எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுவாரஸ்யமான அனுபவம்….


mgr-2

நேற்றைய தினம் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றிய ஒரு இடுகையை
பதிப்பிக்கும்போது, நான் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த தளத்தில் –
“எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……” என்கிற
தலைப்பில் ஒரு இடுகை எழுதியிருந்தது தானாகவே wordpress link-ல்
வந்தது….

எனக்கும் அந்த இடுகை நினைவில் இருந்தது. எப்போது எழுதினேன் என்பது தான் நினைவில் இல்லை…. இப்போது லிங்க் பார்த்தவுடன் அதை எடுத்து முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். எழுத்து நடை மாறி இருந்தாலும், இப்போதும் ஓரளவு சுவாரஸ்யமாகவே இருப்பதாகத் தோன்றியது.

விமரிசனம் தளத்திற்கு நிறைய புதிய வாசகர்கள் வந்து கொண்டே
இருக்கிறார்கள்…அவர்கள் பழைய இடுகைகளை
தலைப்புகளை வைத்து தேடிக்கண்டுபிடித்து படிக்க இங்கே வாய்ப்பு, வசதி குறைவு… எனவே, அவர்களும் படிக்க தோதாக, மீண்டும் ஒரு முறை அந்த இடுகையை இங்கே பதிப்பிக்கலாமா என்று தோன்றியது…

அந்த சமயத்தில் அது 3 பகுதிகளாக வந்திருந்தது.
அதைக் கொஞ்சம் சுருக்கி, எடிட் செய்து 2 பகுதிகளாக போடலாமென்று
தோன்றியது….

முதல் பகுதி கீழே – அடுத்த பகுதியையும் இன்றே மாலையில்
பதிப்பிக்கிறேன்.

———————————————–

சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் மத்திய அரசின் முக்கியமான துறை ஒன்றில் பணிபுரிந்ததும், அரசுப்பணியில் இருக்கும்போதே, 20 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயப் பணிகளில்
ஈடுபாட்டுடன் செயலாற்றியதும் அற்புதமான அனுபவங்கள் பலவற்றை
எனக்குத் தந்தன.

என் அலுவலக மற்றும் பொதுவாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களில்
மற்றவர்களும் ரசிக்கக்கூடிய அல்லது
எதாவது ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு
பயன்படக்கூடிய சில அனுபவங்களை மட்டும்-

தகுந்த இடைவெளிகளில் இங்கு பதிவுசெய்ய வேண்டும் என்று எனக்குத்
தோன்றியது.

இவற்றை எழுதுவதன் இன்னொரு பலன் –
பழைய நினைவுகளை அசை போடும்போது எனக்கு கிடைக்கும் 
“மலரும் நினைவுகளின்” சுகம்…!!

——————

( நிகழ்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, என் நினைவிலிருந்து இவைகளை எழுதுவதால், சில இடங்களில் எதாவது தகவல்கள் சரியாகக் கூறப்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு…)

இந்த அனுபவங்களில் சில சமயங்களில்
விஐபி க்கள் சிலரும் வருவார்கள் …..

——————

நான் பணியில் இருந்தபோது,
தொழிற்சாலை சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான
பொது நிகழ்வுகளில் – எனக்கு என்று எப்போதும்
குறிப்பிடத்தக்க ஒரு பங்கு இருக்கும்.

இவை என் வேலை சம்பந்தப்பட்டவை அல்ல –
பொதுவாகவே, தொழிற்சாலைக்கு அப்பாற்பட்டு –
வெளியே எனக்கு சமூக நலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இருந்த
ஈடுபாடும், அனுபவமும், என் மேலதிகாரிகளுக்கு என் மீதிருந்த
நம்பிக்கையுமே அவர்கள் இத்தகைய பொறுப்பை எனக்கு
அளித்ததற்கான காரணங்கள்…

இனி எதிர்வரும் இடுகைகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து, இந்த அறிமுகமே போதுமானது….

———————–

1984ஆம் ஆண்டு, மார்ச் மாதம்.
நான் அந்த சமயத்தில், திருச்சி அருகே மத்திய அரசின் பாதுகாப்புத் துறை பொறுப்பில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாகத்துறையில், ஒரு சிறிய பிரிவின் பொறுப்பாளராகப் பணியில் இருந்தேன். ( மேல் நிலையும் இல்லை –
கீழ் நிலையும் இல்லை – நடுநிலை அதிகாரி….!)

அந்த சமயத்தில் தமிழகத்தில் எம்ஜிஆர் தான் முதல்வர்.

மத்தியில், தமிழகத்தைச் சேர்ந்த – ஆர்.வெங்கட்ராமன் (ஆர்வி) அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
(பிற்காலத்தில் அவர் ஜனாதிபதி பதவியையும் வகித்தார் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் …)

ஆர்வி அவர்கள் தான் பதவியில் இருக்கும்போதே
தன் செல்வாக்கைப் பயன்படுத்தி – தமிழகத்திற்கு எதாவது செய்ய வேண்டுமென்று மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் தன் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்புத் துறையில், புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முனைந்தார். (
ஏற்கெனவே திருச்சியில் ஒரு தொழிற்சாலை 
இருந்தது ….)

முடிவெடுக்கும் முன்பு விஷயம் வெளியில் தெரிந்தால்,
இடத்தைப் பற்றிய சர்ச்சைகள்/போட்டிகள் நிறைய ஏற்படும் என்பதால்
தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களுடன், இடம் குறித்து – ரகசியமாக கலந்தாலோசித்திருக்கிறார்.

திருச்சியில் ஏற்கெனவே இருந்த பாதுகாப்புத் துறை தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சுமார் 500 ஏக்கர் அளவிற்கு பயன்படுத்தப்படாமல்,
காலியாகவே இருந்ததால், அதையும், அதையொட்டி இன்னும் 500 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்வது தமிழக அரசுக்கு சுலபமாக இருக்கும்
என்று எம்ஜிஆர் அவர்களும் கூறியதால், புதிய தொழிற்சாலைக்கான இடம் திருச்சி என்று ஆர்வி அவர்களால் முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 4, 1984 – ஞாயிற்றுக்கிழமை – அன்று
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும்
விழாவை வைத்துக்கொள்வது என்று பாதுகாப்பு
அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டது.

விழாவிற்கு முந்திய ஞாயிறு வரை – இந்த செய்தி யாரிடமும் சொல்லப்படவில்லை. திங்கள் காலை, ஆர்வி அவர்களின் உதவியாளரிடமிருந்து நான் பணிபுரிந்து வந்த
தொழிற்சாலையின் ஜெனரல் மேனேஜர் (ஜி.எம்.)அவர்களுக்கு
தொலைபேசி மூலம் இது குறித்த சில விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஜிஎம் அவர்கள் உடனடியாக என்னை தன் அறைக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்தார். அவரது அறையில் நான் நுழையும்போதே – தொடர்ந்து எங்கள் துறையின் தலைமைச்செயலகம் உள்ள கல்கத்தாவிலிருந்து ஜி.எம்.முக்கு
அடுத்த தொலைபேசி…!

இன்னும் 6 நாட்களில் நடைபெற விருக்கும்
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்யும் பொறுப்பு எங்கள் ஜி.எம். அவர்களிடம்
ஒப்படைக்கப்படுகிறது என்றும் அனைத்து ஏற்பாடுகளையும் உடனே துவங்கும்படியும்.

அடுத்து சொல்லப்பட்ட செய்தி இன்னும் விருவிருப்பானது –

ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்க, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல் கூறப்பட்டது.

கூடவே இன்னுமொரு கட்டுப்பாடும் –
விழாவிற்கு வரவேண்டியவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பாதுகாப்புத் துறையே முடிவு செய்து விட்டது என்றும் இது குறித்த தகவல்கள் வெள்ளிக்கிழமை தான் செய்தி எஜென்சிக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் என்றும், அதுவரை வேறு யாருக்கும் இது குறித்த எந்த செய்திகளையும்
வெளியிட அனுமதி இல்லை என்றும்…. !!!
—————

??????????????????????????????????????????????????????????

????????????????????????????????????????????????????????????

—————–

அவ்வளவு தான் –
அனைவருக்கும் உற்சாகமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. படுவேகமாக பணிகளை ஆரம்பித்தோம்.

முதலமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய 2 விவிஐபி க்கள் வருவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். எவ்வளவு பேரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள் -என்றார் ஜி.எம்.

நிறைய பேருக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மேடை நிர்வாகம்
( master of ceremony ) என் பொறுப்பு…

பாதுகாப்புத் துறை தொழிற்சாலையும், அதன் குடியிருப்பு பகுதியும் பொதுவாக வெளியாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. வெளியார் வருவதை செக்யூரிடியினர் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால், எம்ஜிஆர் வருவதால், சுற்றுவட்ட கிராம மக்கள் நிறைய பேர் வருவார்கள் என்றும், நாம் அதை தடுப்பது சரியாக இருக்காது என்றும் ஜி.எம்.மிடம் நான் எடுத்துச் சொன்னேன். ( ஜிஎம் வட இந்தியர் – உள்ளூர் அரசியல் விவகாரங்கள் எல்லாம்
அவருக்கு அதிகம் தெரியாது ).

எனவே, வெளியாரும் வர வசதியாக, தொழிற்சாலை எஸ்டேட் எல்லையில் பந்தல் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.(அருகே சூரியூர் கிராமம்…! ) பெரிய திடல் சுத்தம் செய்யப்பட்டது. மற்ற ஏற்பாடுகள் தொடர்ந்தன – அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடா விட்டாலும், சுற்றுப்புறங்களில் எம்ஜிஆர் வரும் செய்தி பரவி விட்டது.

பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தலைமையகம் அமைந்துள்ள கல்கத்தாவிலிருந்து உயர் அதிகாரிகள் சனிக்கிழமையே வந்து விட்டனர். அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர் –
ஒரு தமிழர் – பெயர் ஆர்கேசி.

ஆர்கேசி – நான் மதிக்கும் – மிகவும் வித்தியாசமான ஒரு
மனிதர்…!
அவர் இப்போது இல்லை – மறைந்து விட்டார். அவரைப் பற்றி இங்கு கொஞ்சம் விவரமாகவே சொல்ல விரும்புகிறேன்.

நான். ஆர்கேசி அவர்கள் தலைமைப்பொறுப்பிற்கு வருவதற்கு சில வருடங்கள் முன்னதாக ஜி.எம்.ஆக இருந்தபோது நான் அவரிடம் பணி
புரிந்திருக்கிறேன். என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

நானும் அவரையும், அவரது குணாதிசயங்களையும் மிக நன்றாக
அறிவேன்.

அற்புதமான மனிதர் அவர். தொழில் நுட்பத்தில் சிறந்தவர். மிகச்சிறந்த
எஞ்ஜினீயர். எப்பேற்பட்ட தொழில் நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டாலும், தீர்வு கண்டு பிடித்து விடுவார். அலுவலகத்தில் வேலையாக இருந்தாலும் கூட – தமிழர்களிடம் பேசும்போது தமிழில் தான் பேசுவார்.

எதாவது தவறு கண்டால் – காச் மூச் என்று கத்துவார். அடுத்த
நிமிடம் மறந்து விடுவார்.
சர்வ சகஜமாகத் தொடர்ந்து பேசுவார்….

ஒரே ஒரு பிரச்சினை –
உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு
ஒரு ஞாபக மறதி. எதையும் மறந்து விடுவார்.
5 நிமிடங்களுக்கு முன்னர் சொன்னது நினைவில் இருக்காது. மிக
நெருக்கமான மனிதர்களின் பெயரைக்கூட சமயத்தில் மறந்து விடுவார்.

ஒரு சமயம் தொழிற்சாலையில் இரவு ஷிப்டில் ஏதோ பிரச்சினை
என்று – பேண்ட்,ஷர்ட் அணிய மறந்து –
பனியன் வேட்டியுடன் காரை ஓட்டிக்கொண்டு
உள்ளே 
வந்துவிட்டார் என்றால் பாருங்களேன் …!

ஞாயிறு அன்று திருவிழா …..!!!
சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கல்கத்தாவிலிருந்து,
சென்னை வழியாக திருச்சி வந்து சேர்ந்தார் ஆர்கேசி.
நான் inspection bungalow-வில் அவருக்காக காத்திருந்தேன். ஏற்கெனவே தொலைபேசியில் தொடர்பில் இருந்தோம்

என்னைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார்.
எந்த கேள்வியும் இல்லை. “வா” என்று ஒரே வார்த்தையில் அழைத்து, அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார்.

ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன – இன்னும் என்னென்ன செய்ய
வேண்டும் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்… அதற்குள் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. (அப்போது செல் போன் எல்லாம்
அறிமுகமே ஆகவில்லை ….) அவர் தனிமையில் பேசட்டும் என்று, நான் அவரிடம்

“சார், நான் வெளியில் நிற்கிறேன். பேசிய பிறகு கூப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு, வெளியே வந்து வராந்தாவில் நின்று கொண்டிருக்கிறேன்.

5 நிமிடம் கழித்து அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தவர், என்னைப் பார்த்தவுடன்

” யார் நீ – எதுக்காக இங்க
நின்னுண்டிருக்கே…?” என்றாரே பார்ப்போம்.

( இதன் தொடர்ச்சி பகுதி-2-ல் இன்று மாலை ….)

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுவாரஸ்யமான அனுபவம்….

  1. Mani சொல்கிறார்:

    ஆர்வி என்கிற ஆர்.வெங்கட்ராமன், காமராஜரின் சிறந்த நண்பராக இருந்தார்.
    காமராஜ் அவர்களின் அமைச்சரவையில் ஆர்வி தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான் பல தொழிற்பேட்டைகள் தமிழ்நாட்டில் உருவாகின. ராணிப்பேட்டையின் தொழில்வளர்ச்சிக்கு முக்கிய காரணம் திரு.ஆர்வி தான்.
    ஆர்வி அவர்களின் மற்றொரு சாதனையை இங்கே நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்.
    இன்றைய நண்பர்களுக்கு ஆர்வியை பற்றி தெரிந்துக்கொள்ள இது உதவும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.