எம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…!!!


எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட
எந்த தகவலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

திருமதி பானுமதி ராமகிருஷ்ணா ஒரு அஷ்டாவதானி
என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்…
அவருக்கு தெரிந்த பல கலைகளில் ஒன்று
ஜோதிடம் / ரேகை சாஸ்திரம்…

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் உண்மையா…?

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, திருமதி பானுமதி கைரேகை
பார்த்த அனுபவத்தைப்பற்றி பானுமதி அவர்களை
நன்கு அறிந்த ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை
அண்மையில் படித்தேன்…. கூடவே பானுமதி அவர்கள்
ஜோதிடம் பார்ப்பதையே விட்டு விட்ட சம்பவத்தைப்பற்றி கூட….

அந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
( நன்றி – தஞ்சாவூர்க் கவிராயர்….
அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே….)

——————–

ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி
பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக்
கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?”

பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச்
சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார்.

அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம்
தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள்! கைரேகை ஆராய்ச்சி
சம்பந்தப்பட்ட நூல்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள்
சிலவும் அங்கே இருந்தன.

“ஜாதகம்கறது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது.
அது கணிதம். சின்ன வயசிலிருந்தே எனக்கு இதிலெல்லாம்
ஈடுபாடு உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும்
நாடி கிரந்தங்களில் மூழ்கிவிடுவேன்” என்றவர், அதை முறைப்படி
கற்றுக்கொண்டதையும் தெரிவித்தார். “சிவலிங்க வீரேசலிங்கம்
என்று ஒரு சித்தர் புருஷர் இருந்தார். அவரிடம்தான்
கைரேகை, ஜோதிடக் கலையைக் கற்றுக்கொண்டேன்.

எம்.ஜி.ஆரின் கைரேகையைப் பார்த்து அந்தக் காலத்திலேயே
அவருக்கு ஆரூடம் சொல்லி இருக்கிறேன் தெரியுமோ?”
என்றவரைப் பார்த்து ஆச்சரியம் விலகமால் ‘அப்படியா?’ என்றேன்.
“ஆமாம் சார்.. அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று
பல படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தேன்.
‘மலைக்கள்ளன்’ படப்பிடிப்பில் ‘புதுமுகம்’ என்று சொல்லி எனக்கு
எம்.ஜி.ராமச்சந்திரனை அறிமுகப்படுத்திவைத்தார்கள்.

எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன்.
நடை உடை பாவனைகளில் ஒரு பெரும்போக்கும் நாகரிகமும்
தெரிந்தது. மரியாதையாக என்னை ‘அம்மா’ என்றுதான்
கூப்பிடுவார். பானுமதி என்று சொல்லவே மாட்டார்.
ஸ்டுடியோவில் பணியாற்றும் லைட் பாயைக்கூட ‘சாப்பிட்டாச்சா?’
என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார்.

சினிமாவில் மட்டுமல்ல; நிஜவாழ்க்கையிலும் அவர் ஒரு
ஏழைப்பங்காளர்தான். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போது
கிரீடத்துடன் மன்னர்வேடம் அணிந்து அமர்ந்திருந்த
எம்.ஜி.ஆரையே கவனித்தபடி இருந்தேன். நிச்சயமாக இவர்
போன ஜென்மத்தில் ஏதோ ஒரு தேசத்தின் மன்னராகவோ
இளவரசராகவோதான் இருந்திருக்க வேண்டும் என்று என் மனசுக்குப்
பட்டது. அப்படி ஒரு கம்பீரம். அது நடிப்பால் வருவதல்ல.

நானே எம்.ஜி.ஆர் அருகில் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன்
உங்கள் கையைக் காட்டுங்கள். எனக்குக் கொஞ்சம் கைரேகை
ஜோதிடம் தெரியும் என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம்
அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார்.
சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார்.

பார்த்த உடனே சொல்லிவிட்டேன். “மிஸ்டர் ராமச்சந்திரன்
நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்!
இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள்!
ஆனால் சினிமாவால் அல்ல” என்று நான் கூறியதும்
எல்லோரும் கை தட்டினார்கள்.

அவர் கைகூப்பி வணங்கி ‘நன்றி அம்மா’ என்றார் புன்னகையுடன்.
பின்னர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள்
கழித்து எம்.ஜி.ஆர். என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுண்டு
தமிழக மக்கள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியபோது
கலைத் துறையினர் சார்பாக சென்னையில் பிரம்மாண்டமான
பாராட்டுக் கூட்டம் நடந்தது. நான் மேடைக்குக் கீழே
முன்வரிசையில் அமர்ந்திருந்தேன்.

உரையாற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து என்னைப்
பார்த்துவிட்டு ‘இந்த நிலைக்கு நான் வருவேன் என்று
நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப்
பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார்.
அவரது ஆரூடம் பலித்துவிட்டது’ என்றார். அரங்கத்தில் கை
தட்டல் அடங்க வெகுநேரமாயிற்று…”

…..

அடுத்த சந்திப்பிலும் ஜோதிடம், கைரேகை பற்றிக் கொஞ்சம்
பேச்சு தொடர்ந்தது.

“கைரேகை பார்ப்பதையே கைவிடும்படியான சம்பவம் ஒன்று
என் வாழ்க்கையில் நடந்தது” என்று தொடங்கினார் பானுமதி.
“எங்கள் படக்குழுவின் புகைப்படப் பிரிவில் ராஜூ என்ற
இளைஞன் இருந்தான். நானும் குருஜியும் (அந்த சித்த புருஷர்)
படப்பிடிப்பு இடைவேளையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது ராஜூ வந்தான்.

அவரை வணங்கிவிட்டு, தன் கையை நீட்டி ‘சுவாமி என்
கைரேகையைப் பார்க்கணும்’ என்று பவ்யமாகக் கேட்டுக் கொண்டான்.
குருஜி சிரித்துக்கொண்டே ‘நீ பாரேன்’ என்று என்னிடம்
தள்ளிவிட்டார்.

ராஜூவின் கைரேகையைப் பார்த்தேன். திரும்பத் திரும்பப்
பார்த்தேன். எனக்குள் கலவரம் மூண்டது. ‘எப்படி இருக்கு?’ என்று
கேட்டார் குருஜி. நீங்களே பாருங்கள் என்று நான் கூறியதும்
குருஜி முகத்தில் சிந்தனைக்கோடுகள். ‘நீ நினைத்தது சரிதான்.
நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு குருஜி போய்விட்டார்.

ராஜூவைப் பார்த்து, உன் வயது என்ன என்றேன். ‘இருபத்தாறு’
என்றான். கடவுளே இந்த வயதுக்கு மேல் அவன் வாழ்க்கை
தொடர முடியாதே… என் மனதை அவனது ஆயுள் ரேகை
பிசைந்தது. அவனிடம் பேச்சை மாற்றிப் பார்த்தேன். ஆனால்,
அவன் குறியாக இருந்தான்.

அவனிடம் உடம்புக்கு ஏதாவது? என்று நான் இழுப்பதற்குள்
‘நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டான்.

இது நடந்து கொஞ்ச காலம் கழிந்தது. என் கணவர் என்னிடம்
‘அவனைக் கைரேகை பார்த்துப் பயமுறுத்திவிட்டீர்களாமே?
ஆள் ஜோரா இருக்கான்!’ என்று கிண்டல் செய்தார்.

சில மாதங்கள் சென்றன. படப்பிடிப்பில் அவசர அவசரமாக
என்னை நோக்கி வந்த புரடெக்ஷன் பாய் ஒருவர், ‘அம்மா
நம்ம ராஜூ செத்துப்போய்விட்டான். சைனஸுக்காக ஆப்ரேஷன்
செய்திருக்கான். அதில் என்னமோ சிக்கல். ரெண்டே நாள்தான்
ஆஸ்பத்திரியில் இருந்தான். இன்று காலையில்
போய்விட்டான்” என்றார்.

கண்முன்னால் துருதுருவென ஓடிக்கொண்டிருந்த
ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் நிலையைக் கேட்டு துக்கம்
தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கிச் சடாரென்று
துளிகள் வெளியே தெறித்தன. அந்தத் துளிகளில் துக்கத்துடன்
எனது குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது.

எதிர் காலத்துக்குள் –
என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல முட்டாள்தனம்
என்ன இருக்க முடியும் என்று தோன்றிவிட்டது.

அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பதையே விட்டுவிட்டேன்”
என்றார் பானுமதி…!

.
——————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! நமது தளத்தில் முன்பு ஒரு இடுகை : — // ” போன ஜன்மத்தில் நிச்சயம் அவர் ஒரு ராஜகுமாரராக பிறந்திருக்க வேண்டும் ” – பேட்டியில் திருமதி பானுமதி ….
  Posted on மே 9, 2017 by vimarisanam – kavirimainthan // வந்துள்ளது … https://vimarisanam.wordpress.com/2017/05/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ அடுத்து ஓரு இடுகை :

  // வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்….? தமிழகத்தின் மறக்க முடியாத ஆளுமைகள்….
  Posted on திசெம்பர் 24, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/12/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/ ….

  என்பதில் எமது பின்னூட்டம் ஒன்றில் இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது கூறியது பதிவிடப்பட்டுள்ளது .. அது பார்வைக்காக .
  selvarajan சொல்கிறார்:
  12:44 பிப இல் திசெம்பர் 24, 2016
  எவ்வளவோ நினைவு கூற செய்திகள் இருந்தாலும் ஒரு இளவரசரின் பார்வையில் மக்கள் திலகம் : — // எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் //

  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.

  அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

  – தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை ) https://lordmgr.wordpress.com/ எப்போதுமே // எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட
  எந்த தகவலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். // உண்மைதான்

 2. Shahul Hameed N.S.M. சொல்கிறார்:

  // எதிர் காலத்துக்குள் –
  என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல முட்டாள்தனம்
  என்ன இருக்க முடியும் என்று தோன்றிவிட்டது.

  அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பதையே விட்டுவிட்டேன்”
  என்றார் பானுமதி…!//

  பானுமதி அவர்களின் மீதான் மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Shahul Hameed N.S.M.,

   YES… EXACTLY – பானுமதி அவர்களைப்பற்றீ,
   நீங்கள் உணர்வதையே தான் நானும்
   உணர்ந்தேன்…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s