திட்டம் போட்டு திருடுற கூட்டம்…..


134 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டின் செல்வங்கள்
அத்தனையும் அதெப்படி குறிப்பிட்ட 100-120 குடும்பங்களிடம் மட்டும்
போய்க் குவிந்திருக்கிறது ?
இதற்கு பெயர் சுதந்திரமா ? இது தான் ஜனநாயகமா ?

ஆங்கிலத்தில் OPM (other people’s money…!)
என்று சொல்வார்கள்…
சில லட்சங்களைப் போட்டு கம்பெனிகளை துவக்குவது…

பிறகு, மற்றவர்கள் போடும் முதலையும்,
வங்கிகளிலிருந்து பெறும் கடன்களையும் வைத்து,
அரசு அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் துணையுடன் –
கம்பெனிகளை வளர்த்தெடுப்பது….

அதில் வரும் பணத்தைக் கொண்டு மீண்டும் அரசியல்வாதிகளை
விலைக்கு வாங்குவது… மேலும் மேலும்
புதிய புதிய தொழில்களைத் துவங்குவது……

இத்தகைய ஒரு நிலையைப் பெறவா நம் முன்னோர்கள் அத்தனை
தியாகமும் செய்தார்கள் ?

நாம் பெற்ற சுதந்திரத்தின் உண்மையான பலன் இந்த நாட்டின்
அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராமல் கொள்ளை அடிக்கும்
அரசியல்வாதிகளையும், அவர்களுடன் கூட்டணி சேர்ந்து –

சுயநலம் வளர்க்கும் மனசாட்சி இல்லாத பெருந் தொழிலதிபர்களையும்
சபித்துக் கொண்டே தான் இதை எழுதுகிறேன்.

கபோதிகள் என்று யாரைச் சொல்வார்கள் ?
கண் பார்வை அற்றவர்களைத் தானே ?

கண்கள் இருந்தும்,
அவர்களிடையே எதிரே காணும் காட்சியின் பாதிப்பு சிறிதும் இல்லாமல்
இருந்தால் – அவர்களை என்னவென்று கூறுவது ?

நேற்றைய புகைப்படங்களை பார்த்தீர்களா ?
பார்த்தாலே நெஞ்சை ஏதோ செய்யவில்லை ?
அந்த கடைநிலை மனிதர்களின் இருப்பிடத்தைப் பாருங்கள் –

நான் ஒரு 2 பெட் ரூம் ஃப்ளாட்டில் தான் வசிக்கிறேன்… இருந்தாலும் கூட
இரவு நேரத்தில், நடந்துசெல்லும்போது, ஃப்ளாட்பாரத்தில் சமைத்துக்
கொண்டிருக்கும் – குழந்தை குட்டிகளுடன் கூடிய குடும்பங்களைக்
காணும்போது, வயிறு நிஜமாகவே கலங்குகிறது… என் மனதில் குற்ற
உணர்வு பொங்குகிறது… இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்கிற
கேள்வி எழுகிறது…

நம்மிடம் மட்டும் அதிகாரமோ, பணமோ இருந்தால் –
நாம் செய்யக்கூடிய முதல் காரியமே இவர்களை நல்ல நிலைக்கு
உயர்த்துவதாகத் தானே இருக்கும் ?

ஆங்கிலத்தில் food, cloth & shelter –
இந்தியில் ரோட்டி, கப்டா, மகான்.
தமிழில் – உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்…

உலகில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும்
முதல் இடம் கொடுப்பது,
முக்கியத்துவம் கொடுப்பது
மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவையான -இந்த மூன்றுக்கும் தான்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் – இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் என்று –
நாம் அடிமையாக இருந்த காலத்திலேயே பாரதி சொன்னான்.
ஆனால் – இன்று சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் முடிந்த
பின்னரும் நம் சக மனிதர்கள் வசிக்கும் இடங்களை பார்த்தீர்களா ?
அவர்களின் நிலையை, கதியை கண்டீர்களா ?

இந்த நாட்டின் முக்கிய
வர்த்தக நகரம் மும்பை.

அதில் மிக மிக விலை மதிப்பு வாய்ந்த – மலபார் ஹில்ஸ் பகுதியில்
கட்டப்பட்டுள்ள ஒரு 27 அடுக்கு மாளிகையையும் அதன்
உள் அலங்காரங்களையும் நேற்றைய புகைப்படங்களில் பார்த்தீர்கள் !

இதற்கு மிக அருகிலேயே –
4 அல்லது 5 கிலோமீட்டருக்குள் தான்
நாம் காணும் காட்சிகளில் – பாதிக்கும் மேல் இருக்கிறது.

இந்த மாளிகையின் மாடியிலிருந்து பார்த்தாலே –
நாம் காணும் சேரிகளில் பாதி கண்ணுக்குத் தெரியும்.

மனசாட்சி உள்ள மனிதன் எவனாவது இதைச் செய்வானா ?
இவ்வளவு அருகிலேயே – சக மனிதர்கள் பன்றிகளைப் போல்
சாக்கடையில் உழலும்போது ஐந்து பேர் மட்டுமே கொண்ட
தன் குடும்பம் வசிக்க இத்தகைய மாளிகை ஒன்றை மெனக்கெட்டு
கட்ட மனசு வருமா ?

இவர்களுக்கு இத்தனை பணம் எங்கிருந்து வந்தது ?
அத்தனையும் இந்த நாட்டு மக்களிடமிருந்து வந்தது தானே ?
பல்வேறு விதங்களில் சுரண்டிப் பறித்தவை தானே ?

துணி ஆலைகள்,(textile)
இயற்கை எரிவாயு(natural gas),
எண்ணை (petrol),
தொலைபேசி (phones),
தொலைக்காட்சி சேனல்கள (satellite chanels)
சில்லரை வணிகம் (retails – super markets)-
ஏன் – காலணிகளைக் கூட விட்டு
வைக்கவில்லை இந்த …..

ஒரே குடும்பத்திற்கு
எப்படிக் கிடைத்தது இத்தனை வர்த்தகம் ?

இவை அனைத்தும் நேர்மையாகத் துவக்கியவையா ?

99.9 % ஏமாற்றி சம்பாதித்தது. இவர்களின் தந்தை திருபாய் அம்பானி
ரிலயன்ஸ் கம்பெனியை தொடங்கியபோது 60-களில் என்னென்ன
தகிடுதத்தங்கள் எல்லாம் செய்தார் என்பதை அந்த காலத்திய(1965-70)
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கிடைத்தால் நீங்களும் காணலாம்.( சிறு
வயதில் நான் படித்த கட்டுரைகளில் சில இன்னும் என் நினைவில்
இருக்கின்றன… )

2014, பிப்ரவரியில், கோதாவரி ஆற்றுப் படுகை (godhavari basin) ஊழல்,
மோசடி -ரகசியங்கள் கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்தது. கிரிமினல்
வழக்குகள் போடப்பட்டன… ஆனால், விஷயம் முழுவதும் வெளியே
வருவதற்குள் ஆட்சி மாறியது….மத்தியில் அவர்களுக்கு
தோழமையான கட்சி வந்தது…இப்போது அந்த வழக்கு போன இடம்
தெரியவில்லை….

இவர்கள் நினைத்தால் மந்திரி சபையையே மாற்றக்கூடிய அளவிற்கு
சக்தி கொண்டவர்கள்….இவர்கள் நினைத்தால் மத்தியிலோ,
மாநிலத்திலோ சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.
அந்த அளவிற்கு கோடி கோடியாக பணம் விளையாடுகிறது.
மந்திரிகள் பலர் இவர்களது pay roll-ல் இருக்கிறார்கள்… பிறகென்ன…?

பணம் சம்பாதிப்பதையோ, பணம் வைத்திருப்பவர்களையோ –
எல்லாரையும் நான் குறை சொல்லவில்லை.

மருந்துக்கு கூட மனிதாபிமானம் இல்லாத மனிதர்களைத் தான்
நான் ஏசுகிறேன்.

“ஊருணி நீர் நிறைந்தற்றே – உலகவாம்
பேரறி வாளன் திரு”
என்றார் வள்ளுவர்.

ஊர் நடுவே இருக்கும் நல்ல தண்ணீர்க் குளம் – எப்படி ஊர் மக்கள்
அனைவருக்கும் பயன்படுகிறதோ- அது போல் நல்ல மனிதர்களிடம்
உள்ள செல்வம் ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் படும்
என்பதே இதன் பொருள்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்” – என்கிற உணர்வு
உள்ளத்தில் இருக்க வேண்டாமா ?

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியையாவது-

ஏழைகளுக்கு பயன்படும் விதத்தில் –
நல்ல இலவச மருத்துவ மனைகளையோ,
தரமான உயர் கல்வி நிலையங்களையோ,
ஆதரவற்றோர் இல்லங்களையோ,
முதியோர் இல்லங்களையோ –
சமுதாயத்தின் அடிமட்டத்தில் உழல்கின்ற
ஏழை மக்களுக்கு கொஞ்சமாவது
நிம்மதி கொடுக்கக் கூடிய திட்டங்களையோ
-செயல்படுத்துவதில் செலவிட வேண்டாமா ?

சில விளம்பரங்கள் வெளிவருகின்றன… இவர்களின் நிறுவனங்கள் செய்யும் உதவிகள் பற்றி… ஆனால், இவர்கள் சம்பாதிக்கும்
பணத்தின் அளவோடு ஒப்பிட்டுப்பார்த்தால்…..அது ஒன்றுமே இல்லை…

எங்கேயோ பிறந்த பில் கேட்ஸ், இங்கே வந்து கருணை காட்டுகிறார்…
இங்கத்திய பில் கேட்ஸ்’களின் கருணை அரசியல்வாதிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது….

இந்த சகோதரர்கள் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள் –
போகும்போது எதைக் கொண்டு போனார் – இவர்களது தந்தை – மூடிய கைகளைத் தவிர ?

இவர்கள் எல்லாம் வெறும் பணம் உற்பத்தி செய்யும்
இயந்திரங்கள் மட்டும் தானா ?
சக மனிதர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனமே
இவர்களுக்கு இல்லையா ?

அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்தால் – இங்கே வேண்டுமானால்
லைசென்ஸ் கிடைக்கலாம் –

முடிவில் – மேலே போகும்போது யார் லைசென்ஸ் கொடுப்பார்கள் ?

நான் சாடுவது இதற்காக மட்டுமில்லை.

மேலே நீங்கள் பார்த்த 27 அடுக்குமாடி வீட்டிற்கு பெயர் வேறு ஒரு கேடு – “அண்டில்லா”. இதன் சொந்தக்கார சீமான் முகேஷ் அம்பானி !

மும்பை மல்பார் ஹில்ஸில் பரந்து விரிந்து கிடக்கும் அரபிக்கடலை நோக்கி பார்வையை விரித்திருக்கும். இந்த வீட்டின் இன்றைய மதிப்பு
சுமார் 1000 கோடி ரூபாய் !!!!!!!!!!!!!

இந்த வீட்டைக் கட்டியதிலும் ஒரு பெரிய வில்லங்கம் –
மும்பை நகரத்துக்குள்ளாக இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு.
அதுவும் மல்பார் ஹில்ஸ் பகுதியில் -ஊஹூம் வாய்ப்பே இல்லை.

அது மற்றவர்களுக்கு. அம்பானிகளிடம் அது நடக்குமா ?

இருக்கவே இருக்கிறது – இவர்களது பிரத்யேக வழி !

முஸ்லிம் சமுதாயத்தினரின்
வக்ப் போர்டுக்கு சொந்தமான இடம் –
கோஜா முஸ்லிம் சமுதாயத்தினரின்
குழந்தைகளுக்கான படிப்பிற்கான
இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

“கரிம்பாய் இப்ராஹிம் பாய் கோஜா ஆதரவற்றோர் அமைப்பிடம்” –
இருந்த – இன்றைய தினம் 500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள –
இந்த இடத்தை அம்பானியின் கம்பெனி 2002ஆம் ஆண்டு வெறும் 21.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

வக்ப் போர்டின் அனுமதி இல்லாமலேயே இந்த இடத்தை வாங்கியது சட்டப்படி செல்லுமா என்று அப்போதிருந்தே அடிக்கடி கேள்வி கிளம்புவது
வழக்கம் !

நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
எழும்பிய வேகத்திலேயே அது அடங்கியும்விடும் !

அவ்வப்போது இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் எல்லாம்
அம்பானி குழுவினரால் தகுந்தபடி “கவனிக்கப்படுகின்றனர்” போலும்….
எனவே சப்தம் கிளம்பிய வேகத்திலேயே அடங்கி விடுகிறது.

இவர்கள் பார்க்காத அரசாங்கமா ?
மாற்றாத மந்திரிகளா ?

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள –
உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியல் –


அதில், அகில இந்திய அளவில் முதல் இடமும்,
அகில உலக அளவில் 19-வது இடமும்,
பெற்றுள்ள – இந்த மனிதரால் –

– இந்த சமுதாயத்தில் யாருக்காவது ஐந்து காசுக்காவது
பயன் உண்டா ?

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திட்டம் போட்டு திருடுற கூட்டம்…..

 1. VS Balajee சொல்கிறார்:

  Sir
  I am not supporting Ambanis. But they are are 1000 times better than our corrupt politicians.
  Appox Reliance Industries paid customs and central excise duties of Rs 23,786 crore … for 4.8 per cent of the centre’s told collection of indirect taxes.and they have 100 other company pay taxes
  and Reliance Industries employ around 2 lakhs people and other group company list not added.. They doing good to India..
  Most the corrupt politicians keep money underground and business man use to build with more investment and aim for more profit..

  Govt should start plan and work for Indian villages.. If villages are good (like Ganddhi’s vision) country will grow. All govt should shift to villages one a month in each district (it possible in internet world) Let govt look small and hand made industries to grow,..

  Your long time reader and love to read your blog . God give health and happiness.

  VS Balajee

 2. Rajagopalan சொல்கிறார்:

  பாலாஜி ,

  62 வயது, ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ. சேர்மன் திருமதி அருந்ததி பட்டாச்சார்யாவை, ப்ரைவேட் டைரக்டராக ரிலையன்ஸ் நிறுவனம் எதற்காக 5 வருட காலத்திற்கு நியமனம் செய்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
  அதுவும் ஒருவருடம் காத்திருந்து பிறகு நியமனம் செய்ய காரணமென்ன
  என்று நினைக்கிறீர்கள் ?

 3. Selvarajan சொல்கிறார்:

  ஏழு ஆண்டுகள் …புகைப்படங்கள் …செய்தி …எல்லாம் அப்படியே …!.ஆட்சி மாறியது … பிரதமர் மற்றும் மந்திரிகள் மாறினார்கள் ..ஆனால் அன்றைய நிலை எல்லாம் இன்றும் பக்காவாக பாெருந்தி வருவது உங்களின் தீர்க்கதரிசனம் ..!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.