ஜெயகாந்தனின் இந்த கதை – நிகழ்காலத்திற்கு பொருந்தக்கூடியதாக தெரிகிறதா….?


1972-ல் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய “ஒரு பக்தர்…”. என்கிற ஒரு சிறு
கதையை அண்மையில் படித்தேன். அதில் வர்ணிக்கப்பட்டிருக்கும் சில விஷயங்களை, நிகழ்காலத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்காமல் இருக்க முடியவில்லை….

ஜெயகாந்தனின் அந்த கதையிலிருந்து, என் சிந்தனையை பாதித்த சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்…. நமக்கு கதை முக்கியமல்ல –
ஹிட்லர் காலத்திய நிகழ்வுகளைப்பற்றிய இந்த வர்ணனைகள் தான் முக்கியம்… நீங்களும் படித்துப் பாருங்களேன்…

—————————————-

அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது.

யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும் – ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே அந்த ஒருவரின் பைத்தியத்திற்கு ஆட்பட்டது.

பகுத்தறிவு உடைய எவனுமே சற்று யோசித்தால் கற்பனையிலும் தாங்க முடியாத காரியங்களை ஒரு தேசத்தின் ராணுவமே செய்தது. அது பிற தேச ராணுவங்களையும் – தன்னுடைய பைத்தியக்கார வெறியை ஒரு நோய்போல் தொற்ற வைத்துத் தொடர்பும் உறவும் ஏற்படுத்திக் கொண்டது.

ஒரு தலைவனின் ஆணை அல்லது ராணுவக் கட்டுப்பாடு என்பதன் பெயரால் உலகத்தையே அந்தக் கொலைவெறி குலுக்கி வைத்தது.

அன்றைய ஜெர்மனியில் ‘அடால்ப் ஹிட்லருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது’ என்று ஆராய்ந்து கண்ட வைத்திய நிபுணர்களும் அதை வெளியே சொல்ல அஞ்சினர்.

ஒரு தனி மனிதனின் பைத்தியக்காரத்தனம் அவனது அதிகார பீடத்தால், அவனது சமுதாய அந்தஸ்தால், அவனது தேசியத் தலைமையால், ஒரு தேசத்தின், ஒரு காலத்தின் பைத்தியக்காரத்தனமாயிற்று.

முன்பு ஒருமுறை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரிடம் நான் கேட்டேனே, அந்தக் கேள்வியையும் அவரது பதிலையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

‘இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, நாம் குறைந்து போனால், நாம் உள்ளேயும் அவர்கள் வெளியேயும் இருக்க நேரிடும் அல்லவா?’

” எண்ணிக்கையில் எவ்வளவு அதிகரித்தாலும் அவர்கள் ஒன்றிணைந்த பலமாக ஆக முடியாது… ஏனெனில், தனித்தனி நியாயங்களும்
தனித்தனி நடைமுறைகளும் கொண்ட அவர்கள் சிதறுண்டு போன உலகங்கள்.

அவர்கள் ஒரு உலகத்தை நிர்வகிக்கவோ, அதன் தன்மையைத் தீர்மானிக்கவோ முடியாதவர்கள் ” என்று நண்பர் சொன்னார்.

ஹிட்லரைப் பற்றிய, நாஜி ராணுவத்தைப் பற்றிய இந்த உதாரணம் நமது
ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு முரணாயிருக்கிறதே என்று
தோன்றுகிறதல்லவா?

மனவியல் நிபுணர்கள் ஹிட்லருக்கு மட்டும்தான் பைத்தியம் என்று
கண்டுபிடித்தார்கள். நாஜி ராணுவத்தைச் சேர்ந்த அனைவருக்கும்
(அவர்களது பைத்தியக்காரத்தனத்தால் உலகமே பாதிக்கப்பட்டிருப்பினும் கூட) பைத்தியம் என்ற நோய் முற்றாகப் பிடித்து விட்டது என்று மருத்துவ சாஸ்திரம் சொல்லவில்லை.

இங்கு நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. ‘பைத்தியம்’ என்கிற நோய் வேறு. ‘பைத்தியக்காரத்தனம்’ என்கிற அறியாமை வேறு.

‘வக்கரிப்பு’ என்கிற மன நோய்க்கு ஆளான ஒருவனை ஒரு ஜன சமூகமே சர்வ வல்லமை பொருந்திய தலைவனாக ஏற்றுக் கொண்ட ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற அறியாமையினால் அல்லது தெய்வத்துக்கு நிகரான சர்வ வல்லமை பொருந்திய ஒரு தலைவனுக்குப் பைத்தியம் என்ற நோய் பிடித்த பிறகும் அதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஜன சமூகத்தின் பைத்தியக்காரத்தனம் என்கிற அறியாமையினால்தான் அந்தக் காரியங்கள் நடந்தேறின என்று புரிந்து கொண்டால்,

எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு
இந்த உதாரணம் முரணல்ல என்பது தெளிவாகும்.

ஒரு பைத்தியக்காரனின் மூளைக்கோளாறு அவனுக்கு இருக்கும் அந்தஸ்தாலும், அவன் மீது பிறருக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளினாலும் பல காலம் மறைந்திருக்கலாம்.

பைத்தியங்கள் புத்திசாலிகளாக – அதீத புத்திசாலிகளாகவும் இருக்க முடியும்.

அதே காரணத்தினாலேயே ஒரு மன நோயாளியின் மீது அறியாமல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளின் காரணமாக அவனது நோய் மற்றவர்களையும் பாதிக்கிறது. சிலருக்குச் சில சமயங்களில் அந்த நோயே தொற்றி விடுவதும் உண்டு. சிறுகச் சிறுக அந்நோய்க்கு ஒரு தேசமே கூட இரையாகும்.

( இங்கே ராணுவம் என்பதற்கு பதிலாக,
கட்சிக்காரர்கள்… அபிமானிகள்.. என்று வைத்துப் பார்த்தால்…
சில ஒற்றுமைகள் புலப்படலாம்…! )

…….. இப்படி மேலும் தொடர்கிறது அந்த கதை….!

——————————

பின் குறிப்பு –

இந்த இடுகைக்கு,
புகைப்படம் தேர்ந்தெடுத்துப் போட வேண்டிய கட்டத்தில் –
கொஞ்சம் யோசனையாக இருந்தது… எதைப்போடலாம்….?
ஜே.கே., நிஜ ஹிட்லர் அல்லது…………… என்று சில options இருந்தது…!

எதற்கும் இதைப்போட்டால் safe ஆக இருக்குமென்று தோன்றியது…!!!
எனவே, இதையே – போடுகிறேன்… முழுமையாக ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் கூட….!!!

..

..
_________________________________________________________________________________

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஜெயகாந்தனின் இந்த கதை – நிகழ்காலத்திற்கு பொருந்தக்கூடியதாக தெரிகிறதா….?

  1. Mani சொல்கிறார்:

    ஓ யெஸ். நிச்சயம் பொருந்துகிறது.
    ஆனால், நீங்கள் நம்ம ஊர் தலைவருக்கும் ஹிட்லர் மீசை வைத்து படம் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 🙂

  2. Mani சொல்கிறார்:

    மன்னிக்கவும் கே.எம்.சார். நம்ம தலைவைரின் படத்தை இந்த மாதிரி கூகுளில் போட இன்னும் யாருக்கும் தைரியம் வந்திருக்காது இல்லையா ?

  3. Pingback: ஜெயகாந்தனின் இந்த கதை – நிகழ்காலத்திற்கு பொருந்தக்கூடியதாக தெரிகிறதா….? – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.