மொட்டை மாடி…. !!!


நேற்றிரவு மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது தெரிந்த வானம் –

வண்ணக் கோலங்கள் மறைந்த பின்னரும்
இன்னமும் கொஞ்சநேரம்
மாடியிலேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது….

அந்த கொஞ்ச நேரத்தை மொட்டை மாடியில் சில நினைவுகளூடே
செலவழித்தேன்…தொடர்பு இருக்கிறதோ இல்லையோ –
அப்போது தோன்றிய சில எண்ணங்களை அப்படியே இங்கே பதிவுசெய்ய
விரும்புகிறேன்…

மறதி என்கிற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் மனிதர்கள் அத்தனை
பேரும் பைத்தியம் பிடித்து தான் திரிவார்கள். இறைவன் மனிதருக்கு
தந்திருக்கும் மிகப்பெரிய கொடை மறதி….

அதே போல், நினைத்த மாத்திரத்தில், நாம் நினைக்கும் பழைய
விஷயங்களை நினைவிற்கு கொண்டு வரும் வசதியையும் கொடுத்தது,
படைத்தவன் நமக்கு காட்டிய இன்னொரு கருணை….!

பழைய துன்பங்களையே நினைத்து துவண்டு போகாமலும் –
வெற்றிக் களிப்புகளிலேயே மிதந்து கொண்டு, நிஜ உலகத்தை
மதிக்காமல் இருப்பதிலிருந்தும் நம்மை காப்பாற்றி மீட்பது –
இந்த மறதியும், நினைவும் தான்….

பல சமயங்களில், நிஜத்தில் கிடைக்காத சுகம் – நினைத்து பார்ப்பதில்
எவ்வளவு எளிதாக கைகூடுகிறது … கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்…!!!

———-

கொஞ்ச காலமாகவே – குடும்ப உறவுகளிடையே, பந்த-பாசங்களிடையே
நடக்கும் விஷயங்களில், விவாதங்களில் – நல்லது, கெட்டதுகளில் –
ஈடுபடுவதில் இருந்து நான் சற்று தள்ளி இருக்க முயற்சிக்கிறேன்….
வெறும் பார்வையாளனாக மட்டும் இருக்கிறேன்.

இந்த பந்த-பாசங்களிலிருந்தும், ஆசாபாசங்களிலிருந்தும், விலகியிருக்க
வேண்டுமென்று விரும்புகிறேன்… அதற்கான முயற்சி, பயிற்சிகளில்
ஈடுபட்டு வருகிறேன்…. இயன்ற வரை தொலைபேசி உரையாடல்களை
தவிர்க்க முயற்சிக்கிறேன்….

ஏன்….?

ஓரளவு குடும்ப பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்றிய பிறகு –
சற்று ஒதுங்கி நிற்பது தான், நமது அடுத்த கட்ட பயணத்தை சுலபமாக்கும்
என்பது என் கருத்து….

எப்போதும் நம்மையே எதிர்பார்த்து, அல்லது நாம் சொல்வதையே கேட்டு
செய்ய வேண்டிய நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களை வைப்பது,
திடீரென்று ஒரு காலகட்டத்தில் நாம் இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலை
ஏற்படுமேயானால் – அது அவர்களை மிகுந்த துன்பத்தில் கொண்டு
நிறுத்தி விடும்….

முதுமை அடைந்தபின் பிரிவு என்பது – மரத்திலேயே பழுத்து காய்ந்து
எந்தவித பிடிப்பும் இல்லாமல் காற்றடிக்கும்போது, பழுத்த இலை
தானாகவே உதிர்வதைப்போல், யாருக்கும் எந்தவித துன்பமோ, பாதிப்போ
இல்லாமல் நிகழ வேண்டும் என்பது என் கருத்து.

இயன்ற வரை, என் வாழ்வை ஒரு திறந்த புத்தகமாக வைத்துக்கொள்ள
முயற்சி செய்கிறேன்… என் தனி வாழ்வில் எந்தவித ரகசியமும் இல்லை.

என் குடும்பத்தாருக்கு தெரியாத எந்த நடவடிக்கைகளிலும் நான்
ஈடுபடுவதில்லை…

அதே போல் தான் என மனமும்… நான் உள்ளே நினைப்பதையே
வெளியில் பேசவும் முயற்சிக்கிறேன்…. இயன்ற வரை பொய்
சொல்வதில்லை….( சில சமயங்களில், சில நல்ல விளைவுகளுக்காக
மனைவி, மகள், பேத்தியிடம் – சில சின்ன சின்ன பொய்களைச்
சொல்வது உண்டு…)

நிகழும் சில சம்பவங்கள் நம்மை அதிகம் பாதிக்காமல் இருக்க
வேண்டுமென்றால் – சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வது
அவசியம்….

நான் என்னைச் சுற்றி உள்ளவரிடையே சில நல்ல நம்பிக்கைகளை
விதைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்….

அவற்றில் சில –

இயன்ற வரை – நல்லதையே நினை… நல்லதையே செய்…

” கெட்டவர்கள் எல்லாரும் நன்றாக வாழ்கிறார்களே…
நல்லவனாக நடந்து கொண்டும் எனக்கு மட்டும் ஏன்
இந்த துன்பங்கள்…? ” என்று நினைத்து எரிச்சல் கொள்ளாதே…
எதுவும் நிரந்தரமில்லை…

நல்லவராக நடந்துகொண்டும், நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றனவே
என்றால் அதற்கு காரணம் நமது தற்போதைய செயல்கள் அல்ல –
கர்மவினை என்று நினைத்து எதிர்கொள்ளப்பழகு….

நல்ல செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கர்ம-வினையை
எதிர்கொள்வது சுலபமாகும் என்பதை உணர்….

( இந்த காரணம் நிஜமானதா என்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட,
நிஜமென்று எடுத்துக்கொண்டு நடப்பதால் கிடைக்கும் நிம்மதியும்,
பலன்களும் – அதிகம் என்பதை உணர வேண்டும்…)

தவறு செய்தால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்கிற
பய உணர்வு தான், மனிதரை ஓரளவு நல்ல வழியில் நடக்கச் செய்கிறது
என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும்.

எனவே கர்ம வினைகளில் நம்பிக்கை அவசியம் –
தினை விதைத்தால் .. தினை விளையும்…
வினை விதைத்தால் … வினை விளையும் …
என்பதை உறுதியாக நம்பு.

நம்பிக்கையால் கிடைப்பது நிம்மதி…
அந்த நிம்மதியான வாழ்க்கையை தானே
அனைவருமே தேடிக்கொண்டிருக்கிறோம்…?

.
—————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மொட்டை மாடி…. !!!

 1. Ganpat சொல்கிறார்:

  மிகவும் அருமையான யதார்த்தமான கருத்துக்கள்.மிக்க நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி கண்பத்.

   ஒரு விஷயத்தை இங்கே சொல்லியாக வேண்டும்…
   நான் விமரிசனம் என்கிற பெயரில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி என் பொழுதை அதில் செலவழித்து வருகிறேன் என்கிற அளவிற்கு தான் என் குடும்பத்திற்கு தெரியும்.

   இதில் நான் எழுதும் இடுகைகளை, நானாக எப்போதாவது காட்டினாலொழிய, என் இல்லத்தினர் யாரும் படிப்பதில்லை என்பது எனக்கு ஒரு பெரும் சுதந்திரத்தை தந்திருக்கிறது…
   இல்லையேல் இத்தகைய இடுகைகள் – குடும்பத்தில் ஒரு குட்டி கலாட்டாவை
   உருவாக்கி இருக்கும்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    புரிகிறது! என்றுமே குடும்பத்தினரின் மனப்பாங்கு இம்மாதிரி விஷயங்களில் வேறு மாதிரித்தான் இருக்கும்.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! // ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
  சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
  தெய்வத்தின் கட்டனை ஆறு..// இந்த கட்டளைகளும் தாங்கள் கூறியுள்ள // கர்ம வினைகளில் நம்பிக்கை அவசியம் –
  தினை விதைத்தால் .. தினை விளையும்…
  வினை விதைத்தால் … வினை விளையும் …
  என்பதை உறுதியாக நம்பு.

  நம்பிக்கையால் கிடைப்பது நிம்மதி…
  அந்த நிம்மதியான வாழ்க்கையை தானே
  அனைவருமே தேடிக்கொண்டிருக்கிறோம்…? //…. உண்மைதான் — இதில் நம் பங்கு என்பது எது .. ஏது …? தினையை விதைக்க வைப்பவனும் — வினையை விதைக்க வைப்பவனும் யார் …? அவனின்றி ஓர் அணுவும் அசையாது — எல்லாம் ” அவன் செயல் ” — இயக்குபவனும் — இயங்க வைப்பவனும் — பலனை கொடுப்பவனும் — எடுப்பவனும் அவன்தானே …?

 3. D. Chandramouli சொல்கிறார்:

  You are a good role model for many of us of similar age. Thanks

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.