யார் ….” கடவுள் ” …???

தலைப்பை மீண்டும் ஒன்றிரண்டு முறை படித்துப் பாருங்கள்…
வெவ்வேறு அர்த்தங்கள் தோணலாம்…

நான் ஏற்கெனவே இந்த தளத்தில் எழுதிய ஒரு விஷயம் தான்.
இப்போது மீண்டும் ஒரு முறை எழுத வேண்டுமென்று தோன்றியது…

கீழே –

——————————————————————————————————–

tirupati-temple

கட – உள் ; கடந்து உள்ளே செல் என்பது தான் இதன்
பொருள் என்று கூட ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு…

நான் எப்போதாவது எழுதும் ஆன்மிக கட்டுரைகளில்
சொல்லி இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது,
நான் திருச்சியில் உள்ள நத்தர்வாலி தர்கா-வுக்கு
செல்வது உண்டு என்றும்,

– விபூதி பூசிய நெற்றியுடனும்,
வெள்ளை வெளேர் தாடி மீசையுடனும் –
ஒரு வயதான மனிதரை தர்காவில் பார்க்கும் சிலர்
அதனை புன்னகையுடன் அங்கீரிப்பது உண்டு என்றும்.

natharvali durgah

– என்னைப் பொருத்த வரையில், ஒவ்வொரு மதத்திற்காகவும்
தனித்தனி கடவுள் இருக்க முடியாது. கடவுள் என்பவர்
ஒருவரே. அவரை, ஒவ்வொரு மதத்தவரும்,
ஒவ்வொரு பிரிவினரும், அவரவர் தம் தம் விருப்பப்படி
உருவகித்துக் கொள்கிறார்கள் – வழிபடுகிறார்கள்….!

இன்றைய மெயிலில், நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த
ஒரு forward message-ல்
கண்டிருந்த செய்தியை எழுதுவோமே
என்று தோன்றியது….

நண்பர் அனுப்பிய தகவல் அப்படியே கீழே –

—————————————————————————————————

திருப்பதியில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க,
அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித
சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது
‘அஷ்டதள பாத பத்மாராதனை’ சேவை.
இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

‘அஷ்டதள பாத பத்மாராதனை’ எனப்படும் இந்த ஆர்ஜித
சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல்
நடைமுறையில் உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற
ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார்.

திருப்பதியை அடைந்தவுடன் ஏழு மலைகளையும் கடந்து
நடந்தே சென்ற அவர் திருமலையை அடைந்தார்.

மகா துவாரத்துக்கு ( பிரதான நுழைவாயில் ) சென்ற அவர்,
அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவரை நேரே
தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.
அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்தின் செயல்
அலுவலரிடம் (EO) அனுப்பி வைத்தனர்.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம்
வேறு ஒரு விஷயம்…

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக்
கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி
மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல்
மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம்
அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி
திருமலை தேவஸ்தானம் உதயமானது. திருமலையின் நிர்வாகம்
முழுக்க முழுக்க இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி 50 ஆண்டுகள்
நிறைவடைவதையொட்டி அதன் பொன்விழாவை
பிரம்மாண்டமாக கொண்டாட தேவஸ்தானம் தரப்பில்
அப்போது திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதற்காக
பல நாட்கள் பல ரவுண்ட் மீட்டிங்குகள் நடத்தப்பட்டன.

ஆனாலும் பொன்விழாவுக்கு என்ன செய்வது, எந்த மாதிரி
கொண்டாடுவது என்று எந்தவொரு முடிவுக்கும்
அவர்களால் வர இயலவில்லை. இது போன்றதொரு
சூழ்நிலையில் தான் அதிகாரிகள் தேவஸ்தான கமிட்டியிடம்
வந்து அந்த முஸ்லீம் பக்தரின் கோரிக்கை பற்றி தெரிவித்தனர்.

அப்போது போர்டு ரூமில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களின்
மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. குமாஸ்தா ஒருவர் மெல்ல
அறைக்குள் சென்று, EO வை சந்தித்து, முஸ்லிம் பக்தர்
ஒருவர் குறிப்பிட்டதொரு கோரிக்கையுடன் கூறி,
தங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதாக
தெரிவித்தார்.

“மிக மிக முக்கியமான மீட்டிங் இப்போது நடந்து
கொண்டிருக்கிறது. என்னால், எழுந்து வெளியே செல்ல
முடியாது. அந்த பக்தரை நேரே இந்த அறைக்கே அனுப்பு
பரவாயில்லை. என்ன ஏது என்று விசாரித்துவிட்டு உடனே
அவரை அனுப்பிவிடுகிறேன்” என்று குமாஸ்தாவிடம் தகவல்
தெரிவித்து அனுப்பினார்.

ஆனால் அவருக்கோ அந்த அறையில் இருந்த மற்ற
தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களுக்கோ தெரியாது…
தேவஸ்தான பொன்விழா கொண்டாட்டங்களில்
மகத்தானதொரு முத்திரையை அது பதிக்க போகிறது என்று.

குமாஸ்தா வெளியே வந்து ஷேக் மஸ்தான் என்கிற
அந்த இஸ்லாமிய பக்தரை போர்டு ரூமுக்குள்
EO அழைப்பதாக தெரிவித்தார்.

அதுவரை வெயிட்டிங் ஹாலில் காத்திருந்த
ஷேக் மஸ்தான் தனது இருக்கையிலிருந்து எழுந்து
நேரே மீட்டிங் நடைபெறும் அந்த அறையை
நோக்கி சென்றார்.

கைகளை கூப்பியபடி அனைவருக்கும் வணக்கம்
தெரிவித்தார் மஸ்தான். அவருடைய வணக்கத்தை
ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் தெரிவித்த இ.ஓ.,
“நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில்
இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?
என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும்
என்று கூறினீர்கள்? அது என்ன அவ்வளவு முக்கியமான
விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால்
எங்களுக்கு உதவியாக இருக்கும்.”

அடுத்து ஷேக் மஸ்தான் கூறிய விஷயம்
அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

balaji

“ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரை
சேர்ந்த ஒரு சிறு வணிகன். எங்கள் குடும்பத்தில் பலர்
பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்களாக
இருந்து வந்துள்ளனர். பலப் பல ஆண்டுகளாக எங்கள்
குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை
எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக
கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித
தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம்,
ஸ்ரீனிவாச பிரப்பத்தி, மங்களா சாசனம் ஆகியவற்றை கூட
பாடுவோம். ஸ்ரீனிவாச கத்யத்தை கூட என்னால்
முழுமையாக பாட முடியும்!”

கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு
கேட்டுக்கொண்டிருக்க, அந்த முஸ்லீம் அன்பர் தொடர்ந்தார்….

“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு
செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச
அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம்
என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்).
இதுதவிர, எங்கள் வீட்டு புழக்கடையில் உள்ள
தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம்
கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.”

“ஆனால் ஐயா… இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள்
முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்றதொரு
சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான
108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக
தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் எங்கள்
நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் என் கொள்ளு
தாத்தாவால் சில பூக்களைத் தான் சேர்க்க முடிந்தது.
அவருக்கு பிறகு என் தாத்தா சிறிது பூக்கள் சேர்த்தார்.
பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிது பூக்கள் சேர்த்தார்.

இப்போது நான் என் காலத்தில் அதை
நிறைவு செய்திருக்கிறோம்.”

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,
தங்கத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது
அர்ச்சனை செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
(வில்வத்திற்கு கூட நிர்மால்ய தோஷம் கிடையாது!)

அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த
தேவஸ்தான செயல் அலுவலர், “எ….ன்…ன…. நீங்கள்
108 பூக்களை சேர்த்துவிட்டீர்களா?”

“ஆம்!” என்றார் ஷேக் மஸ்தான்.

“ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வயிற்றை கட்டி
வாயை கட்டி இந்த பூக்களை சேர்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!”
(கிட்டத்தட்ட மூன்று சவரன்!)

“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக்
கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து
ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை
ஏற்றுக்கொள்ள வேண்டும்…
அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது
வேறு ஏதேனும் சேவையின் போதோ பயன்படுத்த
வேண்டும் என்பதே”

“எங்கள் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக்கொண்டால்,
எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்
பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம்
எங்கள் தாத்தாவின் ஆன்மா கூட நிச்சயம் சாந்தியடையும்.
இது தான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை
உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!!”

ஷேக் மஸ்தான் முடிக்க…. அமைதி… அமைதி…
அந்த அறை முழுக்க ஒரே அமைதி. நிசப்தம்.
இது சாதாரண அமைதி அல்ல. அசாதாரணமான அமைதி.

அடுத்த சில கணங்களுக்கு அந்த அறையில் ஃபேன்கள்
சுழலும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.

சேர்மன், செயல் அலுவலர், இணை அலுவலர்,
துணை அலுவலர் மற்றும் பல அதிகாரிகளும் தேவஸ்தான
கமிட்டி உறுப்பினர்களும் நிரம்பியிருந்த அறையில்
எவருமே வாயை திறந்து எதுவும் பேசவில்லை.

தங்கள் முன், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக
நின்றுகொண்டிருந்த அந்த முஸ்லிம் பக்தரிடம்
என்ன சொல்வது, என்ன பதில் அளிப்பது என்று யாருக்கும்
தெரியவில்லை.

தங்களுக்கு நடுவே சாட்சாத் ஸ்ரீனிவாசனே அங்கு
எழுந்தருளி நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது
போன்று அறையில் அனைவரும் உணர்ந்தனர்.

எக்சியூட்டிவ் ஆபிஸர் எனப்படும், இ.ஓ. தான்
முதலில் வாயை திறந்தார்.

கண்களில் இருந்து அவருக்கு தாரை தாரையாக கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது இருக்கையை
விட்டு எழுந்தவர் நேரே அந்த முஸ்லிம் பக்தரிடம் சென்று
“இத்தனை நேரம் உங்களை நிற்கவைத்து பேச வைத்ததற்கு
எங்களை மன்னிக்கவேண்டும். முதலில் இந்த சேரில்
உட்காருங்கள்” என்று கூறி ஷேக் மஸ்தான் அமர்வதற்கு
ஒரு நாற்காலியை போட்டார்.

“மஸ்தான் காரு, உங்களை போன்றதொரு பக்தரை
இந்த காலத்தில் இங்கு பார்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி
அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான
பக்தர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் உங்களைப்
போன்றதொரு பக்தரை இதுவரை பார்த்ததில்லை.”

“எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள்
கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால்… அதை உடனடியாக சேவையில் பயன்படுத்துவோம்
என்று இப்போது, இங்கு நான் எந்த வித உத்திரவாதமும்
கொடுக்க முடியாது. மேலும் தேவஸ்தானத்தின் பாலிஸி
தொடர்பான இந்த விவகாரத்தில் நான் மட்டும் உடனே
முடிவெடுத்துவிட முடியாது. தவிர அது எங்கள் கைகளில்
மட்டும் இல்லை.”

“ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவது
என்று உறுதி பூண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்ச காலம்
அவகாசம் நீங்கள் அளிக்கவேண்டும். அது போதும்!
முடிவெடுத்த பின்னர் நாங்களே உங்களை தொடர்பு
கொள்கிறோம்!”

மஸ்தான் விடைபெற்று செல்ல, அவருக்கு தரிசனம்
செய்வித்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்
தேவஸ்தான தரப்பில்.

அதற்கு பிறகு தேவஸ்தான கமிட்டி கூட்டம் மேலும்
பல முறை கூட்டப்பட்டு இந்த மலர்களை பயன்படுத்துவதற்கு
என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு
செவ்வாய்க்கிழமையும் திருமலையில் அஷ்டதள பாத
பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

சிறப்பு மிக்க இந்த ஆர்ஜித சேவைக்கு டிக்கெட்டை மூன்று
மாதங்களுக்கு முன்பே பதிவு செய்துவிட வேண்டும். இந்த
சேவையில் கலந்துகொள்ளும் சேவார்த்திகள் பங்காரு
வாசலுக்கு குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய
மண்டபத்தில் உட்கார வைக்கப்படுவார்கள்.

ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு
ஒவ்வொரு நாமத்துக்கும் (ஷேக் மஸ்தான் குடும்பத்தினர்
காணிக்கையாக அளித்த) ஒரு மலர், வேங்கடவனின்
பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.

1984 ல் திருமலையில் ஏழுமலையான் சன்னதியில்
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு
செவ்வாய்க்கிழமையும் இன்றும் நடக்கிறது.

திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை
மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை,
காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த
ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது.

அதுமட்டுமல்ல, அந்த ஏழுமலையானைப் பொருத்த
வரையில் – ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது
என்பதையும் பறைசாற்றுகிறது.

( நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த உண்மை சம்பவம்
திருமலை திருப்பதியில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது )

———————————————————————————————————————–
( மீண்டும் நான்…..)

இந்த தகவலை நண்பர் விவரித்திருந்த விதத்தில்
உரைநடையில் – கொஞ்சம் மிகைப்படுத்தல் இருக்கக்கூடும்..

ஆனால், இந்த செய்தி முற்றிலும் உண்மையானது
என்பதை நண்பர் செல்வராஜன் உதவியுடன்
உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது….

ஆதாரம் –

ASHTADALA – PADA PADMAARADHANA (ON TUESDAYS)
This seva is conducted after the second bell. This ritual was first introduced in Srivari Temple in 1984 on the Golden Jubilee Year of TTD, when a Muslim Devotee offered Lord Srinivasa 108 gold lotuses.
The archaka commences the puja by offering dhupa(arti stick) and dipa(lit the lamp) to the main deity. Then he recites the divine names (108) of the Lord.

While uttering each name of the Lord, one golden lotus is offered at the holy feet of the lord. On completion of the archana to the Mula Virat, archana is offered to Goddesses Lakshmi and Padmavati. Later Ratha Harati is offered first, followed by ordinary Harati.—– http://www.tirumala.org/AshtadalaPadaPadmaradhana.aspx

—————————————————————————————————————————–

இங்கே, இந்த சம்பவத்தில் – முன் நிற்பது மதமா…. அல்லது மனிதமா…?

கடவுளுக்கு மதம் கிடையாது…
எல்லா மதத்தினரையும் அவர் ஏற்கிறார்…
ஆனால், மனிதன் மட்டும் பிற மதத்தினரை ஏற்க மறுக்கிறான்…

பக்தன் என்று சொல்லிக்கொள்பவன்,
கடவுளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படலாமா….?

மதப்பற்றாளர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

——————————————————-

பின் குறிப்பு –

கிறிஸ்தவரான கே.ஜே.யேசுதாஸ் –
உணர்வுபூர்வமாக,
பக்தியோடு பாடும்
ஹரிவராசனம்….இன்னொரு உதாரணம்..

இதை ஏற்க எந்த ஹிந்து பக்தராவது மறுப்பாரா…?
அதே மனப்பான்மை, பக்குவம் – எப்போதும் வேண்டும்
என்பதே என் விருப்பம், வேண்டுகோள் – எல்லாம்.

.
——————————————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to யார் ….” கடவுள் ” …???

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! முன்பே பல முறை இதுபற்றி பதிவிட்டு இருக்கிறீர்கள் — அதில் :–
  // அரேபிய ஷேக் குழுவினர் + விட்டல்தாஸ் மஹராஜ் – ஆச்சரியம்+மகிழ்வு ….!!!
  Posted on ஒக்ரோபர் 7, 2018 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2018/10/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/ இந்த இடுகை நமக்கு அறிவுறுத்துவது எதை என்பதை புரிந்துகொண்டால் — // பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
  பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
  அமைதி நிலவுமே // …. கண்டிப்பாக அமைதி நிலவும் — ஆனால் அமைதி நிலவ நம்மை விடுவார்களா — பிரிவினைவாதிகள் …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்.

   முந்திய இடுகையை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

   இன்று இலங்கையில் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள்.
   காரணம்….?
   சகிப்புத் தன்மை இன்மை…
   எந்த பாவமும் செய்யாத அப்பாவிகள்
   படுகோரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
   உலகம் எப்போது இந்த காட்டுமிராண்டித்தனத்தை விட்டு
   வெளியே வரப்போகிறதோ…

   • புதியவன் சொல்கிறார்:

    இடுகையின் விஷயத்தைப் பலமுறை படித்திருக்கிறேன். பக்தி என்று வரும்போது எந்த மதத்திற்கும் வித்தியாசம் இல்லை. இதை நான் உணர்ந்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். கடவுள் பக்தி என்பது மதத்தைப் பிரித்துப்பார்க்க, பெரும்பாலும் தோன்றாது.

    நியூசிலாந்து, இலங்கை – இந்த இரண்டு இடங்களில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தைத் தருபவை. இலங்கையில் நடந்த கடைசி மத சம்பந்தமான சம்பவமாக இது இருக்கவேண்டும்.

    //உலகம் இந்த // – எப்போது உலகம் இந்த – என்று வந்திருக்கவேண்டும். ஆனால் அர்த்தம் புரிகிறது கா.மை. சார்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நன்றி புதியவன்,

     விடுபட்டதை சேர்த்து விட்டேன்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. raajsree_lk சொல்கிறார்:

  எமது நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தான் செய்வதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுக்க சாரி காணிக்கை செலுத்த அடிக்கடி அங்கே வருவார். அவர் பவுத்தர், அதனால் ஒன்றும் தோசமில்லையாம். ஆனால் அவர் பாரியார் திருமதி சிராந்தி கிறிஸ்தவர். ஒருமுறை இருவரும் ஒன்றாக கோவிலுக்கு வந்த பொழுது, உள்ளே விட்டு, கொண்டு வந்ததை வாங்கிக்கொண்டு, பின் அவர்கள் கிளம்பியதும் கோவிலை கதவடைத்து சுத்தம் செய்து பரிகாரமும் செய்ததாக கேள்விப்பட்டோம். அன்றிலிருந்து திருமதி ஷிரந்தி அங்கே வரவே இல்லையாம். இது உண்மையா? கிறிஸ்தவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.