மனிதராக பிறந்து வந்த தெய்வம் …!!!என்னவோ தெரியவில்லை…
இன்று இதை எழுத வேண்டும் என்று என் மனது சொல்கிறது.
எழுதுகிறேன்…

1894-ல் பிறந்தவர்…
13 வயதில் துறவியானவர்..
100 வயது வரை துறவியாகவே வாழ்ந்தவர்…

அனைத்தையும் துறந்தாரா என்றால் –
உலக ஆசைகளை நிச்சயமாகத் துறந்தார்…

ஆனால், உயிர்களிடத்தே காட்டும் கருணையையும்,
அன்பையும், கரிசனத்தையும் மட்டும் இறுதிவரை
இவர் துறக்கவே இல்லை…

ஒரு துறவிக்கு, ஆன்மிகத்தைத் தவிர
வேறு விஷயங்களிலும் இத்தனை ஞானமா …

இவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோ –
என்று அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களே
வியக்கும் அளவிற்கு நிபுணத்துவம்….

எப்போது கற்றார்…?
யாரிடம் கற்றார்…?
யார் அறிவர்…?

கற்றுக் கொண்டா வந்தது இத்தனை ஞானமும் …?

இசை, நடனம், ஓவியம், சிற்பம், உலக சரித்திரம்,
பொருளாதாரம், பூகோள ஞானம், அரசியல் –
நவீன விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும்
அபாரமான ஞானம்…

பல மொழிகளில் பாண்டித்யம்…

கால்நடையாகவே பாரதம் முழுவதும், பலமுறை பயணம்…
இவர் கால்படாத க்ஷேத்திரங்களோ – கோவில்களோ,
இந்த பரந்து விரிந்த பாரதத்தில் இல்லை என்றே சொல்லலாம்…!

ஆசார, அனுஷ்டானங்களை தீவிரமாக அனுசரிப்பவர்…

ஆனால், எளியவர் மீது அன்பின் காரணமாக
தனது அனுஷ்டானங்களைத் சில சமயங்களில்
தளர்த்திக் கொள்ளவும் தயங்கியதில்லை.

மாதத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருப்பார்.
அவ்வாறு மவுனம் அனுசரித்த ஒருநாளில்,
தன்னை தரிசிக்க வந்த பார்வையற்ற மாணவர்களுக்காக –
அன்றைய தினம் அந்த விரதத்தை அவர் கைவிட்டார்.

வசதிபடைத்த பக்தர்கள் இவரை நாடி வரும் வரும்போது,
பெரும் தொகைகளை பாத காணிக்கையாக சமர்ப்பிப்பர்.

அந்த பணத்தை அப்படியே ஒதுக்கி வைத்து –
படிப்புச் செலவிற்கோ, வைத்தியத்திற்கோ, பெண்களின்
திருமணத்திற்கோ பணமில்லை என வருந்தும்
ஏழ்மையான பக்தர்களிடம் அப்பணத்தை எடுத்துச்
செல்லுமாறு கூறி விடுவார்.

———————–

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது –
இந்த நிகழ்ச்சியைப் விவரிப்பவர் –
(காலஞ்சென்ற) ஆன்மிக உரையாளர்
சேங்காலிபுரம் அனந்தராமதீட்சிதர் அவர்கள்….

………….

தஞ்சை மாவட்டத்தில் யாத்திரை செய்து வரும்போது
குடவாசலிலிருந்து கொரடாச்சேரிக்குச் சென்று
கொண்டிருந்தார்கள். வழியில் திருக்களம்பூர் என்ற
பாடல் பெற்ற சிவ ஸ்தலத்துக்கு கிழக்கே
சாலை ஓரத்தில், அந்த சுற்றுப்புறத்தைச் சேர்ந்த
ஹரிஜன மக்கள் எல்லோரும் இவரை தரிசிப்பதற்காக
குழுமியிருந்தனர். அம்மக்கள் தங்கள் சேரியிலேயே,
வசூல் செய்த சிறு தொகையுடன், பழம் புஷ்பம்
முதலியவற்றையும் இவருக்கு சமர்ப்பிப்பதற்காகக்
காத்துக் கொண்டிருந்தனர்.

இவர் வந்ததும், தரிசனத்தின்போது அந்த எளிய மக்கள்
சமர்ப்பித்தக் காணிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அவர்கள் அளித்த திரவியத்தை உடனே எண்ணிப்
பார்க்கச் செய்தார். உடனேயே அவ்விடத்திலேயே
அதனைப் போல் பல மடங்கு தொகையை மடத்திலிருந்து
எடுத்து அத்துடன் சேர்த்து, அந்த ஹரிஜனங்கள் அனைவருக்கும்
வேஷ்டி, புடவைகள் வாங்கிவர உத்தரவிட்டார்.
உள்ளூரில் கடைகள் கிடையாது. மடத்துச் சிப்பந்திகள்
குடவாசலுக்கே சென்றனர். ‘அவர்கள் திரும்பிவர மிகவும்
பொழுதாகுமே! அதன் பின் விநியோகம் செய்துவிட்டு,
பெரியவர் அடுத்த முகாமுக்குச் சென்று பூஜை
முடிப்பதென்றால் சாயங்காலமாகிவிடுமே!
பெரியவர் அதன்பின்தானே ஆகாரம் கொள்வார்கள்?’
என அடியார்கள் கலங்கினர். ஆனாலும், அவர் இதை சற்றும்
பொருட்படுத்தாமல் ஹரிஜனங்களின் க்ஷேமங்களைப்பற்றி
அன்போடு விசாரித்துக் கொண்டேயிருந்தார்.

மாலை நேரமான போதுதான் புடவை, வேஷ்டிகள் வந்து
சேர்ந்தன. அவை ஹரிஜனங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
அந்த ஏழை மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கும்,
அதைக்கண்டு பெரியவர் அடைந்த ஆனந்தத்துக்கும்
எல்லையே இல்லை.

“பூஜைக்குத்தான் மிகவும் நேரமாகிவிட்டது” என்று
மடத்தைச் சேர்ந்த – அருகிலிருந்த ஒரு அடியவர் கூறினார்.

பெரியவர், சுற்றியிருந்த ஏழை மக்களையெல்லாம்
அன்பொழுகப் பார்த்தார். பிறகு அந்த சிப்பந்தியைத் தமது
கனிவு ததும்பும் கண்களால் நோக்கினார்.

பின் தன் அன்பு வழியும் மதுரக்குரலில்,
“பூஜைக்கா ….. நேரமா…? ”

” இதுதானே பூஜை ” -என்றார்.

எளியவருக்கு செய்யும் உதவி தான்
இறைவனுக்கு செய்யும் பூஜை –

பல வருடங்களுக்கு முன்னரே அவர் சொன்ன
இந்த வார்த்தைகளை நடைமுறையில் ஏற்றுக்கொண்டு
விட்டேன் நான்…

இன்று நாட்டின் நிலையைக்காண வருத்தமாக இருக்கிறது.
சுயநலவாதிகளால் – மதவெறியும், ஜாதிவெறியும்,
தூண்டி விடப்பட்டு – மக்கள் அமைதியற்று, நிம்மதியிழந்து,
பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.

இந்த நாட்டிற்கு அமைதியும், சாந்தமும் திரும்ப
நல்ல மழை பொழிந்து மக்கள் தாகம் தணிய,
விவசாயம் தழைத்தோங்க,
மக்கள் நோய்க்கொடுமைகளிலிருந்து விடுபட்டு நலமாக வாழ,
நல்ல கல்வி வளமும், உடல் ஆரோக்கியமும் பெற்றிட,
மக்கள் தெளிவும், ஞானமும் பெற்று –
அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, வளம் பெற –
அந்த இறையின் கருணையை வேண்டுகிறேன்……

.
———————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மனிதராக பிறந்து வந்த தெய்வம் …!!!

 1. ஒரு தேசபக்தன் சொல்கிறார்:

  .

  உங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

  .

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // இன்று நாட்டின் நிலையைக்காண வருத்தமாக இருக்கிறது.
  சுயநலவாதிகளால் – மதவெறியும், ஜாதிவெறியும்,
  தூண்டி விடப்பட்டு – மக்கள் அமைதியற்று, நிம்மதியிழந்து,
  பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.// ….என்பதற்கு
  மேற்கோள் காட்ட எமது மனதுக்கு மிகவும் பிடித்தமான ஒரு முந்தைய இடுகையை நினைவூட்ட :–

  // இவர்கள் மாறுவது எப்போது…. இவர்களை மாற்றுவது எப்படி…..????????????
  Posted on பிப்ரவரி 20, 2017 by vimarisanam – kavirimainthan // இதே இடுகையின் இன்னும் இரண்டு ஆண்டுகள் முன்னர் அதாவது 2015 ல் // ஆசைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் …
  Posted on பிப்ரவரி 2, 2015 by vimarisanam – kavirimainthan // … இரண்டு தலைப்புகளுமே அருமை … ஒன்றை காண :–
  https://vimarisanam.wordpress.com/2017/02/20/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/

  மேற்கோள் காட்டியுள்ள இடுகையின் ஆரம்ப வரிகள் // ( படுத்திருப்பது ஓலைப்பாயில்,
  மரப்பலகை தான் தலையணை,
  சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி-
  நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை …// இது உண்மையான ” மாமுனிவரின் செயல் — !!
  மேலும்

  // காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் –
  ” மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல்
  அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே…
  எதற்காக?

  தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்…!
  வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை.// …. அதனால் தற்போது சிலர் என்னென்னமோ செய்கிறார்கள் … ? அது கிடக்கட்டும் அது அவர்களின் உடன் பிறந்த குணம் … ?

  இந்த இடுகையில் தங்களின் அந்நாளைய கைப்பட எழுதிய மடலையும் காணலாம் … !!!

  எது எப்படியோ “சர்வேசம் ஸ்வஸ்திர் பவந்து — சர்வேசம் ஷாந்தி பவந்து — சர்வேசம் பூர்ணம் பவந்து — சர்வேசம் மங்கலம் பவந்து”
  “எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும். எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும். எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும். எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்” என்று பெரியவா ஆசியுடன் நமது பணிகளை தொடர்வோம் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்களின் பொருத்தமான பின்னூட்டத்திற்கு
   நன்றி செல்வராஜன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Haha Hara Shankara Jaya Jaya Shankara.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.