எழுத்தாளர் சுஜாதாவின் 10 கட்டளைகள்… !!!கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இதை படித்திருந்தேன். பிற்பாடு பதிவில்
போட வேண்டும் என்று சேமித்து வைத்திருந்தேன்.

இளைஞர்கள், வாழ்க்ககையில் உருப்படியாக முன்னேற சில ஆலோசனைகளை – கட்டளைகள் என்றே எடுத்துக்கொள்ளலாம் – சுஜாதா இதில் கூறி இருக்கிறார். சுஜாதா இதைக்கூறியது சில ஆண்டுகளுக்கு முன்னர் என்றாலும், இன்றைய காலகட்டத்திற்கும் இது அநேகமாக பொருந்துகிறது…. கருத்து சுஜாதாவுடையது தான்; கூடவே என் வார்த்தைகளும் இதில் கொஞ்சம் கலந்திருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் இதில் பொதிந்துள்ள உண்மைகளை, அவசியங்களை
நிச்சயம் உணர்வார்கள்…. என்ன… நடைமுறையில் கொண்டு வர கொஞ்சம்
சிரமப்படுவார்கள்… முதலில் இந்த கருத்துகளை அவர்கள் உள்வாங்கிக்கொண்டு, மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டுமென்று
நான் விரும்புகிறேன் …. அதற்காகத்தான் இந்த இடுகை.

பார்ப்போமா –

…..

1. உருப்படியான, எதாவது ஒன்றின் மேல் உறுதியான நம்பிக்கை வேண்டும்;

உதாரணமாக கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல. அது கேள்வி கேட்காத, அசைக்க முடியாத
நம்பிக்கையாக இருக்க வேண்டும்….

கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

———–

2. வீட்டில், அப்பா, அம்மா இரண்டு பேரும் எதையாவது செய்யச்சொல்லி வேலை கொடுப்பது, பல சமயங்களில் இளைஞர்களுக்கு கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள்.

அவர்கள் கேட்பது நிச்சயம் உங்களால் சுலபமாக செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன்
கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

———–

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி ஷோ போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப்
போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த
உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம்.

இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை
க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

————-

4. குறைந்தது, நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை.

உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

————-

5. ஒரு ஐந்து ரூபாயாவது சம்பாதித்துப் பாருங்கள் – சொந்தமாக உங்கள்
உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்- அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

————–

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய ஜனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர்.

அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத மற்ற கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

————

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச்
சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

(குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும்,
அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,
உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.)

—————-

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக
இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி அவசியம் செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.

எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில்
ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

————–

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி
இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

———–

10. படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் ( பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).

எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது என்பது தான் முக்கியம்.இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்…

நாளாவட்டத்தில், எல்லாமே கைகூடும்…!!!

————————-

யோசித்துப் பார்த்தால் – இவற்றில் சில இன்றைய சில பெரியவர்களுக்கு கூட பொருந்தும் என்று தோன்றுகிறது …!!!!

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to எழுத்தாளர் சுஜாதாவின் 10 கட்டளைகள்… !!!

 1. Sharron சொல்கிறார்:

  KM Sir please write about Mr. Alok Verma, CBI Director. So sad to read news about him.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Sharron,

   அரசியல் தலைமை தான் சொல்பவற்றை நிறைவேற்றாதவரை – எதைச் செய்தாவது, பதவியிலிருந்து அகற்றுவது
   என்று தீர்மானித்து சகல வழிகளையும் அதற்கு பயன்படுத்துகிறது.

   நீங்கள் செய்ததற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லும் நீதிமன்றம், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்காக அரசியல் தலைமையை கண்டிக்க தயாராக இல்லை. மாறாக, அரசியல் தலைமை செய்ய நினைப்பதை செய்வதற்கு உதவி செய்கிறது.

   இந்த நிலையில், ஒரு அரசு ஊழியராக இருப்பவர், எவ்வளவு உயர்ந்த பதவியை வகித்தாலும், சட்டப்படியும்,அவர் தனது கடமை என்று நினைப்பதையும் செயல்படுத்த சுதந்திரம் இல்லாத நிலை தான் இன்று….

   இதில் யாராலும் இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.

   ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து திரு.அலோக் வர்மா நடந்தவை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய
   சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன்…. காத்திருப்போம்… வேறு வழி…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • அறிவழகு சொல்கிறார்:

    ///ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து திரு.அலோக் வர்மா நடந்தவை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய
    சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன்…. காத்திருப்போம்… வேறு வழி…?///

    ஒன்றிரண்டு மாதங்களில்… அதிகப் பட்சம் ஐந்து மாதங்களில் நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புவோம்.

    அதற்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக…

    ஐயா,

    நேற்று(11/01/2019) துபாயில் ராகுல் காந்தி அவர்களுக்கு கிடைத்த வரவேற்பும் ஒரு பெருங்கூட்டம் கூடியதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அது வரவழைக்கப் பட்ட கூட்டமாக அல்லாமல் தானாக கூடிய கூட்டமாகவே தெரிகிறது.

    அது இந்த பாசிச கும்பல்களின் அட்டூழியங்களை பொறுக்க முடியுமாமல் நல்ல மாற்றம் வேண்டி கூடிய கூட்டமாகவே தெரிகிறது.

    இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

    நான் எந்த அரசியல் தலைவர்களின் பின்பும் செல்பவன் அல்லன்.

    ஆனாலும், இந்த பாசிச கும்பல்களை யார் வந்து அகற்ற வலிமை பெற்றாலும், அது ராகுல் காந்தி அவர்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வது நம் கடமை என்று நம்புகிறேன். நல்ல உள்ளங்களையும் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நாட்டின் நன்மையை நாடி.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.AV has a taken a meaningful decision to resign from the post of a Chief Fire executive Officer.
  In my view, he may write a book narrating the entire episode.But no publisher will dare publish.
  If at all it comes to the market, it will be banned.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.