அற்ப ஆயுளில் மறைந்த ஒரு ஆக்-ஷன் ஹீரோ…..
புரட்சியாளர்களின் மறைவைப்பற்றி சொல்லும்போது,
“புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டார்” – என்று சொல்வார்கள்.

அப்படிச் சொல்வது உண்மையில் நெல் ஜெயராமன் அவர்களுக்கு
அப்படியே பொருந்தும்.

இயற்கை விவசாயத்திலும், பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து,
பெருக்குவதிலும் – மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த
திரு.நெல்ஜெயராமனின் அகால மரணம் என்கிற மறைவுச் செய்தி –

அவரை பீடித்திருந்தது பயங்கர உயிர்க்கொல்லியான கேன்சர் நோய்
என்கிற விஷயம் நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தபடியால் –
அதிர்ச்சியை உண்டாக்கா விட்டாலும் மிகுந்த வேதனையையும்,
வருத்தத்தையும் தருகிறது.

54 வயதெல்லாம் சாகிற வயதா என்ன…… மிகவும் துடிப்போடு
செயல்படும் வயது. காலனுக்கு அப்படி என்னதான் அவசரமோ…?

உண்மையில் விவசாயத்துறையில் ஆக்-ஷன் ஹீரோ – செயல் வீரர் –
என்றால் அவரைத்தான் சொல்ல வேண்டும்….160-க்கும் மேற்பட்ட
பாரம்பரிய விதைகளை புதுப்பித்து, பெருக்கி இருக்கிறார் என்றால்
சாதாரணமானவர்கள் செய்யக்கூடிய செயலா அது…?
பெரியவர் நம்மாழ்வார் உருவாக்கிய நல்முத்துக்களில் இதுவும் ஒன்று.

ஜெயராமன் அவர்களைப்பற்றி பல செய்தித்தாள்களிலும் புகழ்ச்சியாக
பல செய்திகள் வெளிவந்திருக்கின்றன….
அவற்றில், மிகச்சிறப்பாக BBC செய்தி தளத்தில்
வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரையை இங்கு வெளிடுவது
பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

————————————————————-

நெல் ஜெயராமன்: நூறு ரக விதை நெல், ஆண்டுக்கொரு திருவிழா –
சாமன்யனின் பெருங்கனவு
மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
——————-

நாம் மறந்த, அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல்
ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்
எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருமழை நாளில்தான் நானும்,
நண்பன் காசி வேம்பையனும் நெல் ஜெயராமனை சந்திக்க சென்றோம்.

அப்போது அவர் ‘நெல்’ ஜெயராமன் எல்லாம் இல்லை; கட்டிமேடு
ஜெயராமன்தான். நுகர்வோர் உரிமைக்காக தனது கிராம அளவில்
அப்போது தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில்
அவரது கவனம் மரபு நெல் ரகங்களின் மேல் குவிந்திருந்தது. அதற்கு
நம்மாழ்வாருடன் ஏற்பட்ட நட்பும் ஒரு காரணம்.

பயண நேர முழுவதும், வேம்பையன் நெல் ஜெயராமன் மீட்ட
நெல் ரகங்கள் குறித்து விவரித்து கொண்டே வந்தான்.
காட்டு யானம், பூங்கார், குடவாலை என அவர் மீட்ட
நெல் ரகங்கள் குறித்து விவரித்துக் கொண்டே வந்தான்.
இந்த பெயர்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தது.

புதியவை எப்போதும் சுவாரஸ்யமானவைதானே. அதனால் அந்த
சந்திப்பும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

மரபு நெல்லை மீட்க அவர் மேற்கொண்ட நெடும் பயணம் அந்த நெடும்
பயணத்தில் முடிவில் அவர் மீட்ட ஏழு வகை நெல் ரகங்கள் என அப்போது பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அது அவர் வாழ்க்கையின் திசை வழியையே மாற்றியதாக கூறினார். அதுவரை நுகர்வோர் உரிமைக்காக போராடியவர், அதன் பின் மரபு ரக நெல் வகைகளை மீட்கும், பரப்பும் பணிக்கு தம்மை அர்பணித்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

அந்த சமயத்தில் மகசூல் என்ற வார்த்தை எனக்கு புதிது. அதுமட்டுமல்ல,
அனைத்து நெல் ரகங்களின் அறுவடை காலமும் ஒன்று என்றே
நினைத்திருந்தேன். ஆனால், நெல் அறுவடை காலம் என்பது ரகத்திற்கு
ஏற்றார் போல மாறுபடும். குறைந்தபட்சமாக
பூங்கார் 70 நாளிலும், ஒட்டையான் 200 நாளிலும்
அறுவடைக்கு வரும் என்றெல்லாம் கண்களில் ஒளியுடன் விவரித்தார்.

ஒரு சொல்லோ, பொருளோ தொடர்ந்து நடைமுறை வழக்கத்தில் இருந்தால்தான், அவை உயிர்ப்புடன் இருக்கும். இது நெல்லிற்கும் பொருந்தும். ஒரு நெல்லை மீட்பது, காப்பது என்பது, அதனை தொடர்ந்து விதைப்பது. நெல் ஜெயராமன் விதைத்தால் மட்டும் போதாது. பல நெல் ஜெயராமன்கள் உருவாக வேண்டும். இதற்காகதான் அவர் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்தார்.

திருத்துறைப்பூண்டி ஆதிரங்கத்தில் அவர் ஒருங்கிணைத்திருத்த நெல்
திருவிழாவிற்கு சென்றேன். அப்போது அவர், “நெல்லை மீட்பதைவிட, அதை பாதுகாப்பது தான் சிரமமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு காரணம் அப்போது விவசாயிகள் மனதில் படிந்திருந்த எண்ணம்.
மரபு ரக நெல் வகைகள் விளைச்சல் தராது, நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் ஆழமாக நம்பினார்கள். இந்த அவநம்பிக்கை கலைப்பதுதான் கடினமாக இருந்தது என்றார்.

அவநம்பிக்கையிலுருந்து நம்பிக்கைக்கு –

நம்பிக்கை தளராமல் பயணித்த நெல் ஜெயராமன், மரபு ரக நெல்லின்
வணிகத்தையும் உறுதிபடுத்தினார்.

குறிப்பாக நாகபட்டினத்தில் நான் சந்தித்த விவசாயி சோமு கூறியவை நன்றாக நினைவிருக்கிறது. “நான் விவசாயத்திலிருந்து வெளியேற எண்ணினேன். சுனாமிக்கு பிறகு கடல் நீர் உட்புகுந்து நிலமெங்கும் உப்பு பூத்துவிட்டது. அந்த சமயத்தில் நெல் ஜெயராமன் கொடுத்த பூங்கார் நெல் ரகம்தான் நான் என் நிலத்தில் இன்னும் ஊன்றி நிற்க காரணம்” என்றார்.

இப்படிதான் பலரை நம்பிக்கை திசையில் பயணிக்க வைத்திருக்கிறார் ஜெயராமன். புற்று நோய் வந்த பின்பு, அவர் கலந்து கொண்ட ஓர் கூட்டத்தில், எனக்கு புற்றுநோய். என் மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருப்பது மரபு நெல் ரகங்கள்தான் என்று இறப்பை நோக்கிய பயணத்தையும் மரபு நெல்லை பரப்பும் பிரசாரமாக மாற்றினார்.

பூவுலகு நண்பர்கள் தனது அஞ்சலி பகிர்வில் கூறி இருந்ததை கோடிட்டு
இந்த கட்டுரையை முடிக்கிறேன், ‘விதைநெல், நடுகல்லாக மாறிவிட்டது’.

——————————————————————————-


செழித்து வளர்ந்திருக்கும் பூங்கார் நெல்….!!!


ஏற்கெனவே நம்மாழ்வார் அவர்கள் சில ஜெயராமன்களை
உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்… இப்போது, நெல்ஜெயராமன்
தன் பங்கிற்கு இன்னும் பல புதிய நெல் வாரிசுகளை உருவாக்கி
தமிழக விவசாயத்திற்கு அரும்பணியாற்றி இருக்கிறார்…

இந்தப்பயணம் அயராமல், அறுபடாமல் தொடர, ஏற்கெனவே அவர்களுடன்
தொடர்பில் இருந்தவர்கள், இணைந்து செயல்பட்டவர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அவசியம் செய்வார்கள்…

ஆண்டுதோறும் நெல் திருவிழா தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இவர்களின் அனுபவமும், செய்தியும் -தமிழக விவசாயிகள்
அனைவரிடமும் சென்று சேர இது அவசியம்.

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அற்ப ஆயுளில் மறைந்த ஒரு ஆக்-ஷன் ஹீரோ…..

 1. புதியவன் சொல்கிறார்:

  பலர் வாழ்ந்து மறைகிறார்கள். பலர் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். சிலர்தான் மற்றவர்களுக்காக மட்டும், அல்லது ஒரு பெரிய பொது நோக்கோடு வாழ்கிறார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  நம்மாழ்வார் நல்ல விதைகளை விதைத்திருக்கிறார். அந்த விதைகளும் நிறைய நல்ல விதைகளை விளைத்திருக்கும் என்று நம்புவோம்.

 2. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  ignore previous post. read below.

  மிக்க நன்றி. இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழவே பெரிய மனம் வேண்டும். மேலும் இம்மனத்துடன் விடாமுயற்சி செய்து அவர் கொணர்ந்த ஒவ்வொரு நெல்மணிகளும் ஒரு சகாப்தம். இதை இந்த அரசும் நம் தொழில்நுட்பமும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
  இவரைப்பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். விவசாயத்தையும் இயற்கையையும் காப்பாற்ற உழைத்த இவரை இப்படியாவது கவுரவப்படுத்த மெனக்கெட வேண்டும்.
  இன்றுமட்டுமில்லாமல் நாளையும் உணவு வேண்டுமல்லவா இந்த உலகிற்கு குறைந்தபட்சம் இந்த நாட்டிற்கு???!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.