மட்டும் தான் தலைவர்களா…? செயல்பட அல்லவா…? விவசாயிகளுக்கு உருப்படியாக எதையும் செய்து கொடுக்க இல்லையா …?

அண்மையில், தமிழகத்தின் மூத்த விவசாயி, மன்னார்குடி ரங்கநாதன் அவர்களின் பேட்டி ஒன்றை படித்தேன்… அதிலிருந்து கொஞ்சம் கீழே –

———-

நம் மாநிலத்தில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு ‘செக் டாம்’ வெகு சுலபமாக கட்டலாம். நாலைந்து வருடங்களுக்கு முன்னர் திருவாரூர் கலெக்டராக
இருந்த நடராஜன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு காரியம் பண்ணினார்.

அவர் செக் டாம் என்று எதையும் கட்டவில்லை…மாறாக சிவில் சப்ளையிலிருந்து, காலி கோணிப்பைகளை வாங்கி, ஆற்றில் 18 அடி ஆழம் வரை குழி தோண்டி, அந்த கோணிகளில் மணலை நிரப்பி, புதைத்து விட்டார்.

அந்தந்த பஞ்சாயத்துகளின் நிதியைக் கொண்டே இந்த வேலையை
செய்து விட்டார்… மணல் மூட்டைகள் பூமிக்குள் இருந்தன. தண்ணீர் அதன் மேல் ஓடியது. மணல், தண்ணீரை சேமித்து, பூமிக்குள் இறக்கியது. அந்த வருடம் நிலத்தடி நீர் செழிப்பாக இருந்தது. மாநில அளவில், திருவாரூர் மாவட்டம் 2-வது இடத்தைப் பிடித்தது….

அந்த நடராஜன் துணிந்து இந்த முயற்சியை செய்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டினர். அரசாங்கத்திடம் கூடுதல் நிதியுதவி கேட்காமலே, பஞ்சாயத்து நிதிகளைக் கொண்டே இந்த காரியத்தை செய்து முடித்தார்.

———–

இந்த மாதிரி, ஒவ்வொரு கிராமத்தவரும், ஒவ்வொரு விவசாய சங்கத்தவரும் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டாமா…?

உதவாக்கரை அரசாங்கம் என்று தெரிந்த பின்னும், ஒவ்வொன்றுக்கும் அதையே நம்பி இருப்பது ஏன்…? கூச்சல் போடுவதால் என்ன பயன்…?

விவசாயிகள், தங்கள் சின்ன சின்ன தேவைகளை,
தாங்களே ஒன்று சேர்ந்து யோசித்து, திட்டம் போட்டு,
தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நாள் எப்போது வரும்…?

கிராம பஞ்சாயத்துகள் நினைத்தால் – என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு தமிழ்நாட்டிலேயே இருக்கும் “ஓடந்துறை” பஞ்சாயத்து
உதாரணமாகத் தெரியவில்லையா ..?

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பத்து காசுக்கு கூட பயனற்ற விவசாய சங்கங்களும்… அதன் தலைவர்களும்…

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அரை மணி நேரமாக டிவி செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  நியூஸ் 18 தமிழ் செய்தி சேனலில், திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் என்கிற கிராமத்திலிருந்து சில பேட்டிகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். 10 நிமிடத்திற்கு மேலாக, திரும்ப திரும்ப, ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த 7-8 பேரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரே நிலம், ஒரே இடம், ஒரு வறண்டு கிடந்த வாய்க்கால்… அதைக்காட்டி திரும்ப திரும்ப, நாங்கள் மழையை நம்பி (விதையை) தெளித்து விட்டோம். இப்போது மழையும் இல்லை… தண்ணியும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிருபர் தண்ணீர் ஏன் வரவில்லை என்று கேட்கவே இல்லை. நீண்ட நேரம் அதையே திரும்ப திரும்ப சொல்லி விட்டு, கடைசியில் ஒரு நபர் மட்டும், ஆற்றின் ஆழம் அதிகரித்து விட்டது..
  வாய்க்கால் மேடாகி விட்டது… அதனால் தான் தண்ணீர் வரவில்லை என்று ஒரு காரணம் சொன்னார்.

  இந்த பிரச்சினையை முழுவதுமாக ஆராய, தொலைக்காட்சிக்கு மனமில்லை
  என்பது தெரிந்தது…. பிரச்சினை தீர்ந்து விட்டால், அவர்களுக்கு மேற்கொண்டு தீனி கிடைக்காதே…

  தொலைக்காட்சி என்ன செய்திருக்க வேண்டும்… பிரச்சினையை தீர்க்கும் வழிகளை ஆராய்ந்திருக்க வேண்டும். வாய்க்கால் ஏன் காய்ந்திருக்கிறது என்று விடை தேடி ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.

  அந்த வாய்க்கால் எங்கிருந்து துவங்குகிறது. …?
  அது ஆற்றில் துவங்கும் வாய்க்காலா…?
  அப்படியானால், அது துவங்கும் இடத்தில் சென்று,
  ஆற்றில் தண்ணீர் வருகிறதா… வருகிறது என்றால்,
  அது ஏன் வாய்க்காலில் செல்லவில்லை…?
  எதாவது தடுக்கிறதா…? அல்லது வாய்க்கால் மதவுகள்
  மூடப்பட்டிருக்கிறதா…? அல்லது இடையில் தண்ணீர் வேறு எதாவது திசைக்கு மடை மாற்றப்பட்டிருக்கிறதா…?
  உண்மையிலேயே வாய்க்கால் உயரமாகவும், ஆற்றின் மட்டம் தாழவும் இருக்கிறதா…? அப்படியானால் சென்ற வருடம் இந்த வாய்க்காலில் தண்ணீர் எப்படி வந்தது…? அந்த விவசாயிகளின் நிலத்திற்கும், இந்த ஆற்றில் வாய்க்கால் சேரும் இடத்திற்கும் எவ்வளவு தூரம்…?

  -இவற்றை எல்லாமும் ஆராய்ந்து, அந்த விவரங்களையும் தந்திருக்கலாம்.
  கூடவே, இந்த வாய்க்காலை சீர் செய்ய அரசு எதாவது நிதி ஒதுக்கீடு செய்ததா…? எதாவது வேலை மேற்கொள்ளப்பட்டதா…?

  இல்லையென்றால் அதற்கு காரணமான அதிகாரிகள் யார் , அலுவலகம் எது..? என்பன போன்ற விவரங்களையும் அதே தொலைக்காட்சி செய்தியில் தொடர்ந்து தந்திருப்பார்களேயானால், மக்களும் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டிருப்பார்கள்.

  அதிகாரிகள் மட்டத்தில் தவறு நடந்திருந்தால் – அது தொலைக்காட்சியிலும் வெளிப்படுத்தப்பட்டால் –

  அதன் விளைவுகளை – பலன்களை – 24 மணி நேரத்தில் பார்த்திருக்கலாம்.
  இது ஏன் செய்யப்படவில்லை….?

  பிரச்சினைகளை பூதாகாரமாக்கி காட்டி மக்களுக்கு வேதனையும், வெறுப்பும் உண்டு பண்ணுவது மட்டும் தான் ஊடகங்களின் வேலையா…? தீர்வுகளை காண முயலும் பொறுப்பு அவற்றிற்கு இல்லையா…?

  -காவிரிமைந்தன்

 2. Pingback: பத்து காசுக்கு கூட பயனற்ற விவசாய சங்கங்களும்… அதன் தலைவர்களும்… – TamilBlogs

 3. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  TRP படுத்தும் பாடு !!

 4. Mani சொல்கிறார்:

  ஊதிப் பெருக்குவது மட்டும் தான் மீடியாக்களின் வேலை.
  தீர்வு காண்பது அல்ல. மக்களின் நலனும் அல்ல.
  மக்களிடையே டென்ஷனை உண்டாக்க வேண்டும்.
  நாள் முழுவதும் அவர்களை தொலைக்காட்சியடியிலேயே
  உட்கார்ந்திருக்கச் செய்ய வேண்டும். டி.ஆர்.பி.யை பெருக்கிக்கொள்ள வேண்டும். அது தான் இவர்களின் குறிக்கோள்.

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // தொலைக்காட்சி என்ன செய்திருக்க வேண்டும்… பிரச்சினையை தீர்க்கும் வழிகளை ஆராய்ந்திருக்க வேண்டும். வாய்க்கால் ஏன் காய்ந்திருக்கிறது என்று விடை தேடி ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். // ராெம்ப ஆசை தான் உங்களுக்கு ….! நீங்கள் கேட்டுள்ள 15 கேள்விகளில் முதல் கேள்விக்கான விடையையாவது இவர்கள் கண்டுப்பிடிப்பார்களா என்பதே சந்தேகம் ….!

  நீங்கள் நினைப்பதெல்லாம் நிறைவேற அறத்தின் மீதும் , இந்த காேள வாழினங்கள் மீதும் , அவர்களின் உரிமைகள் மீட்கப்படவும் காக்கப்படவும் பற்றும் நேசமும் காெண்ட ஊடகங்கள் இனி உருவானால் தான் சாத்தியம்

  களப்பணியாற்ற நல்ல அறிவும் பாேர்க்குணமும் நன்நடத்தையும் ஊடகஅமைப்புகளுக்கு அவசியமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் …ஆனால் தற்பாேது அவ்வாறு செயல்பட நினைக்கின்ற ஒரு சிலவற்றின் நிலை நாடறிந்த ஒன்று தானே ….?

  உங்களது கேள்விகள் உருவாக காரணமாக இருந்த அந்த ஊடகத்திற்கு ” தற்காலிக நன்றி “….! ஏனென்றால் அங்கே என்ன நிலை என்பதை உங்கள் மூலம் அறிய வைத்ததற்கு ….!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.