ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!!


தெரிந்தது தான்…புரிந்தது தான் என்றாலும் கூட,
தெறிகெட்டு ஓடும் மனதை –
கடிவாளம் போட்டு இழுத்துப் பிடிக்க –
மீண்டும் மீண்டும் இவற்றையெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறதே…!

———————

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.

துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே
போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு
அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம்
கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால்
நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ,
அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.
சுயதரிசனம் பூர்த்தியானவுடன்,
ஆண்டவன் தரிசனம் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது
ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை
எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது
ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா”
என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைந்து ரூபாய்
சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?”
என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிகையில்…
பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று.

யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும்
உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு,
‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத்
தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில்,
குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால்
மனிதனுக்குஅனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால்,
நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை
உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே,
இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள்
மிகவும் குறைவு.

ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை
இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால்,
எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி
ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்:
போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்”
என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே
பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை,
அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர்
ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று
அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில்
இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று
கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு
உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற
பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால்
வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான்
‘தாமரை இலைத் தண்ணீர் போல்
என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.
ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று
எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால்,
நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக்
குறைத்துக்கொள்: வருவது மனதை
நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும்,
இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப்
பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய்
கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை;
ஆசையின் கையிலிருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால்
நின்று யோசிக்கிறான். அப்போது அவனுக்கு
தெய்வ ஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல்,
அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி
போதிப்பதுதான் இந்து மதத் தத்துவம்.

‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த
குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம்
மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து,
அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய,
அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி,
உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை,
இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள்,
வாழ வேண்டியவர்களுக்கு – வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல
இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள்
உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை
வளர்த்து கொள்வதற்காக அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக,
தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே
அது ‘திருநீறு’ பூசச் சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது
என்பதற்காகவே, ‘குங்கும்’ வைக்கச் சொல்கிறது.
‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு
அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு
அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால்
ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது
என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’
நடக்கச் சொல்கிறது.

கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட
கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத
பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில்
எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.

“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு”
என்பது இந்துக்கள் பழமொழி.

கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு,
தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே
நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு
அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்;
ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்.
(ஆனால் )- கெட்டுப்போன பின்புதான்
அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண
பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானேயானால்,
இந்து மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘
என்ற எண்ணம் விலகி விடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்,
உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப்பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன்,
அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக
இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன்
ஆசாபாசங்களில் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்”
என்கிறார்.

“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும்
செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது.
ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில்
குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல,
அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”.
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும்
சாந்தமாகி விடுகிறது”. என்றார்.

அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு.
ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது.
உன் நிம்மதியைக் கெடுக்காது.

…………..

( நன்றி :- கவிஞர் கண்ணதாசனின் –
அர்த்தமுள்ள இந்து மதம்….)

.
—————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!!

 1. Ramnath சொல்கிறார்:

  அருமை.
  தத்துவத்தை எளிய தமிழில் தர
  கண்ணதாசனை விடச்சிறந்தவர்
  யார் இருக்கிறார்கள் ?

 2. Selvarajan சொல்கிறார்:

  மன உளைச்சல் மற்றும் போராட்டத்திற்கு ஒரு விடிவு பிறந்து விட்டது …! இரண்டுங்கெட்டானாக தவிப்பதை விட ஒன்றை சார்ந்து விடுவதே மேலானது .. ! இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
  நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று .. என்று எழுதிய கண்ணதாசன் முடிவில் வந்த இடம் …?

 3. Karthik சொல்கிறார்:

  Nan eppadiyum 10 muraiku mel padithulane. ippothu padithalum arumai….difficult to follow all, but life lesson simplified by him. what a invaluable book?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s