விழியே (மீண்டும் எம்.ஜி.ஆர்) ….கதை எழுது… !!!


காலையில் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி
எழுதிய இடுகையை எழுதி இருந்தேனா….

ஒரு நண்பர் – சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி,
இன்னமும் evergreen பாடலாக நினைவில் நிற்கும்,
கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா இணைந்து பாடிய
விழியே கதையெழுது பாடலின் வீடியோவை அனுப்பி
வைத்திருந்தார்…. ( 1974 – உரிமைக்குரல் )

வித்தியாசமாக, மிகவும் இளமையான தோற்றத்துடன்
பாடும் அவர்களது வீடியோவை பார்த்தவுடன்,
விமரிசனம் தளத்தில் பதிவேற்றலாம் என்று
யூ-ட்யூபில் பதிவேற்ற போனபோது,

ஏற்கெனவே அங்கே இது இருந்தது தெரிய வந்தது….
அதை கீழே தந்திருக்கிறேன்.

உரிமைக்குரல் படம் பற்றி நினைத்தவுடன்,
அந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த லதா அவர்கள்
அளித்திருந்த ஒரு பேட்டியும் நினைவுக்கு வந்தது…

எம்.ஜி.ஆர். பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் கீழே –

————

லதா அவர்கள் பேட்டியில் சொன்னது –

தொடர்ந்து பட வாய்ப்புகள். இடைவிடாத படப்பிடிப்பு என
வளர்ந்து கொண்டிருந்தேன். “எம்.ஜி.ஆர். ஜோடி” என்ற முறையில்,
திரையுலகில் ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த நேரத்தில்தான்
ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்ற
தகவல் கிடைத்தது.

முக்கோணக் காதல் கதைகளை சொல்வதில் புகழ் பெற்ற ஸ்ரீதர்,
அதுவரை எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை
என்பதால், இந்த கூட்டணிக்கு அப்போதே ரசிகர்கள் வட்டாரத்தில்
மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்திலும்
நான்தான் நாயகி என்றபோது, என் சந்தோஷம் இரட்டிப்பானது.

தொடர்ந்து நடிப்பு நடிப்பு என்று போய்க் கொண்டிருந்ததால்,
திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு
வரலாம் என்று அம்மா பிரியப்பட்டார். ஒரு அரை நாள்
விடுமுறை கிடைத்தால் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு
வந்து விடலாம் என்று எண்ணினோம்.

எனவே டைரக்டர் ஸ்ரீதர் செட்டில் தனியாக இருந்த நேரத்தில்,
“சார்! நாளைக்கு காலையில் அம்மாவும் நானும் திருப்பதி
சென்று வரலாம் என்றிருக்கிறோம். அரை நாள் தேவைப்படும்”
என்றேன்.

“நாளைக்கு முழுக்க உன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன.
எனவே நாளை முடியாது” என்றார், ஸ்ரீதர்.

“அரைநாள் தானே கேட்கிறேன். காலையில் போய்விட்டு
மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுவேன்”
என்று சொன்னேன்.

அவரோ பிடிவாதமாக `லீவு தரமுடியாது’ என்று மறுத்து விட்டார்.

நானும் விடவில்லை. “அரை நாள் தந்தே ஆகவேண்டும்”
என்ற ரீதியில் அவரை வற்புறுத்திக்கொண்டிருந்தேன்.

இந்த நேரத்தில் அங்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார்.
“என்ன பிரச்சினை?” என்று பொதுவாக கேட்டார்.

டைரக்டர் ஸ்ரீதர் சொல்வதற்குள் நான் முந்திக்கொண்டு,
“நாளைக்கு திருப்பதி போய்வர அரை நாள் விடுமுறை
கேட்டேன். தர மறுக்கிறார்” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை பார்த்தார். “கோவில் தரிசனம்
என்றால் போய்த்தான் ஆகவேண்டும்.

மதியம் 2 மணிக்கு வந்து விடுவதாக இருந்தால்
அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்”
என்றார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

எம்.ஜி.ஆர். தனது “ஏ.சி” காரையும்,
டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

விடியற்காலை 3 மணிக்கு காரில் புறப்பட்டோம்.
காலை 10 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து,
தாமதிக்காமல் சென்னைக்கு பயணம் ஆனோம்.

திரும்பி வரும் வழியில்தான் சோதனை.
கார் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் டயர்
வெடித்து விட்டது. டிரைவர் சாமர்த்தியமாக காரை
நிறுத்தினார். டயரை கழற்றி ஸ்டெப்னி மாட்டி கார்
புறப்பட்டபோது, மீண்டும் பிரச்சினை. சித்தூரைத்
தாண்டி கார் வந்து கொண்டிருந்த நேரத்தில்
அந்த `ஸ்டெப்னி’ டயரும் வெடித்து விட்டது.

ஏற்கனவே, ஸ்டெப்னி மாட்டியதில் ஒரு மணி நேர
தாமதம். இருந்தாலும் எப்படியும் பிற்பகல் 3 மணிக்கு
சென்னை வந்து விடலாம் என்றிருந்த நம்பிக்கையை,
மறுபடியும் வெடித்த டயர் கெடுத்துவிட்டது.

10 மைல் தூரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி.
பஞ்சர் போடவேண்டுமானால் கூட, 10 மைல்
போனால்தான் முடியும். எனக்கு டென்ஷன். டிரைவர்
என் டென்ஷனை உணர்ந்தாலும், பஞ்சர் போட்டு
வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.

ஆனால் அவர் திரும்பி வந்தது மாலை 4 மணிக்கு.
அதுவும் பஞ்சர் போடும் கடை விடுமுறை என்ற
தகவலுடன் வந்து சேர்ந்தார்.

இனி என்ன செய்வது? எனக்குள் தவிப்பு. இப்போது
போல் போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது.
சென்னைக்கு போன் போட வேண்டுமானால்
`டிரங்க் கால்’ புக் செய்து, காத்திருந்துதான்
பேசவேண்டும். அதனால் யாருக்கும் எந்த தகவலும்
சொல்ல முடியவில்லை.

வேறு வழியின்றி சித்தூரில் இருந்து சென்னை
புறப்பட்ட பஸ்சில் அம்மாவும் நானும் சென்னை
வந்தோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்
அருகில் நாங்கள் வந்த பஸ் நின்றபோது இரவு
8 மணி.

அம்மாவுக்கு இன்னொரு கவலையும் இப்போது சேர்ந்து
கொண்டு விட்டது. மதியத்துக்குள்தான் வந்துவிடுவோமே
என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த 3 தம்பிகளுக்கும்
தங்கைக்கும் மதிய சாப்பாடு மட்டுமே தயார் செய்து
கொடுத்துவிட்டு வந்திருந்தார். இப்போது பிள்ளைகள் வேறு
பசியாக இருப்பார்களே என்ற கவலை அம்மாவை வாட்டியது.

சென்ட்ரலில் இருந்து வாடகைக் காரில் வீடு வந்து
சேர்ந்தபோது 9 மணி. ஹாலில் தம்பிகளும்,
தங்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு
சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்திருந்தவர்
யாரென்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆரேதான்!

அதுமட்டுமா? டிபன் கேரியரில் எனக்கும் அம்மாவுக்குமான
சாப்பாட்டையும் கொண்டு வந்திருந்தார்.

அம்மாவுக்கு கண் கலங்கியது. எனக்கும்தான்.
தாமதத்துக்கான காரணம் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல
முயன்றோம். ஆனால், நடந்தது என்ன என்ற தகவல்
அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது!
“பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். கார் டயர்
வெடித்தபோது விபத்து நேராமல் இருந்ததே,
அதுவே போதும்” என்று ஒரே வரியில் எங்கள்
டென்ஷனை குறைத்து விட்டார்.

பிள்ளைகளின் பசியறிந்து அமுதூட்டிய
எம்.ஜி.ஆரின் அன்பும், அக்கறையும் அம்மாவை
ரொம்பவே நெகிழச்செய்து விட்டது.

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to விழியே (மீண்டும் எம்.ஜி.ஆர்) ….கதை எழுது… !!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  ‘விழியே கதையெழுது’ பாட‌லில் பெண் குரல் சுசீலா அம்மாவுடையது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அறிவழகு,

   பார்த்தீர்களா.. இந்த விஷயம் என் நினைவிற்கு வரவேயில்லை…!
   அந்த சமயத்தில் சித்ரா field -ல் இல்லையே…!
   வீடியோவில் சித்ரா பாடுவதை பார்த்தவுடன், அந்த பெயரையே
   எழுதி விட்டேன். நன்றி அறிவழகு.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  ‘விழியே கதையெழுது’ பாட‌லில் பெண் குரல் சுசீலா அம்மாவுடையது.

  அதாவது உரிமைக்குரல் படப்பாடலில்.

 3. சிவராசு சொல்கிறார்:

  நீங்கள் எம்ஜியாருக்கு கை ஜோசியம் பார்த்த பானுமதி பற்றி எழுதியதை படித்த‍தும், எனக்கு ஜெய‍லிதா அம்மையார் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் நினைவுக்கு வந்தது.

  ஜெயலலிதாவை ஸ்ரீ கிருஷ்ன லீலா படப்பிடிப்பில் (1977) சந்தித்த பொழுது அவரது கையை பார்த்த பானுமதி, ‘நீ ஒரு பெரிய ஆளாக அரசியலில் வலம் வருவாய், இன்று உன்னை நடிகை என்பதினால் மதியாத பலரும் அப்போது காலில் விழுந்து வணங்குவர்’ என்று சொல்லியிருக்கிறார். இதை ஜெயல‍லிதா அம்மையார் நம்பத் தயங்கிய போது, ‘வேண்டுமெனில் சின்னவரை (எம்ஜியாரை) சந்தித்தால் கேட்டுப்பார், அவர் பெரியளாவார் என்று அப்போது சொன்னேன், இப்போது முதல்வராகப் போகிறார் பார் ‘ என்று சொன்னதும் மகிழ்ந்த அம்மா அவர்கள் பானுமதியை தன் வீட்டிற்கு வரலட்சுமி விரத‍த்திற்கு அழைத்துள்ளார்கள்.

  வரலட்சுமி விரத‍த்திற்கு வந்த பானுமதிக்கு அட்டகாசமான விருந்து ஒன்றினை அளித்தாராம் ஜெயா அம்மையார். கிளம்புவதற்கு முன்பு அவரின் ஜாதகத்தை பார்க்க பானுமதி கேட்டுள்ளார். பானுமதி ஜாதகத்தை பார்த்ததும் ஆச்சரித்துடன் ‘நீ பெரியாளாய் வருவாய் என கைரேகையை வைத்து கூறினேன், மேலும் ஜாதகத்தை வைத்து ஒன்று கூறுகிறேன் கேள்.. நீ பெரியாளவது மட்டுமல்ல இன்னொன்றும் நடக்கும். உனக்கு காவிரிமைந்தன் என்ற புனைப்பெயரில் ஒரு வெறித்தனமான ‘தொண்டன் கம் ரசிகன்’ தோன்றுவான். அவன் நீ என்ன செய்தாலும் அக்கால புலவனைப் போல புகழ்ந்து தள்ளி முட்டுக் கொடுப்பான். நீ மறைந்தாலும் உன் விசுவாசியாக காலத்தை ஓட்டி போய் சேருவான். இது சத்தியம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம். பானுமதி சென்ற பிறகு, இதற்குதான் தான் “காவிரி தந்த கலைசெல்வி”யாக தான் நடிக்க நேர்ந்த‍து என உணர்ந்து கலங்கி நின்றாராம் ஜெயல‍லிதா அம்மையார்.

  • bandhu சொல்கிறார்:

   என்ன ஒரு மட்டமான சிந்தனை! குதர்க்கம் என்பதற்கு இந்த பின்னூட்டமே உதாரணம். இன்றும் ஜெ ஆட்சியை உதாரணம் காட்டி அதிமுக பிரச்சாரம் செய்ய முடிகிறது. கருணாநிதி ஆட்சியை உதாரணம் காட்டி திமுகா பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அது ஒன்றே போதும் ஜெ பெருமை சொல்ல!

   • சிவராசு சொல்கிறார்:

    ஏனய்யா நம்மூரில் எல்லோரும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாய் இருக்கிறோம். நான் எங்கேயாவது ஜெயல‍லிதா அம்மையாரை இழிவு படுத்தியிருக்கின்றேனா? உடனே கருணாநிதி அவர்களின் ஆதரவாளர் என நினைத்து தாக்க வேண்டியது.

    • bandhu சொல்கிறார்:

     நான் தான் தவறாக நினைத்தேனோ என்றால்..
     //உனக்கு காவிரிமைந்தன் என்ற புனைப்பெயரில் ஒரு வெறித்தனமான ‘தொண்டன் கம் ரசிகன்’ தோன்றுவான். அவன் நீ என்ன செய்தாலும் அக்கால புலவனைப் போல புகழ்ந்து தள்ளி முட்டுக் கொடுப்பான். நீ மறைந்தாலும் உன் விசுவாசியாக காலத்தை ஓட்டி போய் சேருவான். இது சத்தியம்// அவர் என்ன செய்தாலும் முட்டு கொடுப்பார்.. என்றிருந்ததால்.. அப்படி நினைத்துவிட்டேன்.. தவறா?

     • சிவராசு சொல்கிறார்:

      ஆகா… நடந்ததை நடந்தபடி சொன்னால் அது செய்தி, கொஞ்சம் மிகைப்படுத்தினால் அதுவே நகைச்சுவையாக மாறும் அவ்வளவுதான். இதுவரை காமை ஜெயல‍லிதா அம்மையாரை குறை சொன்னதே இல்லை, பிறத்தியார் சொன்னாலும் கோவித்துக் கொள்ளுவார். இதைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி அம்மையார் ஒரு சாதனையாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,

     • Ramnath சொல்கிறார்:

      //மற்றபடி அம்மையார் ஒரு சாதனையாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,//

      அப்படியென்றால், அத்தகைய
      “ஒரு சாதனையாளரை” கா.மை.சார் பாராட்டுவதில்
      உமக்கு ஏன் குறை ?
      பின் ஏன் “அவன்” “இவன்” எல்லாம் ?
      அம்மையார் மீது உமக்கு குறையில்லை என்றால்
      கா.மை.மீது உமக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ?

     • சிவராசு சொல்கிறார்:

      காமை அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தால் அவரின் எழுத்துக்களை படித்து நேரத்தினை வீணாக்க மாட்டேன். பானுமதி அம்மா அவரை ஒருமையில் அழைப்பதாகத்தான் எழுதியுள்ளேனே தவிர அடியேன் வயதில் மூத்தவரான அவரை நான் ஒருமை விளிக்க மாட்டேன்.

      இதையெல்லாம் இவ்வளவு சீரியஸாக எடுத்துகொண்டு… என்னவோ போங்கள்…

 4. அறிவழகு சொல்கிறார்:

  ஈகை சிலருக்கு பிறப்பிலேயே வரும். அதற்கு சரியான உதாரணம் திரு.எம்ஜிஆர் அவர்கள். இதுபோல் இன்னும் ஏராளமான‌ சம்பவங்களை படித்து இருக்கிறேன்.

  சும்மா கதையாக அப்போது சொல்வார்கள், ”அடுப்பில் உலையை வைத்துவிட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு போனால் நிச்சயம் அரிசி பருப்புக்கு காசோடு வரலாம்” என்று.

  அது மிகைப்படுத்தாலாக இருக்கலாம். ஆனால், அவரின் வள்ளல் தன்மைக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்.

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…! இந்தப் பாடல் உருவான விதம் பற்றி படித்தது
  // எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்குமிடையே நட்பில் விரிசல் விழுந்த நேரம்… அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த படம் உரிமைக்குரல். அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும்.என்று வேறு பல கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு….
  உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார். கவிஞர் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.
  முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார் எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, ‘ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்… நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்,” என்றாராம். இதுவே இருக்கட்டும்… நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம்.
  இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். ….
  எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்… “விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!” // அய்யா ..! மேடையில் படுவது சிறப்பாக இருந்தாலும் — படத்தில் உள்ள இதற்கான காட்சியமைப்பு — செட்டிங்ஸ் — கலர் — நடிப்பு போன்றவற்றை பார்த்தால் அதன் மகிமையே தனி தான்…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.