(பகுதி-2 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..


பெரியார் ஈ.வே.ரா. ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…

அரசியல் ரீதியாக ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலை கிடைத்தாலும் –
அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே தான் இருக்கும்.
எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால்
சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்தவித வித்தியாசமும்
வந்துவிடப் போவதில்லை.

( இதற்கு முந்ததைய பகுதி-1 -க்குச் செல்ல – )

எனவே –
” சுதந்திரம் எனது பிறப்புரிமை ” என்று
கூறுவதை விட,

” சுய மரியாதை பெறுவது என்
பிறப்புரிமை”

என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்
என்று சொன்னார் பெரியார். எனவே,
காங்கிரஸ் இயக்கம் முன்னெடுத்துச் சென்ற
சுதந்திரப் போராட்டத்தில் அவருக்கு இருந்த
ஆர்வம் நீர்த்துப் போனது…..!
பின்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு
எதிரான கருத்துகளைக் கூட அவர் கூறினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கும்போது துவங்கிய பெரியார்-ராஜாஜி நட்பு – இடையில்கொள்கை வேறுபாடுகள் காரணமாக, ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியாக தாக்குதல்களை மேற்கொண்டாலும் கூட – அவர்களின் வாழ்நாள் முழுவதும், சொந்த முறையிலான நட்பு மாறவே இல்லை. மாறாக ஒருவர் மீது மற்றொருவர் அளவுகடந்த அபிமானமும், பாசமும் வைத்திருந்தனர் …

சுதந்திரத்திற்காக போராடுவதாக மகாத்மா காந்தி
கூறினாலும், அவர் செயல் இந்து மதத்திற்கு
புத்துயிர் ஊட்டுவதாக அமைந்து வருவதாகவே
– பெரியார் கருதினார். இதை வெளிப்படையாகவும்
கூறத்தயங்கவில்லை அவர் !

1929-ல் முதல் சுய மரியாதை இயக்க மாநாடு
நடைபெற்றது.

பெரியாரின் புரட்சிகரமான கொள்கைகள்,
தமிழக மக்களை மட்டும் அல்லாமல்
உலகில் தமிழர் வாழும் மற்ற பகுதிகளையும் –
சென்றடையத்துவங்கின. சிங்கப்பூர், மலேயா போன்ற
நாடுகளில் கூட பெரியாரின் கொள்கைகள்
பரவ ஆரம்பித்தன.

அந்த – கால கட்டத்தில் –
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா போன்ற
தனித்தனி மாநிலங்கள் உருவாகவில்லை.
ஆங்கிலேயரின் ஆட்சியில் இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்து மெட்ராஸ் ராஜதானி
( Madras Province ) என்று
அழைக்கப்பட்ட ஒரே மாநிலம் தான் இருந்தது…!!!

இதில் வாழும் தமிழர், தெலுங்கர், கன்னடியர்,
மலையாளிகள் ஆகியோர் தான் – திராவிடர்கள்
என்று அறியப்பட்டார்கள்.
இந்த மாநிலம் தான் திராவிட மாநிலம்.

பிராம்மணர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள் –
ஆரியர்கள் என்கிற வேற்று இனத்தை சேர்ந்தவர்கள்.
வடமொழியை ( சம்ஸ்கிருத மொழியை )
தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
இந்த ஆரியர்கள் துரத்தப்பட வேண்டும்.
ஆரியர்களின் ஆதிக்கத்திலிருந்து திராவிட
நாட்டை மீட்க வேண்டும் என்பது
பெரியாரின் முக்கிய கொள்கை ஆயிற்று….!

அந்த கால கட்டத்தில் இருந்த –
பிராம்மணர்களின் ஆதிக்கம் அந்த அளவிற்கு
அவரை இழுத்துக் கொண்டு சென்றது !

1920-களில் ஆங்கிலேயர்களால் கொண்டு
வரப்பட்ட இரட்டை ஆட்சி முறை காரணமாக
தேர்தல்கள் வந்தன.
காங்கிரஸ் கட்சி இந்த இரட்டை ஆட்சி முறையை
ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் போட்டி
இடுவதை தவிர்த்தது.

இந்நிலையில், நீதிக்கட்சி தேர்தலில் கலந்துகொண்டு,
போட்டி இட்டதோடு அல்லாமல் வெற்றி பெற்று
ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியது.
ஏறத்தாழ 10 வருடங்கள், நீதிக்கட்சி, ஆங்கிலேயரின்
ஆட்சியிலும் பங்கு பெற்றது.

ஆனால் பதவிமோகம் எந்த கட்சியைத் தான்
விட்டு வைத்தது ?

தேர்தலில் பங்கு, அரசு அதிகாரங்கள் – ஆகியவற்றால்
நீதிக்கட்சியில் நிறைய உட்பூசல்கள் உருவாகி
அது தன் செல்வாக்கையும் – மெல்ல மெல்ல
இழக்க ஆரம்பித்தது.

1938 -ல், நீதிக்கட்சி, அதிகார அரசியல் காரணமாக
செல்வாகிழந்த நிலையில் தான் பெரியார் ஈவேரா
அவர்களின் தலைமையில் – சுயமரியாதை இயக்கமும்,
நீதிக்கட்சியும் ஒன்றாக இணந்தன.

.
————————————
தொடர்ந்து அடுத்த பகுதி(3)-ல் சந்திப்போம்..

——————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to (பகுதி-2 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..

  1. ssk சொல்கிறார்:

    பெரியார் சொன்ன கருத்துகள் பல மனித குலம் ஏற்க தக்கவை. அவரின் பெண்கள் பற்றிய கருத்துகள் உயர் சாதி மக்களும் ஏற்பார்கள். அவரின் பல கருத்துகள் இயற்கையை ஒட்டி , மக்களுக்கு சம தர்ம வாழ்வு தர பேசியது. மூட நம்பிக்கைகளால் பெண்கள் பல வழிகளிலும் கொடுமைக்கு ஆளானது குறித்து பேசி அனைத்து இன பெண்களும் விழிப்பு பெற பேசினார். ஆண்கள் ஏற்காவிட்டாலும் , பெண் இனம் பெரியாரையும் அவர் தொண்டுகளையும் பல காலம் பேசுவார்கள்.

  2. Pingback: (பகுதி-3 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் .. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.