( பகுதி-2 ) -எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை….என் இடத்தில் வேறு யாராவதாக இருந்தாலும், நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால், நான் RKC-யை மிக நன்றாக அறிந்தவன் என்பதால் கவலையே படவில்லை.

உரிமையோடு அவரிடம் –
” வேணும் சார் – எனக்கு இதுவும் வேணும் –
இன்னமும் வேணும் – நான் தான் ‘கேஎம்’ –
எதாவது ஞாபகம் வருதா… – ரூம்ல ஒங்ககிட்ட பேசிண்டிருந்தேன். நீங்க போன்ல பேசி முடிக்கறதுக்காக வெளில வந்து காத்துக்கிட்டுருக்கேன்”

என்றேன்.

ஒன்றுமே நடக்காதது போல், தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் –
“ஏய் – ஒங்கிட்ட நல்ல சொக்கா எதாவது இருக்கா …?
கலரா, செக் போட்டு ….!
எம்ஜிஆர் வர்றார் இல்ல –
நாளைக்கு பங்க்ஷனுக்கு போட்டுக்க சொக்கா இல்லை –

 திருப்பதி எல்லாம் போய் – 3 நாளா ட்ராவல் பண்ணிண்டு இருந்ததுல எல்லாம் அழுக்காயிடுத்து” என்றார் மிகவும் வெகுளித்தனமாக…

அவரது அப்பாவித்தனத்தை இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பாக
இருக்கிறது.

நான் அவரிடம் “சார் என் சட்டை ஒங்களுக்கு சரியா இருக்காது.
(அவர் சற்று உயரம் குறைந்தவர்…)  நீங்க அந்த பொறுப்பை எங்கிட்ட
விடுங்க. காலைல நான் அதுக்கு வேற ஏற்பாடு பண்ணிடறேன்” என்று
சொல்லி பிறகு மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்தோம்.

இன்று எங்கே பார்க்க முடியும் இத்தகைய வெள்ளந்தியான
உயர் அதிகாரிகளை ….?

மறுநாள் – ஞாயிற்றுக்கிழமை – பொழுது விடிந்தது –
வித்தியாசமான தகவல்களோடு….!

Defence Minister ஆர்வி அவர்களுக்கு மிக அவசரமான ஒரு வேலை. ராணுவ தளபதியோடு வெளிநாடு செல்கிறார். எனவே அவரால் “அடிக்கல் நாட்டு விழா”வில் கலந்து கொள்ள முடியாது. சீனியர் அதிகாரி என்கிற முறையில் ஆர்கேசி அவர்களே வரவேற்கட்டும்.

முதல்வர் எம்ஜிஆர் அடிக்கல் நாட்டி, தலைமையுரையும் நிகழ்த்துவார். ஆர்வி அவர்களே எம்ஜிஆருடன் பேசி
எல்லாவற்றையும் விளக்கி விட்டார்……

– என்று பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களின்
செயலாளரிடமிருந்து தகவல் வருகிறது.

………..

atm

………..

ஆர்கேசி அவர்களுக்கு ஒரு புறம் நிம்மதி –
இன்னொரு புறம் டென்ஷன்.

நிம்மதி – ஒரு விஐபி யை கவனித்தால் போதுமே….!
டென்ஷன் – பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களை
ஆர்கேசிக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டு. ஆனால் எம்ஜிஆர்
அவருக்கு முற்றிலும் புதியவர். ஆர்வி அவர்களும் வந்திருந்தால் எம்ஜிஆரை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இப்போது தனியாக முதல் அமைச்சரை சமாளிக்க வேண்டுமே..!!

என்னைப் பொறுத்த வரையில் செக்யூரிடி ப்ரோடோகாலை சமாளிப்பது குறித்து மட்டுமே யோசனை. மற்றபடி இடம், சூழ்நிலை, விழா – எல்லாம் ஏற்கெனவே பழக்கப்பட்ட அனுபவம் கைகொடுக்கும் – சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.

மேலும், 10 -12 வயதில் ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’
 
போன்ற திரைப்படங்களைப் பார்த்தது முதலே ஒரு வியக்கத்தக்க ஹீரோவாக என் மனதில் வீற்றிருந்த எம்ஜிஆர் அவர்களை
முதல்முறையாக நேரில் பார்த்து,
அருகில் இருந்து பேசப்போவது,
நிகழ்ச்சிகளை அவரை முன்வைத்து நடத்துவது –
எல்லாம் எனக்கு ஒரு த்ரில்லிங்கான எதிர்பார்ப்பாகவே இருந்தது…! 

எனவே நான் ஆவலுடன் அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்….!!

காலையிலேயே தமிழகத்தின் மூத்த போலீஸ் அதிகாரிகள் விழா
இடத்திற்கு வந்து விட்டார்கள். நிகழ்ச்சி விவரங்கள், யார் யாருக்கு மேடையில்
இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது குறித்த விவரங்களை
எல்லாம் கேட்டறிந்து கொண்டு, மேடை அப்போது முதலே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்றும் ஏற்கெனவே  குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் மேடையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் போன்ற மற்ற பாதுகாப்பு விவரங்களையும் தெரிவித்தார்கள்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நாங்கள் ஏற்கெனவே அறிவித்த
விவரங்களில் எத்தகைய மாற்றங்களையும் அவர்களின் அனுமதியின்றி
மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

மதியம் ஒன்றரை மணியளவு இருக்கும். காலையிலிருந்தே நான் ஒன்றும் சாப்பிடவில்லை. வெறும் டீயை
குடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன்.
மிகவும்
அசௌகரியமாக் உணர்ந்தேன்.
சரி – வீட்டுக்குப் போய், கொஞ்சம் மோர் சாதம் சாப்பிட்டு வந்து விடலாம் என்று, ஆர்கேசி அவர்களின் உதவியாளரிடம் மட்டும் 15 நிமிடங்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தேன்.

கை, கால் – கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன்.
இரண்டு கவளம் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டேன்.
அதற்குள் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் நிற்கிறது.

அதிலிருந்து ஆர்கேசி யின் உதவியாளர் விரைந்து இறங்கினார்.
அதற்குள் நான் அருகே சென்றேன்.

“ஆர்கேசி மிகவும் பதற்றமாக நீங்கள் எங்கே என்று கேட்டார். இங்கே தான் பந்தலில் எங்காவது இருப்பீர்கள் என்று சொன்னேன். நீங்கள் வீட்டிற்கு போயிருக்கிறீர்கள் என்று சொன்னால் கத்துவார் – அதற்குள் ‘மைக்’கில் உங்களை எங்கிருந்தாலும் உடனே வரும்படி அறிவிக்கச் சொல்லி விட்டார். உடனடியாக போலீஸ் ஜீப் தான் கிடைத்தது. ஓடி வந்தேன் – என்ன விஷயமோ
தெரியவில்லை. நீங்கள் என் கூடவே உடனே வாருங்கள் –
என்னால் அவரை
சமாளிக்க முடியாது ” என்றார்.

கையை கழுவிக்கொண்டு உடனே ஜீப்பில் பறந்தேன்.
ஆர்கேசி நான் போலீஸ் ஜீப்பில் வந்திறங்குவதைப் பார்த்து விட்டார்.
“எங்க போயிட்டே நீ ?” என்று கேட்டவர் பதிலை எதிர்பார்க்காமல் விஷயத்தை ஆரம்பித்து விட்டார்.

மணி இரண்டு ஆகி விட்டது. எம்ஜிஆர் விமானம் இன்னும் சென்னையை விட்டே கிளம்பவில்லை என்று போலீஸ்
கமிஷனர் கூறுகிறார் என்றார்.

நான் ரொம்ப கேஷுவலாக, “சார் எம்ஜிஆர் எப்போதுமே கொஞ்சம் ‘லேட்’டாத் தான் வருவார் – அதில் கவலைப்பட ஒன்றும்
இல்லை.
ஆனால் நிச்சயம் வந்து விடுவார்” என்றேன்.

கத்தினார் ஆர்கேசி – “அறிவிருக்கா ஒனக்கு…?
இன்னிக்கு என்ன கெழமை …? ( ஞாயிறு…!)
நாலரை – ஆறு ராகு காலம். ராகு காலத்துக்கு முன்னாடி function-ஐ ஆரம்பிக்க வேண்டாமா…?
ராகு காலத்துலயா புது factory க்கு
foundation போடுவே …?”

அவர் பதட்டத்துக்கான காரணம் இப்போது புரிந்தது.
நான் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை…..!!

“அப்படி எல்லாம் ஆகாது சார்… எப்படியும் நாலு மணிக்குள்ள வந்துடுவார். நாலரைக்குள்ள ஆரம்பிச்சுட்டால் போறும் – அதுக்கப்புறம் தொடர்ந்தாலும் பரவாயில்லை” என்றேன் நான்.

“நாலரைக்குள்ள வரல்லேன்னா என்ன பண்ணுவே …?”-
 
டென்ஷனுடன் ஆர்கேசி.

“மொதல்ல நீங்க ஒக்காந்து கொஞ்சம் டீ சாப்பிட்டு
கூலா ஒரு சிகரெட் பிடிங்க சார். யோசிப்போம் – வழி
கிடைக்கும்”.
என்றேன் நான்.அதற்குள் எங்கள் ஜி.எம். கூட சேர்ந்து கொண்டார். (அவர் வட இந்தியர், கடைசியாக 8 வருடங்கள் லண்டனில் இருந்தவர். ஆர்கேசி ராகுகாலம் பற்றி இவ்வளவு கவலைப்படுவது அவருக்குப் புரியவில்லை…!)

யோசித்தோம். மாற்றுத் திட்டம் உருவானது.
4.20 மணிக்குள் எம்ஜிஆர் அவர்கள் வந்து விட்டால்,
விழாமேடைக்கு
அவரை அழைத்துச் செல்லாமல், முன் பக்கத்தில் கீழே தயாராக
வைக்கப்பட்டிருந்த “அடிக்கல்” லை 

(foundation stone )சிமெண்டுகரண்டியால் ஒரு கலவை மட்டும் பூசச்செய்வது.(அப்போதெல்லாம் இது தான் வழக்கம் …!)

-இதன் மூலம் முக்கியமான இந்த நிகழ்வு நாலரை மணிக்கு முன் 
( ராகு கால துவக்கம் …) முடிந்து விடும்.

பின்னர் மேடைக்கு அழைத்துச்சென்று, மாலை மரியாதைகள், உரை –
எல்லாவற்றையும் நிதானமாக வைத்துக்கொள்ளலாம்.

திரும்பவும் பிரச்சினையை கிளப்பினார் ஆர்கேசி.
“நாலு இருவதுக்குள்ள வரல்லேன்னா …?”

மீண்டும் யோசிக்கப்பட்டு அதற்கும் விடை கண்டுபிடிக்கப்பட்டது. (plan’B’)
இன்னும் தாமதமாக வந்தால், முதல் அமைச்சரை நேராக அருகிலிருந்த
inspection bungalow விற்கு அழைத்துச்சென்று, அறிமுகங்கள் செய்து
வைக்கப்பட்டு, டீ, பிஸ்கட் சாப்பிட வைத்து – முடிந்த வரை
இழுத்தடித்து, ஐந்தரை மணி வாக்கில் மேடைக்கு அழைத்துப்
போவது.

அங்கே மாலை, மரியாதைகள், வரவேற்புரை, புதிய தொழிற்சாலை பற்றிய விவரங்கள் என்று தொடர்ந்து பேசிவிட்டு, எம்ஜிஆர் அவர்களைப் பேசச்செய்தால் – அவர் பேசி முடியும்போது எப்படியும்
மாலை 6 மணியை தாண்டி விடும். (ரா.கா. முடிந்து விடும்…!)

பின்னர் முதல்வர் மேடையை விட்டு இறங்கி கீழே,
முன்பக்கத்தில் “அடிக்கல்” நாட்டுதலை முறையாகச் செய்து விட்டு,  அப்படியே கிளம்பலாம்.

நான் நிம்மதியாகி விட்டேன்…
ஆனால் ‘பாஸ்’ டென்ஷன் முழுவதுமாகப் போகவில்லை…!

மணி மூன்றே முக்கால். எம்ஜிஆர் அவர்களின்
விமானம் திருச்சி வந்திறங்கி விட்டது
என்றும்,
அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள் விழாப்பந்தல் வந்து சேர்ந்து விடுவார் என்றும் போலீஸ் தகவல் கிடைத்தது.

சரி plan ‘A’ போலவே முதலில் நேராக
‘laying of foundation stone’ என்று முடிவு
செய்யப்பட்டு, முதலமைச்சரை வழி நடத்தும் குழுவுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் சொல்லப்பட்டது.

நான் மேடைக்கு போய் ‘மைக்’ பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டேன்.

மணி 4.20. பந்தலின் பின்வழியே எம்ஜிஆர் அவர்களின் கார் நுழைகிறது. ( மேடைக்கு முன்னால், 100 சேர்கள் மட்டும்
– விசேஷ அழைப்பாளர்கள் – அவர்கள் பின்னால், சிறிது இடைவெளி விட்டு, சவுக்கு கட்டைகள் மூலம் மூன்று பக்கமும் தடுப்புவேலி. அதன்
பின்னர் முழுவதும் பொதுமக்கள் கூட்டம்.

அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்து மக்கள் பெருந்திரளில் கூடி இருந்தார்கள். அவர்களில் முதலில் பெண்களும், குழந்தைகளும்.
அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் கூட்டம்.

முதல்வர் காரை விட்டு இறங்கி நடக்கத் துவங்கியவுடன், நான்
ஒலிபெருக்கியில் அறிவிப்புகளைத் துவங்கினேன். 

“மாண்புமிகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்

விழாப்பந்தலுக்கு வந்து விட்டார். அடுத்து அவர்
முதலில் 
மேடைக்கு முன்புறம் உள்ள புதிய
தொழிற்சாலைக்கான 
‘அடிக்கல்’ நாட்டும் விழாவினை
தன் திருக்கரங்களால்

துவக்கி வைப்பார் – அதனைத் தொடர்ந்து விழா
நிகழ்ச்சிகள் 
மேடையில் நடைபெறும்” – என்று.

அறிவிப்பை கேட்டுக்கொண்டபடியே, கூட இருந்தவர்கள் வழிகாட்ட,
‘foundation stone’ இருந்த இடத்தை நோக்கி எம்ஜிஆர் அவர்கள் வேகமாக
நடக்கத் துவங்கினார்.

எம்ஜிஆரை நேரில் கண்டவுடன், அதுவரை உட்கார்ந்திருந்த மக்கள் கூட்டம் எழுந்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.
பெருந்திரளான மக்களை கண்டவுடன் எம்ஜிஆர் அவர்கள் தன்
பாதையை திருப்பிக் கொண்டு, தடைவேலியை நோக்கிச் செல்ல
ஆரம்பித்தார்…..

ஒவ்வொரு பக்கமாக, 3 பக்கமும் சென்று வேலிக்கருகே நின்றுகொண்டு,
அவரது trade mark symbolபடி,
மக்களை நோக்கி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி
கும்பிட்டும், இரண்டு கைகளையும் வீசிக்காட்டியும் புன்சிரிப்புடன் நடக்க
ஆரம்பித்தார்.

நான் மேடையிலிருந்து தொடர்ந்து
அறிவித்து (கதறிக்) கொண்டே இருந்தேன்….!!
“மக்கள் அமைதியாக தங்கள் இடத்திலேயே
அமரவும். முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி
வைக்கப் போகிறார்” என்று…..!!!

யார் கேட்கிறார்கள்…..?
( ஆர்கேசி அவசரம் அவர்களுக்கெப்படி தெரியும் …? )

இவர் ஒவ்வொரு பக்கமாகச் சென்று கைகளை வீசிக்காட்ட, மக்கள்
ஆரவாரம் செய்ய கொஞ்ச நேரம் ஒரே அமர்க்களம்
தான்.

– மணி 4.25, 4.30 எல்லாம் தாண்டி விட்டது.
இதற்குள், விசேஷ அழைப்பாளர்கள் எழுந்து நிற்க,
அவர்களில் தனக்குத் தெரிந்த சில காங்கிரஸ்
தலைவர்களைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் நின்று விசாரிக்க 
ஆரம்பித்து விட்டார்.

ஆக மொத்தம் ‘foundation stone’ அருகே எம்ஜிஆர்
சென்றபோது மணி 4.40….. !!!

பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர மேள ஓசை ஒலிபெருக்கியில்
ஒலிக்க அழகாக நல்ல ராகு காலத்தில்
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

முதல்வருடன் மேடையேறிய ஆர்கேசி அவர்களின்
கண்களை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு, மேற்கொண்டு
விழா நிகழ்ச்சிகளை விடுவிடுவென்று தொகுக்க ஆரம்பித்தேன்.

4.40 மணியளவில் துவங்கிய விழா சுமார் 5.45 மணியளவில் – 
( ராகு காலத்தில் துவங்கி ராகுகாலத்திலேயே ) நிறைவுபெற்றது…!!

ஒருவழியாக கூட்டமும் கலைந்து,
விஐபி க்கள் எல்லாரும் சென்ற பிறகு மேடையின் கீழே
போடப்பட்டிருந்த நாற்காலிகளில், நாங்கள் (விழா ஏற்பாட்டில் ஈடுபட்டு
இருந்தவர்கள் ) கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம்.

குளிர் பானங்களுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தேன்.

ஆர்கேசி அங்கே வந்தார்.

விழா முடிந்த நிம்மதி அவரிடத்தே இருந்தாலும்,
ராகுகாலம் சமாச்சாரம் அவரை உறுத்திக்கொண்டு இருந்தது.
“என்னப்பா – கடைசீல புது ப்ராஜக்டுக்கு ராகுகாலத்துல
போய் 
‘foundation stone’ போட்டிருக்கோமே”
என்றார்.

நான் அவரைத் தேற்றும் விதமாக –
“கவலையே படாதீங்க சார் – ராகு காலம் எல்லாம்
முடிஞ்சப்புறம் தான் பங்ஷன் நடந்துருக்கு” என்றேன்.

“ஏய் – என்ன சொல்ற நீ “ – அவர்.

“சார் நாம்ப ‘foundation stone’ போட்டபோது
சிங்கப்பூர் டைம்படி மணி ராத்திரி 7.10. …!!!

ராகு காலம் தான் 6 மணிக்கே முடிஞ்சு
போச்சே ” – இது நான்.
(அதற்கு முந்திய மாதம் தான் நான் சிங்கப்பூர் போய் வந்திருந்தேன் ….!)

ஒருக்கணம் திகைத்தவர் – “ஒதைக்கணும் ஒன்னை”
என்று சொன்னாலும், அவரது கண்களில் கொஞ்சம்
நிம்மதியையும், ஒரு வித திருப்தியையும் என்னால் உணர
முடிந்தது……

( அவரை அந்த நிலையில் இப்போது மீண்டும் நினைத்துப்பார்க்கும்போது மேஜர் சுந்தரராஜனின் “படவா ராஸ்கல்” தான் என் நினைவிற்கு வருகிறது …)

இப்போது எல்லாவற்றையும் மீண்டும் நினைத்துப்
பார்க்கிறேன். அரசாங்கங்களுக்கு ‘ஆர்கேசி சார்’
போன்ற உன்னத அதிகாரிகள் மிக அபூர்வமாகவே
கிடைப்பார்கள்.

அத்தகைய அற்புதமான அதிகாரிகளுக்கு
இந்த வலைத்தளத்தின் மூலம் … ஒரு சல்யூட்……

.
——————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ( பகுதி-2 ) -எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சியை….

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  உங்கள் அனுபவத்தை அற்புதமாக வர்ணித்திருக்கிறீர்கள்.
  நல்ல அனுபவம் – உங்களுக்கும், எங்களுக்கும். 🙂

 2. Ganpat சொல்கிறார்:

  முதலில் உங்களுக்கு என் சல்யூட் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இவ்வளவு அருமையான பதிவை கொடுத்தமைக்கு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி கண்பத் –

   நீண்ட நாட்களுக்குப் பிறகாவது தரிசனம் தந்தமைக்கு….!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  மிக சிறப்பான ஒரு அனுபவம். இந்த எழுத்துக்களை படிக்கும் பொது நானும் என்னவோ அந்த ஏற்பாட்டு குழுவில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஒரு சின்ன ஆசை. அந்த அதிகாரியின் (RKC sir) புகைப்படம் ஒன்று பிரசுரித்திருந்தால் சிறப்பு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   இன்றில்லாவிட்டாலும் –

   உங்கள் கருத்துக்கு நன்றி.
   அந்த அதிகாரியுடன் நான் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இப்போதும் என் வசம் இருக்கின்றன.

   அவற்றை பிரசுரிக்காததற்கு இரண்டு காரணங்கள்…

   1) அவர் முழுப்பெயரையோ, புகைப்படத்தையோ – அவர் அனுமதியின்றி நான் பிரசுரம் செய்வது
   முறையாக இருக்காது…

   2) அது வெளியானால் – கூடவே என் படமும் வெளியாகி விடுமே… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    நல்ல பக்குவமான சாமர்த்தியமான பதில் எப்பொழுதும் போல

 4. Mani சொல்கிறார்:

  “எப்பொழுதும் போல” – vazhi mozhigirane.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.