ராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து ….


முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் சாதாரணமாக
அரசியல் விமரிசனங்களில் ஈடுபடுவதில்லை…
எப்போதாவது அபூர்வமாகவே.

தற்போது, அவரது வாசகர்களில் ஒருவர் எழுப்பிய
கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லும்முகமாக
இப்போது “ராகுல் காந்தியின் தலைமை தேவையா”
என்கிற கேள்விக்கு விடைகாண முயன்றிருக்கிறார்.

மிக அழகாக, மிக விவரமாக – காரணங்களை
அலசி இருக்கிறார். அவரது கட்டுரையை
கீழே தந்திருக்கிறேன்….

இதன் மீது விமரிசனம் தள வாசக நண்பர்கள்,
வழக்கம் போல் – தங்கள் கருத்துகளை
முன்வைக்கலாம். நானும், எனது கருத்துகளுடன்
பின்னூட்டங்களில் கலந்து கொள்கிறேன்…

—————————————————————————–

ராகுல் காந்தி தேவையா….?
– ஜெயமோகன்

இந்திய ஜனநாயகத்தில் உங்களுக்கு நம்பிக்கை
இருந்தால் இந்தியாவில் ஒரு வல்லமை வாய்ந்த
எதிர்க்கட்சி இருக்கவேண்டும் என ஒத்துக்கொள்வீர்கள்.
இன்றைய ஆட்சிமேல் சலிப்போ கோபமோ
எழுமென்றால் மக்கள் தேர்ந்தெடுக்க இன்னொரு
தரப்பு இருக்கவேண்டும். இன்றைய அரசின்
தோல்விகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்ட
நாடாளுமன்றத்திலும் மக்கள்மன்றத்திலும்
வலுவான ஓர் அமைப்பு இருக்கவேண்டும்.

அவ்வாறு நிலைகொள்ளும் எதிர்க்கட்சி இந்தியா
முழுக்க வேர்களுள்ளதாக இருக்கவேண்டும்.
இந்தியாவின் எந்த ஒருபகுதிக்கும் உரியதாக,
ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கோ வட்டாரத்தினருக்கோ
ஆதரவாகச் செயல்பட்டாகவேண்டிய கட்டாயம்
இல்லாததாக இருந்தாகவேண்டும்.

இன்றைய சூழலில் அத்தகைய கட்சி
காங்கிரஸ் மட்டுமே. அடுத்த காலகட்டத்தில்கூட
இன்னொரு கட்சி அவ்வாறு எழுந்துவரும் என்று
தெரியவில்லை. ஆகவே ஜனநாயகத்தையும் தேசிய
ஒருமைப்பாட்டையும் நம்பும் எவரும் காங்கிரஸ்
வாழவேண்டும், வல்லமைபெறவேண்டும்,
நிகரென நின்றிருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள்.

சரி, அதற்கு ராகுல்தான் ஒரே வழியா..?
பரம்பரை ஆட்சி அன்றி வேறுவழி இல்லையா..?

இருக்கும் தலைவர்களில் எவர் தேசமளாவ
தெரியப்பட்டிருப்பவர்,

வட்டார அடையாளங்கள் அற்றவர்
என்பதே கேள்வி. அது ராகுல்தான்.

ஆகவே அவர் தலைவராக இருந்தாகவேண்டும்.
அவர் தலைவராக இருந்தால் மட்டுமே கட்சியின்
தேசிய அடையாளம் நீடிக்கும். கட்சியை நாடெங்கும்
தொகுக்கும் மையம் வலுவாக இருக்கும். அப்படித்தான்
அக்கட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அதுவே ஒரே வழி.

இந்திய அரசியல்சூழலில் உள்ள சில நடைமுறைக்
கூறுகளை நாம் கவனிக்கவேண்டும். இங்கே
அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு
உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும்,
மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக்
கொள்ள முடியும்.

அரசாங்கமே மாபெரும் விளம்பரநிறுவனமாக
ஆகிவிடுகிறது இங்கே.

சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய
அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று
எண்ணிப்பாருங்கள்.

ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும்
அந்தத் தொகை கிடைக்காது.

ஆகவே இங்கே ஆட்சியாளர் அரசு என்ற பீடம் மீது
ஏறி நின்று தேர்தலை எதிர்கொள்கிறார். எதிர்ப்பவர்
தரையில் நிற்கிறார்.
அங்கேயே சமமின்மை உருவாகிவிடுகிறது.

இந்தியத்தேர்தலென்பது எப்போதும் ஆளுமைகளுக்கு
இடையேயான போராகவே நிகழ்கிறது, மக்களால்
அவ்வண்ணமே உள்வாங்க முடிகிறது, என்பதனால்
ஜனநாயகப் போராட்டத்தில் ஆட்சியாளர்
வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்

முன்பு அரசே ஆட்சியாளர்களை விளம்பரப்படுத்தும்
வழக்கம் இருக்கவில்லை. நேருவின் காலகட்டத்திலும்,
காமராஜர், பக்தவத்சலம் ஆட்சிக்காலம் வரைக்கும் கூட
அரசும் ஆட்சியாளர்களும் வேறாகவே கருதப்பட்டனர்.

அரசுச் செலவில் ஆட்சியாளருக்கு நேரடி விளம்பரம்
செய்வது, அரசுத்திட்டங்களை ஆட்சியாளரான
அரசியல்வாதியின் கொடைகளாக விளம்பரப் படுத்துவது
ஆகியவை மு.கருணாநிதியால் இந்திய அளவில்
தொடங்கி வைக்கப்பட்டவை.

நான் சிறுவனாக இருக்கையிலேயே அவற்றை
ஏ.என்.சிவராமன் ( தினமணி ஆசிரியர் )
கடுமையாகக் கண்டித்து எழுதிய கட்டுரைகளை
வாசித்திருக்கிறேன்.

அவை மோசமான முன்னுதாரணங்கள் என அவர்
சொன்னார். அவ்வாறே ஆகியது.

அரசியலில் இந்திரா காந்தி பெரும்பாலும்
மு.கருணாநிதியின் வழிகளையே பின்தொடர்ந்தார்.
அவற்றிலொன்று இந்த விளம்பரம்.

பின்னர் வந்த எம்.ஜி.ஆர் பதினாறடி பாய்ந்தார்.
ஜெயலலிதா முப்பத்திரண்டு அடி.

மோடி முப்பத்திரண்டாயிரம் அடி.

இச்சூழலில் எதிர்க்கட்சியினரிடம் வலுவான
ஆளுமையாக ஒருவரை முன்னிறுத்தமுடியாத நிலை
உருவாகிறது. பொதுவாக கல்வியறிவு குறைவான
இந்த மாபெரும் நிலத்தில் நாடளாவ ஒருவரைக்
கொண்டுசென்று சேர்ப்பது எளிதல்ல.

இந்திய அரசியலில் மாபெரும் தலைவர்கள் கூட
அவ்வாறு நாடெங்கும் அறியப்பட்டவர்கள் அல்ல.
ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன்,
மொரார்ஜி தேசாய் , வி.பி.சிங் வரை எவரும்
நாடெங்கும் அறியப்படவில்லை.

இந்த வசதியை ஐம்பதாண்டுகளாகக் காங்கிரஸ்
பயன்படுத்திக்கொண்டது. இந்திரா முதல் ராஜீவ் வரை
இந்த வாய்ப்பையே முதன்மை ஆற்றலாகக் கொண்டிருந்தனர்.

நெருக்கடிநிலைக்குப்பின் இந்திரா மேல் மிகக்கடுமையான
கசப்பு உருவான காலகட்டத்தில்கூட அவ்வெறுப்பை
நாடளாவத் திரட்ட ஓர் எதிர்க்கட்சித்தலைவர் இங்கே
இருக்கவில்லை. கூட்டு ஆட்சியையே கொண்டுவர
முடிந்தது. அந்தக்கூட்டாட்சி நீடிக்கவில்லை. அதையே
காரணமாகக் காட்டி காங்கிரஸ் மீண்டும் வந்தது.

ஆளுமையை மையமாக்கிய இந்தியத்தேர்தலில்
ஆளுமை இல்லாமல் தேர்தலைச் சந்தித்து
வெல்லமுடியாது. நாடெங்கும் அறியப்படும் தலைவர்
இல்லையேல் மையத்தொகுப்பு நிகழாது.

இந்திய அரசியலில் கூட்டுஅரசுகள் தலைமையின்றி
வெற்றுப்பூசலாக சிதையும். அதையே அவர்களின்
பலவீனமாகச் சுட்டிக்காட்டி ‘நிலையான அரசு’ என்ற
கோஷத்துடன் மையவிசை கொண்ட கட்சி ஆட்சியில்
நீடிக்கமுடியும். இந்திரா, ராஜீவ் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இன்று அந்த இடத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது.
அன்று எதிர்க்கட்சிகள் இருந்த இடத்தில் காங்கிரஸும்
பிற கட்சிகளும் உள்ளன

காங்கிரஸில் நாடெங்கும் அறியப்படும் தலைவர்
ராகுல் காந்திதான். இதுவும் இந்தியாபோன்ற ஒரு
முதிர்ச்சியற்ற ஜனநாயகத்தில் தவிர்க்கமுடியாதது.

ஒரு தலைவரை நாடெங்கும் கொண்டுசென்று சேர்ப்பது
கோடானுகோடி ரூபாய் முதலீடு தேவையான ஒன்று
என்னும்போது இன்னாரின் மகன் என்பது மிகப்பெரிய
செல்வம். அது அவரை எளிதில் கொண்டு சென்று
சேர்க்கிறது. அவருடைய தந்தை, அவருடைய
குடும்பம் ஈட்டி வைத்திருக்கும் பெயர் என்பது
ஒரு முதலீடு. அதை அவர் துறக்கவேண்டும் என்றும்
அதை காங்கிரஸ் கட்சி இழக்கவேண்டும் என்றும்
எவர் சொல்லமுடியும்?

பாரதிய ஜனதாக் கட்சி ‘தொண்டர் அடிப்படை’ யில்
கட்டப்பட்டது.

அதற்குத் தொண்டர்களை உருவாக்குவதற்கான
மாபெரும் அடித்தளமாக ஆர்.எஸ்.எஸ் உள்ளது.

இருந்தும் அரைநூற்றாண்டாக அதனால் நாடெங்கும்
அறியப்பட்ட ஒரு தலைவரை உருவாக்க முடியவில்லை.
அது அவர்களின் மிகப்பெரிய குறைபாடாக நீடித்தது.
முழுப் பெரும்பான்மையை எட்டமுடியாது
அக்கட்சி பலகாலம் திணறியது அதனால்தான்.

மோடி எழுந்துவந்தது ஒரு வரலாற்று வாய்ப்பு.
குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடிமேல் கொண்ட
அச்சம், காழ்ப்பால் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்
அவரைப்பற்றிப் பேசிப்பேசி நாடெங்கும் கொண்டு
சென்று சேர்த்தன.

அரசியலை தாங்களே விரும்பிக் கவனிக்கும்
வழக்கமற்ற பெரும்பாலான மக்கள் உள்ள இந்த
நாட்டில் எதிர்மறை விளம்பரமும் விளம்பரமே.
அதுவே மோடியை நாடெங்கும் கொண்டுசென்று
சேர்த்தது.

இன்று மோடி இந்திய மைய அரசின் விளம்பர
வல்லமையால் நாடெங்கும் நன்றாக
அறியப்பட்டிருக்கிறார். இன்று மாபெரும் ஆளுமை
என்ற படைக்கலம் பாரதிய ஜனதாவிடம் உள்ளது.
பாரதிய ஜனதா குதிரைமேல் இருந்து போரிட
காங்கிரஸ் தரையில் நின்றிருக்கிறது

ஆகவே, இன்று ஜனநாயகம் செயல்படவேண்டும்
என்றால் ராகுல் தலைமையில் காங்கிரஸ்
பணியாற்ற வேண்டும். மக்களால் நாடெங்கும்
அறியப்பட்டிருத்தல் என்னும் வாய்ப்பு அவருக்கே.
அதற்கு அவருடைய குடும்பப்பின்னணி காரணம்
என்றாலும் அதில் பிழையில்லை.

காங்கிரஸ் வலுவிழக்கும் என்றால் இந்தியாவை
கட்டி ஒன்றாக்கியிருக்கும் விசைகளில் ஆற்றல்மிக்க
ஒன்று இல்லாமலாகிறது.

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக மாநிலக்கட்சிகளோ
உதிரிக்கட்சிகளோ வருமென்றால் அது –
நாட்டுநலனுக்கு நல்லது அல்ல.

இந்தத்தேர்தலில் இத்தகைய தோல்விக்கான
காரணங்கள் என்னென்ன?

தேர்தலே ஆளுமைகளுக்கு எதிரான போர்
என்றிருக்க ராகுலை பிரதமர் வேட்பாளராக,
மைய ஆளுமையாக முன்னிறுத்த எதிர்கட்சிகள்
தவறிவிட்டன. அவர்கீழ் இணைந்து நின்று
பணியாற்றுவோம் என்னும் வாக்குறுதியை அவை
மக்களுக்கு அளிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியேகூட அவரை முன்னிறுத்துவதில்
மென்றுவிழுங்கியது. அக்கட்சிக்குள்லேயே
மூத்த தலைவர்கள் அதை விரும்பவில்லை.
ராகுலே கூட தயக்கமான மொழியில் பேசினார்.
மோடி தயக்கமில்லாமல் தன்னை தலைவராக
முன்னிறுத்தினார். அவருடைய கட்சியும்
கூட்டணிக்கட்சிகளும் அவரை பின்துணை செய்தன.
அந்த தயக்கமின்மை ராகுலிடம் இருக்கவில்லை.
இந்திய அரசியலுக்கு அதெல்லாம் உதவாது.

ராகுலிடம் இருக்கும் அடக்கம் போன்றவை
தனிப்பட்ட முறையில் நற்பண்புகளே.(ஆனால், )
அரசியலில் – முன்னிற்கும் தன்மை, தயக்கமின்மை,
ஒருவகையில் கூச்சமின்மை ஆகையவை
தேவையாகின்றன.

வெல்லும் முனைப்பே தலைவர்களை
உருவாக்குகிறது. தன்னை வழிநடத்துவோனாக
எண்ணிக்கொள்பவன் வழிநடத்த ஆரம்பிக்கிறான்.

உலக அளவிலேயே மாபெரும் தலைவர்கள்
அனைவருமே தன்மைய நோக்கு கொண்டவர்கள்.
தன்னை முன்வைக்கவும் தற்பெருமை பேசவும்
தயங்காதவர்கள். தருக்குதல் என்பது தலைமையின்
இயல்பு. அது மக்களிடையே நம்பிக்கையை
உருவாக்குகிறது.அவர் சொற்களுக்கு மதிப்பை
அளிக்கிறது.

ராகுலை முதலில் அவருடைய கட்சி முழுமையாக
ஏற்கவேண்டும்.

ஐயமின்றி அவர் தலைமையை ஏற்காதவர்கள், அவரை
பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தாதவர்கள் களையெடுக்கப்படவேண்டும்.

எப்படி தலைமையில் பாரம்பரியவழி ஏற்கத்தக்கது.
மாநிலங்களில் அவ்வாறு அல்ல. ஏனென்றால்
பாரம்பரியம் ஏற்கப்படுவது ஒரு தலைவர் நாடெங்கும்
தலைவராக அறியப்படவேண்டும் –
ஏற்கப்படவேண்டும் என்பதற்காக மட்டுமே.

மாநிலங்களில் தலைமையை கீழ்மட்டம் வரை
கொண்டுசென்றுசேர்க்கும் துடிப்பான இளந்தலைவர்கள்,
அடிமட்டத்திலிருந்து உருவாகிவந்தவர்கள்,
களம் அறிந்தவர்களே தேவை.

இந்தத் தேர்தலில் மோடிக்கு மாற்றான வலிமையான
தலைவராக ராகுல் முன்னிறுத்தப்பட்டாரா என்று
மட்டும் கேட்டுப் பார்க்கலாம்.

குறைந்தது தமிழகத்திலாவது அவருடைய முகம்
தென்பட்டதா? காங்கிரஸ் வென்ற கேரளத்திலேயே
கூட அவர் முன்னிறுத்தப்படவில்லை.

மோடிக்கு மாற்றாக நிகராக ஒரு தலைவர் குறைந்தது
இரண்டு ஆண்டுக்காலம் தெளிவாக
முன்னிறுத்தப்பட்டாலொழிய அவரை வெல்லமுடியாது.
இன்று அதற்கான வாய்ப்பு கொண்டவர் ராகுல் மட்டுமே.

தேர்தலுக்குப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்
என்பதைப்போன்ற பசப்புகளுக்கெல்லாம்
இந்திய தேர்தலில் இடமில்லை.

எவர் தலைவராவார், அவர் என்னென்ன
வாக்குறுதிகளை அளிக்கிறார், அவர் எப்படிப்பட்டவர்
என்பவை மட்டுமே கேள்விகள்.

அதற்கான விடையென ஒருவரை முன்னிறுத்தி
குறைந்தது மூன்றாண்டுக்காலம் நாடெங்கும் செல்லும்
தொடர்ப்பிரச்சாரம் வழியாக மட்டுமே அவரை
மைய ஆளுமையாக நின்றிருக்கும் மோடிக்கு எதிராக
நிறுத்த முடியும். அப்போதுதான் அவர்
வெற்றிவேட்பாளர் ஆகிறார். இந்திய ஜனநாயகத்தில்
அவ்வாறுதான் மாற்றுத்தலைமை உருவாக முடியும்

ராகுல் தலைமை ஏற்கவேண்டும்.
நாடெங்கும் அடுத்த பிரதமருக்கான ஆளுமையாக
நிமிர்ந்து நின்றிருக்கவேண்டும்.

சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும்
பொறுப்பேற்கவேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அத்தனை மாநிலங்களிலும்
அவர் பெரும் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகளை
நடத்தவேண்டும்.

ஐந்தாண்டுகளுக்குப்பின் மோடி
மக்களை சந்திக்கையில் மக்கள் முன் – மாற்றும்
அதே அளவுக்கு வலுவாக நின்றிருக்கவேண்டும்.

இன்னொருவர் கண்ணுக்குப் படாமையால்
மோடி மீண்டும் வருவார் என்றால் –
அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே.

.
—————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to ராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து ….

 1. Karthik சொல்கிறார்:

  32000 !!!! nailed…superb.

 2. Ramnath சொல்கிறார்:

  // ஐந்தாண்டுகளுக்குப்பின் மோடி
  மக்களை சந்திக்கையில் மக்கள் முன் – மாற்றும்
  அதே அளவுக்கு வலுவாக நின்றிருக்கவேண்டும்.

  இன்னொருவர் கண்ணுக்குப் படாமையால்
  மோடி மீண்டும் வருவார் என்றால் –
  அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே. //

  Perfect Statement.
  Right Assessment.

 3. புதியவன் சொல்கிறார்:

  காங்கிரஸ் வலுவாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. நல்ல பலமான எதிர்க்கட்சி தேவை. அந்தக் கட்சிக்கு வலிமையான தலைமை தேவை.

  நாடு முழுவதும் அறிந்த தலைவர் ராகுல் என்று சொல்கிறாரே…யாருக்கு இந்த மோடியை 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும்? எப்படி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அவர் அறியப்பட்டவராக ஆனார்? காங்கிரசில் வேறு கவர்ச்சிகரமான தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரையும் 4 வருடங்களில் பிரபலப்படுத்த முடியாதா? ஏன் ‘ராகுல்’காந்தி மட்டும்தான் வேண்டும்? வாஜ்பாய் முன்னிறுத்தப்பட்டபோது ஏற்ற மக்கள், ஏன் நாடறிந்த அத்வானியை ஏற்கவில்லை? மக்கள் ஒருவரை ஏற்பதும் ஏற்காததும் அவரது அணுகுமுறை, கொள்கைகள், மக்கள் அவர் மீது வைக்கும் நம்பிக்கை, அவர்களது ஆளுமை இவைகளைப் பொறுத்துதான். ராகுல் தலைமையை எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்கவேண்டிய தேவை என்ன? “நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன்’ என்ற கதைதான். காங்கிரசிலேயே அவரை பல தலைவர்கள் மதிக்கவில்லை.

  ஜெயமோகனுக்கு 5 வயதுதான் ஆகிறதா இல்லை இந்திரா காலத்தில் எவ்வளவு விளம்பரங்கள் செய்யப்பட்டன என்பதை மறைக்கிறாரா? இந்திராதான் இந்தியா, 20 அம்சத் திட்டம் என்பனவற்றிர்க்கு எவ்வளவு அரசுப் பணம் செலவழிக்கப்பட்டது, எத்தனை அரசு பள்ளிகள்மூலம் அவை விளம்பரப்படுத்தப்பட்டது என்பதையெல்லாம் அவர் அறியாதவரா? நான் 7வது படிக்கும்போது, இருபது அம்சத் திட்டம் என்பதற்காக நிறைய போட்டிகள் (பேச்சு, பாடல் போன்று) எங்கள் பள்ளியில் (இது ரிமோட் இடத்தில், சத்தியமங்கலத்துக்கு அருகே) நடந்தன. அதுமட்டும் இல்லை, கருணாநிதியின் கோயமுத்தூர் மீட்டிங்குக்காக, ஒரு நாள் பள்ளி விடுமுறை விடப்பட்டது (மாணவர்கள் கலந்துகொள்ளணும் என்று). சஞ்சய் காந்தி அரசுப் பணத்தைப் பயன்படுத்தி கு.க. திட்டத்தை மிகவும் முன்னிறுத்தியதால்தான், அதிகாரமாகச் செயல்பட்டதால்தான் அவர் முடிவு காலத்தைச் சந்திக்க நேர்ந்தது என்று gossip அப்போது பரவவில்லையா?

  எதுவுமே காலத்தின் பால் வளர்ச்சியுறும். மோடி அவர்களும், அரசாங்கத் திட்டங்களை விளம்பரப்படுத்தியிருக்கிறார், அரசாங்கப் பணத்தில். இதில் குறை கூற எதுவும் இல்லை. சட்டப்படி இதில் எதுவும் தவறல்ல. எந்த முதலமைச்சர், பிரதமர், தங்கள் படங்களை பெரிதாக விளம்பரத்தில் போடாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள்?

  ஜெயமோகன் 36000 மடங்கு என்று தன் ஆசைக்காகச் சொல்லிக்கொள்ளலாம். எங்கள் தாத்தா தன் கல்விக்காகச் செலவழித்ததைவிட என் பையனுக்கு 50,000 மடங்கு அதிகமாகச் செலவழிகிறது என்று சொல்லிக்கொள்வதைப்போல.

 4. Ramnath சொல்கிறார்:

  //யாருக்கு இந்த மோடியை 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும்? எப்படி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அவர் அறியப்பட்டவராக ஆனார்? //

  muthalil jeyamohan katturaiyai ozunga padiyunga sir.
  avarey ithukku bathil solli irukkiraar.

  //மோடி எழுந்துவந்தது ஒரு வரலாற்று வாய்ப்பு.
  குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடிமேல் கொண்ட
  அச்சம், காழ்ப்பால் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்
  அவரைப்பற்றிப் பேசிப்பேசி நாடெங்கும் கொண்டு
  சென்று சேர்த்தன.

  அரசியலை தாங்களே விரும்பிக் கவனிக்கும்
  வழக்கமற்ற பெரும்பாலான மக்கள் உள்ள இந்த
  நாட்டில் எதிர்மறை விளம்பரமும் விளம்பரமே.
  அதுவே மோடியை நாடெங்கும் கொண்டுசென்று
  சேர்த்தது.//

  • புதியவன் சொல்கிறார்:

   ராம்நாத்…இடுகையை படித்துவிட்டுத்தான் எழுதினேன். ‘குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடிமேல் எந்த எதிர்கட்சிக்கு அச்சம் வந்தது’? இந்த வாக்கியத்தை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? யாருக்கு ‘அச்சம் வந்தது? நான் இந்த எபிசோடை மிக நன்றாக அறிந்தவன். எப்படி, யார், ‘மோடி’ பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பணத்தை கறக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்பது, உங்களுக்குத் தெரியாது. அந்த போஸ்டர்கள் எல்லாவற்றையும் வெளிநாட்டில் நான் பார்த்தவன். இது மோடி, குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது. அப்போது அவர் பெயர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படவில்லை.

   மோடி பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டது 2013ல். . அப்போதுதான் நாடு முழுவதும் அவரைப்பற்றி பேச்சும் விவாதமும் எழுந்தது, கல்கி போன்ற பத்திரிகைகள் குஜராத்திற்கு விசிட் செய்து, அங்கு மோடி ‘அதைச் செய்து சாதனை படைத்தார், மின்சாரத் தேவையைக் குறைத்து சூரிய வெளிச்சத்தில் மின்சாரம் உற்பத்தி செய்தார், அந்த பேனல்கள் கால்வாய்களை மூடும்படியாகச் செய்து, தண்ணீர் ஆவியாவதைத் தடுத்தார் என்றெல்லாம் ‘ப ஜ னை’ செய்தது. இவ்வளவு ஜால்ராவுக்கும் எதிர்ப்புக்கும் இடையிலும், ‘மோடியா லேடியா’ என்று தனக்கு எட்ட வாய்ப்பே இல்லாத ‘பிரதமர்’ பதவிக்கு தன்னை முன்னிறுத்தி 37 எம்பிக்களை தமிழகத்தில் தனியாக வென்றார் ஜெ.

 5. Ramnath சொல்கிறார்:

  // ஏன் ‘ராகுல்’காந்தி மட்டும்தான் வேண்டும்? //

  What Sin RG has committed ? Why not He ?

  • புதியவன் சொல்கிறார்:

   ராகுல் காந்தியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது உங்கள் விருப்பம் ராம்னாத்.
   1. ராகுல் எந்த தகுதியில் காங்கிரஸ் தலைமைக்கு வந்தார்?
   2. அவருடைய பிரிட்டிஷ் குடியுரிமை, அங்கெல்லாம் பிஸினஸ் டீலிங்க்ஸ், வியாபாரம் நடத்துவது – இதெல்லாவற்றிர்க்கும் அவருக்கு பணம், அறிவு, கேபபிலிட்டி எங்கிருந்து வந்தது?
   3. ராகுல் இந்தியாவிற்காகவா காங்கிரஸ் தலைவராக ஆசைப்படுகிறார் இல்லை தன் சகோதரி பிரியங்கா, அவருடைய ஊழல் கணவர் வாத்ரா போன்றோரின் நன்மைக்காக பிரதமர் பதவியை விரும்புகிறாரா? அவர் பங்கெடுத்த அரசில்தானே ராபர்ட் வாத்ரா ஏர்போர்ட்டில் எந்த செக்கிங்கும் இல்லாமல் செல்ல சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது? காங்கிரஸ் தலைமையின் (சோனியா & கம்பெனி) குடுமி ப.சி. கையில் மாட்டியிருப்பதால்தானே ப.சி. மிரட்டலுக்கு அடிபணியவேண்டிவந்தது.
   4. மோடி ‘இந்துத்துவா’ என்றால் ராகுல் ‘சிறுபான்மையினத்துவா’ இல்லையா? அதனால்தானே அவர் வயநாட்டை தெரிவு செய்தார். (இல்லையென்றால் கன்யாகுமரி…….. வாரனாசி/குஜராத்தில் காந்திநகர் என்று தெரிவு செய்ய அவருக்குப் பைத்தியமா என்ன). ‘மத’ சார்பு என்று பார்க்கும்போது மோடிக்கும் ராகுலுக்கும் வித்தியாசம் இல்லை.

   Why not HE? என்பதற்கு பதில் கிடையாது. Why should HE என்பதற்கு உங்களிடம் பதில் இல்லாததைப்போலவே.

   • Ramnath சொல்கிறார்:

    // 1. ராகுல் எந்த தகுதியில் காங்கிரஸ் தலைமைக்கு வந்தார்? //

    உங்கள் தலைவர் அமீத் ஷா எந்த தகுதியில் பாஜக
    தலைமைக்கு வந்தார் ? பொதுக்குழு கூடி தேர்ந்தெடுத்ததா ?

    // 2. அவருடைய பிரிட்டிஷ் குடியுரிமை, அங்கெல்லாம் பிஸினஸ் டீலிங்க்ஸ், வியாபாரம் நடத்துவது – இதெல்லாவற்றிர்க்கும் அவருக்கு பணம், அறிவு, கேபபிலிட்டி எங்கிருந்து வந்தது? //

    5 வருடங்களாக நீங்கள் தானே ஆட்சி நடத்துகிறீர்கள். ?
    சிபியை, இன்டெல்லிஜென்ஸ், என்ஃபொர்ஸ்மெண்ட் இத்தனையையும்
    உங்கள் கையில் தானே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
    அப்படி தவறான பின்னணி இருந்தால், தூக்கி உள்ளே போட வேண்டியது தானே ? ஏன் செய்யவில்லை ? ஆதாரம் எதுவும் இல்லாமல்
    பேசியே ஒருவரை டேமேஜ் செய்வது தானே உங்கள் தந்திரம் ?

    //4. மோடி ‘இந்துத்துவா’ என்றால் ராகுல் ‘சிறுபான்மையினத்துவா’ இல்லையா? //

    மோடி அஹமதாபாத்தை விட்டு விட்டு, புண்ணியஸ்தலமான
    காசி(வாரணாசியில்) வந்து போட்டியிட்டது ஏன் ? மெஜாரிடியினர்
    கண்களை மூடிக்கொண்டு ஓட்டு போடுவர் என்பதால் தானே ?

    அப்படியென்றால், மோடியும் -ராகுலை போல் தான் என்கிறீர்களா ?

   • புதியவன் சொல்கிறார்:

    ராம்நாத் சார்…..

    1. அமித்ஷா குஜராத்தில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தார். மோடிக்கும் அவருக்கும் ஒத்திசைவு இருந்தது. (அமித்ஷா என் தலைவர் அல்ல. உங்களுக்கு ராகுல், சோனியா, ராபர்ட் வாத்ரா, அவருடைய பையன்கள் தலைவர்களாக இருக்கலாம். நான் உண்மை பேசுபவன். எனக்குத் தெரிந்த ஒரு தலைவர் ஜெ. அவர்கள்தான்). அதனால், தான் பிரதமராக இருக்கும்போது கட்சியிலிருந்து குடைச்சல் வரக்கூடாது என்பதற்காக அமித்ஷாவை தலைவராக்கினார் (More importantly the party accepted. சோனியா ஒருங்கிணைப்பாளர், தான் தலைவர், தன் சகோதரி புதுப் பொதுச்செயலாளர், இந்தியாவில் ராபர்ட் வாத்ராவுக்கு மட்டும்தான் ஏர்போர்ட் செக்யூரிட்டி கிளியரன்ஸ் கிடையாது என்று பொதுக்குழுவைக் கூட்டி ராகுல் approval வாங்கின மாதிரி தெரியலையே. உங்களுக்குத் தெரிந்தால் எழுதுங்கள்)

    2. /ஆதாரம் எதுவும் இல்லாமல் பேசியே ஒருவரை டேமேஜ் செய்வது தானே உங்கள் தந்திரம் // – இது சரியான கேள்வி. காங்கிரஸ், திமுகவைப் பார்த்து நீங்கள் கேட்டது. வெறும் குஜராத் முதலமைச்சர், உள்துறை அமைச்சர்தானே மோடியும் அமித்ஷாவும். நீங்கள்தானே மோடி, அமித்ஷா ‘குஜராத் கலவரங்களுக்கு நேரடி காரணம்’ என்று ‘ஆதாரம் இல்லாமல் பேசிப் பேசி அவர்களை டேமேஜ் செய்யப் பார்த்தது? 10 வருடம் சிபிஐ, தேர்தல் கமிஷன், நீதித்துறை உங்கள் கையில்தானே இருந்தது. “தூக்கி உள்ளே போட வேண்டியது தானே ? ஏன் செய்யவில்லை ?” ஏன் ஒவ்வொரு கோர்ட்டும் அவர்கள் ‘குற்றமற்றவர்கள்’ என்று நிரூபணம் ஆகிவிட்டது என்று சொல்லி விடுவித்தது, அதுவும் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்தபோது?… அதனால் மோடியை, அமித்ஷாவை குஜராத்தின் கலவர நாயகர்கள் என்று சொல்பவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுக்கணும் ராம்நாத் சார்.

    3. காங்கிரஸ் ‘சிறுபான்மையினர்’ வாக்கு வங்கி என்பதிலேயே காலம் ஓட்டுவதால், இவர்களை திரும்பி அடிக்க சரியான அஸ்திரம் ‘இந்துத்துவா’ என்பதைப் புரிந்து மோடி ‘வாரணாசியில்’ போட்டிபோட்டார். ‘தோ ல் வி ப ய த் தி னால்’ அல்ல. ஆனால் ராகுல் செய்தது, தான் வெற்றி பெறவேண்டும் என்றால் அங்கு சிறுபான்மையினர் அதிகமாக இருக்கணும் என்ற ‘மதச் சார்பு’.

    Have I answered your questions Ramnath sir?

    • Ramnath சொல்கிறார்:

     ஒரு சின்ன சந்தேகம்;

     மழுப்பல்களை கூட answer list -ல்
     சேர்த்துக் கொள்ள வேண்டுமா
     புதியவன் சார் ?

 6. Ramnath சொல்கிறார்:

  // மோடி அவர்களும், அரசாங்கத் திட்டங்களை விளம்பரப்படுத்தியிருக்கிறார்,
  அரசாங்கப் பணத்தில். இதில் குறை கூற எதுவும் இல்லை.//

  Please Touch your Conscience and repeat this word once again.

  • புதியவன் சொல்கிறார்:

   என் மனசாட்சி சொல்வது, எந்த முதலமைச்சரும், ‘நான் இதனைச் செய்தேன், என் பெயர்’ என்று கல்வெட்டில் பெயர் பொறிப்பது, சிலைகள் அமைத்து ‘நான் அமைத்தேன்’ என்று பஜனை செய்வது, செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளுக்கு எந்த ஒரு அரசாங்க விளம்பரம் (தன் படத்தோடு) கொடுப்பது – இவை எல்லாமே கடும் குற்றம். இதனைச் செய்தாலே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்து திரும்ப பொதுவாழ்வுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்பது என் நிலைப்பாடு.

   இவன் செய்யலாம், அவன் செய்யக்கூடாது, இவன் என்ன தவறு செய்தாலும் நான் மறந்துவிடுவேன், ஆனால் அவன் செய்தால் ‘மனசாட்சி, தெய்வசாட்சி’ என்று துணைக்கு அழைப்பேன் என்று சொல்வதில், எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடு கிடையாது ராம்நாத் சார்.

   • Ramnath சொல்கிறார்:

    புதியவன் சார்,

    இவர் ஏன் செய்தார் என்று கேள்வி வரும்போது
    நீங்கள் தான் அவர் செய்யவில்லையா ?
    வேறு எவரும் செய்யவில்லையா
    என்று இவர் செய்வதை நியாயப்படுத்துகிறீர்கள்.

    அதனால் தான் மனசாட்சியை கூப்பிட வேண்டியதாயிற்று.
    நீ ஏன் பிக் பாக்கெட் அடித்தாய் என்று ஒருவனை
    கேட்டால், அவன் கூடத்தான் அடித்தானே என்று சொன்னால்
    இவன் செய்வது நியாயமாகி விடுமா ?

    இதுக்குப்பேரு தான் சப்பைக்கட்டு.

    • Ramnath சொல்கிறார்:

     புதியவன் சார்,

     // மோடி அவர்களும், அரசாங்கத் திட்டங்களை விளம்பரப்படுத்தியிருக்கிறார், அரசாங்கப் பணத்தில். இதில் குறை கூற எதுவும் இல்லை. சட்டப்படி இதில் எதுவும் தவறல்ல. எந்த முதலமைச்சர், பிரதமர், தங்கள் படங்களை பெரிதாக விளம்பரத்தில் போடாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள்?//

     இப்படி நீங்கள் கூறியதால் தான் உங்கள் மனசாட்சியை துணைக்கு
     கூப்பிட வேண்டியதாயிற்று.
     சொன்னது நீங்கள் தானே ?
     ஆரம்பித்தது நீங்கள் தானே ?

    • புதியவன் சொல்கிறார்:

     /இவர் ஏன் செய்தார் என்று கேள்வி வரும்போது நீங்கள் தான் அவர் செய்யவில்லையா ? வேறு எவரும் செய்யவில்லையா என்று இவர் செய்வதை நியாயப்படுத்துகிறீர்கள்.//

     இந்த மாதிரி வாதம் தவறுதான் ராம்நாத் சார். ஆனா நீங்க, “மோடி/பாஜக அரசுப் பணத்தை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்தறாங்க. ரொம்ப மோசம்’… அதுனால ராகுல் பிரதமராக வரணும், காங்கிரஸ் வரணும் என்று சொல்வதால்தான் நான் ‘ராகுல்/காங்கிரஸ்’ லட்சணத்தைச் சொல்லவேண்டியிருக்கு. ‘அரசுப் பணத்தை விளம்பரத்துக்கு யார் செலவழித்தாலும் மிகப் பெரிய தவறு’ என்று மட்டும் சொன்னீங்கன்னா, அதில் யாருக்கு கருத்து வேறுபாடு இருக்கும்? யோசிங்க…

 7. Ramnath சொல்கிறார்:

  Puthiyavan,

  Your writings show only your animosity against RG
  and blind support to NM.

  Without bringing in his Mother, Father, Grand Mother,
  Great Grand Father etc. etc. –

  Plainly say what is the NEGATIVE POINT
  you found against RG leading Congress Party ?

  Have you found him running after POWER like Others ?
  Is he NOT simple to approach.
  Is he NOT open hearted and listening to people ?

  Please Don’t be Blind when you are trying to
  put up a show as if you stand neutral.

  • புதியவன் சொல்கிறார்:

   ராம்நாத் – உங்களுக்கு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்துவிட்டேன். கண்ணை மூடிக்கொண்டு மோடியை நான் ஆதரிக்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைப்பதைப் போலவே நானும் கண்ணை மூடிக்கொண்டு ராகுல் காந்தியை, அவரின் பழைய செயல்களை எல்லாம் மறந்து நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

   1. running after POWER like Others – அப்படியா? பதவியை அவர் எதிர்பார்க்கலையா? அப்புறம் ஏன் பிரியங்காவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார்? ‘ராஜினாமா’வை அம்மாவிடம் கொடுத்தபிறகு ஏன் இன்னும் ‘தலைவர்’ என்ற பதவியிலேயே இருக்கிறார்?
   2. Is he NOT simple to approach. – எதைவைத்து இதனைச் சொல்கிறீர்கள்? கிறிஸ்டியன் கல்லூரியில் ஆறு மாதத்துக்கு முன்னாலே திட்டமிட்டு, கேள்விகளை அனுப்பி, அங்கு ஒரு நிகழ்ச்சியை தமிழக காங்கிரசுக்குக்கூடத் தெரியாமல் நடத்தியதை வைத்தா?
   3. Is he NOT open hearted and listening to people – இதற்கு என்ன உதாரணங்கள் கொடுக்கப்போகிறீர்கள் ராம்நாத்? அவர்தானே ‘தலைமை’ப் பதவியில் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்தது? அப்போது எந்த மக்களிடம் அவர் பேசினார்? எந்த மக்களுக்காக அவர் பேசினார்?

   உண்மை இதற்கு மத்தியில்தான் இருக்கிறது.

   ஆனால் இந்த விவாதங்களைவிட, காங்கிரஸ் வலிமையாக இருக்கணும், எந்த வித மாநிலக் கட்சிகளும் மத்திய அரசுக்கான தேர்தலில் இருக்கக்கூடாது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. மத்திய அரசுத் தேர்தல், தேசியக் கட்சிகளுக்குள் மட்டும்தாம் இருக்கவேண்டும். லோகல் மாஃபியாக்கள் இந்திய அரசு அதிகாரத்தில் பங்குபெறக் கூடாது என்பது என் எண்ணம்.

   • Ramnath சொல்கிறார்:

    இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
    ஆனால் -ராகுல் காந்தி காங்கிரசுக்கு தலைவராக இருக்கக்கூடாது.

    • Ramnath சொல்கிறார்:

     ஒருவேளை நிஜமாகவே மோடிக்கு எதிராக வளர்ந்தாலும் வளர்ந்து விடுவார்.

     • புதியவன் சொல்கிறார்:

      நிச்சயம் வளர்வார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. வளரட்டும். அதில் எனக்கு ஆகப்போவது எதுவுமில்லை. அதுபோலவே மக்கள் மதத்தால் மேலும் பிளவுறுவர். அதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.

      ராகுல் – கிறிஸ்துவ, இஸ்லாமிய காப்பாளர், மோடி அல்லது பாஜக தலைவர் – இந்துக்களின் தலைவர் – இப்படித்தான் அரசியல் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நகரும்னு தோன்றுகிறது.

      ஒருவேளை வேறு ஒரு தலைவர் (நரசிம்மராவைப்போல்… ஆனால் ‘சிறுபான்மையினர்’ பாலிடிக்ஸ் செய்யாதவர்) காங்கிரசுக்கு வந்தால், மக்களுக்கு அது நன்மையாக முடியும். அப்போது யார் என்ன டெலிவர் செய்தார்கள் என்பதுதான் ஃபேக்டராக இருக்கும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  எனக்கு வஞ்சிக்கோட்டை வாலிபன் சினிமாவில்
  வரும் ‘போட்டி-நடனம்’ நினைவிற்கு வருகிறது.

  ஆனால், “சபாஷ் சரியான போட்டி” –
  என்று சொல்ல நான் பி.எஸ்.வீரப்பா இல்லையே 🙂 🙂 🙂

  பி.கு.- மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் இன்னும்
  உள்ளே நுழையக்காணோமே ….
  தொடர்ந்து பார்வையாளராகவே இருந்தால் ரசிக்காதே…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. R KARTHIK சொல்கிறார்:

  நாட்டிற்கு நல்ல ஒரு வலுவான எதிர் கட்சி தேவை. தற்போதைக்கு அது காங்கிரஸ் தான். ஆனால் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் நல்லவர் என்ற பிம்பம் இருந்தாலும் ஒரு நல்ல தலைவர் என்று இதுவரை நிரூபிக்க வில்லை.

  His situation is something like a young man taking up the business from his father. He has to deal with all the old staff in the office, who would have seen this guy as a kid in trouser. Rahul is trying to take charge of the congress conglomerate but its not so easy to boss the old tycoons (பழம் பெருச்சாளிகள்) in it.

  After that is to create an aura around him and impress the people. In today’s connected world congress has to see how they can get into people’s mind. They have to strategize and counter BJP.

  Unless they work out starting now, there is no way he is going to impress for next election. No holidays this time.

  On an other thought, if Rahul introspects and finds himself unfit for this challenge, he should ensure he finds the right person who will be its face. Congress needs a face today, a charismatic face which will give confidence in people’s mind towards it.

  Until they do that, it would be only congress mukht bharat. The path to throne is not easy for Rahul like his ancestors.

  A strong opponent is the need for the country. Its needed even for the betterment of BJP. If not they will also perish.

 10. Mercy சொல்கிறார்:

  Well done Mr. Ramnath.
  Where is Mr.Selvaraj? Please come.
  KM Sir please read this.
  PM MODI LEAD BJP GOVERNMENT HAS HELPED TO THE CONVICTED POLITICIAN BECAME A CM IN SIKKIM.
  Is it a true news?

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே …! இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகிற நகராட்சி தண்ணீரை பிடிக்க வரிசையில் நின்று சாலை மட்டத்தில் இருந்து நான்கு அடி ஆழத்தில் இருக்கின்ற பள்ளத்தில் இறங்கி சாெட்டுகிற தண்ணீரை ஒரு குடம் பிடிக்க மணிக்கணக்கில் நின்று குனிந்து நிமிர்ந்ததில் வலி உள்ளதால் எம்மால் ” வஞ்சிக்காேட்டை வாலிபன் பட “பாேட்டி நடனத்தில் ஆட விரும்பவில்லை ….மாேடி .. ராகுல் ஏன் கடவுள் வந்தாலும் மாறாத வெத்து ஜன நாயகத்தில் விருப்பம் இருக்கின்றவர்கள் நன்றாக ஆட்டம் பாேடட்டும் …அரைத்த மாவையே அரைக்கட்டும் …தவிக்கிற வாய்க்கு தண்ணீரை தேடுவதுதான் தற்பாேதைய தலையாய வேலை எமக்கு …! நன்றி எம்மையும் ஒரு பாெருட்டாக நினைத்து ” எங்கே செல்வராஜ் .” என்றதால் இந்த மறுமாெழி தங்களுக்கு …ஆட்டத்தை ரசியுங்கள் …!!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    அரசியல் ஆட்டம் கிடக்கிறது விடுங்கள்.
    உங்கள் நிலை அறிய வருந்துகிறேன்.
    ஆனால், இங்கே சென்னைவாசிகளின் நிலை
    அதை விடவும் படுமோசம் என்பதை அறிந்திருப்பீர்கள்.

    தாகம் தீர்க்க இறைவன் கருணை காட்ட வேண்டும்..
    விரைவில் தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்ய
    வேண்டுவோம். வானத்தின் கதவுகள் நீரால் திறக்கட்டும்.
    தமிழக மக்களை இந்த கொடுமையிலிருந்து
    காப்பாற்றட்டும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Mercy,

   பாஜக அரசு சட்டவிரோதமாக
   ஒரு அங்குலம் கூட எடுத்து வைக்காது
   என்பதை இன்னமும் நீங்கள்
   புரிந்து கொள்ளவில்லையா…?

   புதிய முதலமைச்சர், லஞ்ச ஊழல்
   குற்றம் நிரூபிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தால்,
   ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று
   முழு தண்டனையையும் அனுபவித்து விட்டு
   வெளியே வந்தார் என்பது உண்மை தான்.

   இப்போதிருக்கும் சட்டவிதிகளின்படி,
   நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெளிவந்தவர்கள்,
   அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்பது
   தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதும்
   உண்மை தான். அதனால் அவர் கடந்த தேர்தலில்
   போட்டியிடவில்லை என்பதும் அவர்
   தற்போதைய சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்ல
   என்பதும் உண்மை தான்.

   ஆனால், அங்கே இருப்பது பாஜக
   மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும்
   கவர்னர் என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே…!

   சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர்,
   முதலமைச்சர் பொறுப்பேற்க சட்டத்தில் வழி இருக்கிறது…
   ஆனால், பதவியேற்ற 6 மாதங்களுக்குள்
   அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும்…
   அப்படி ஆக வாய்ப்பில்லையே… அவர் தேர்தலில்
   நிற்க முடியாதே என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
   6 மாதம் கழித்து தானே அதைப்பற்றி
   கவலைப்பட வேண்டும்…?

   இந்த விதியை பயன்படுத்திக் கொண்டு,
   கவர்னர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

   ———–

   இதில் மத்திய அரசின் தலையீடு எங்கே வந்தது…?
   கவர்னர் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்..
   செயல்படுகிறார். மத்திய அரசு சொல்கிறபடி
   அவர் செயல்பட்டார் என்று நீங்கள் சொல்வதற்கு
   என்ன ஆதாரம்…?

   – என்று …….. நான் கேட்கவில்லை…..

   ஆனால், நண்பர் புதியவன் கேட்டாலும் கேட்பார்…
   எனவே அதற்கும், தயாராகவே இருங்கள் … 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… நீங்கள் குறிப்பிட்டுள்ளதையெல்லாம் படித்தேன். ‘மோடி’யின் (இல்லை….அமித்ஷாவின்) பாஜக செய்வதையெல்லாம் தாங்கிப் பிடிக்க நானென்ன ‘தமிழிசையா’ இல்லை ‘ராகவனா’?

    ‘ஊழல் அரசியல்வாதிகள், ‘குற்றவாளிகளை அரசியல் பதவிக்கு முன்னிறுத்துவது’ – இந்த இரண்டிலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் (ஏன் மற்ற இந்தியக் கட்சிகளுக்கும்) நான் எந்த வேறுபாடும் காணவில்லை. ‘நான் உத்தமன், இவனை விடப் பெரியவன்’ என்று சொல்லும் யோக்கியதை எந்த இந்தியக் கட்சிக்கும் கிடையாது.

    தமிழக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் பாஜக நடந்துகொண்டது, சட்டப்படி சரியாக இருக்கலாம்…. ஆனால் பாஜக செய்தது தமிழகத்துக்கான துரோகம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது காவிரி பிரச்சனையாகட்டும், ஹைட்ரோகார்பன், மீத்தேன்…….. என்று எந்தப் பிரச்சனையாகட்டும். பாஜக தமிழகத்துத்தின் பிரச்சனையைத் தீர்க்க உதவும், தமிழக நலனுக்கு ஆதரவான கட்சி இல்லவே இல்லை. இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

    ஆனால்,…. இதைச் சாக்கிட்டு, அப்படியா, அப்படியென்றால் காங்கிரஸ் வரலாமே,-அவங்க இந்த மாதிரி நியாயமில்லாததைச் செய்யமாட்டார்களே உலக ஊழல் கட்சியான திமுக வரலாமே என்று யாரும் வாதிட்டு வரவேண்டாம். அவர்கள் இருவரும் தமிழக நலனுக்கு எதிரானவர்கள்தாம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     இது நான் ராம்நாத் -க்கு
     உங்கள் பின்னூட்டங்களைப்பற்றி
     எழுதியதிலிருந்து –

     // ஆமாமாம். பாஜக செய்வது சரியில்லை.
     இது மிக மிகத்தவறு. இதை ஏற்றுக்கொள்ளவே
     முடியாது என்று தான் துவங்குவார்.//

     ——–

     // இறுதியில் -முடிக்கும்போது, எது எப்படி
     இருந்தாலும் மோடிஜி தவறு செய்ய
     வாய்ப்பில்லை என்று தான் நான்
     நினைக்கிறேன் என்று
     சொல்லி முடித்து விடுவார்… //

     ——————————————–

     இது இப்போது நீங்கள் எனக்கு எழுதிய
     பின்னூட்டத்திலிருந்து –

     துவக்கம் –

     // பாஜக செய்தது தமிழகத்துக்கான துரோகம்
     என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. //

     முடிவு –

     // ஆனால்,…. இதைச் சாக்கிட்டு, அப்படியா,
     அப்படியென்றால் காங்கிரஸ் வரலாமே,
     -அவங்க இந்த மாதிரி நியாயமில்லாததைச்
     செய்யமாட்டார்களே உலக ஊழல் கட்சியான
     திமுக வரலாமே என்று யாரும் வாதிட்டு வரவேண்டாம். //

     A,B,C – என்று 3 கட்சிகள் இருக்கிற இடத்தில் –
     A-யும், B-யும் வரக்கூடாது என்றால்
     என்ன அர்த்தம்….? C வரவேண்டும் என்பதை
     சொல்லாமல் சொல்வது தானே ?

     வேறு மாற்றுக்கட்சிகள் எதுவும்
     இல்லாத நிலையில் – இந்த 2 கட்சிகளும்
     கூடாது என்றால், பாஜக தான் வரவேண்டும்
     என்பது தானே அர்த்தம்…?

     —————————————————————————–

     நான் ராம்நாத்-க்கு உங்கள் ஸ்டெயிலைப்பற்றி
     எழுதியதை உங்களது இந்த பின்னூட்டத்திலேயே
     நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள் … நன்றி.

     – நீங்கள் உங்கள் கடைசி பாராவை –

     //// ஆனால்,…. இதைச் சாக்கிட்டு, அப்படியா,
     அப்படியென்றால் காங்கிரஸ் வரலாமே,
     -அவங்க இந்த மாதிரி நியாயமில்லாததைச்
     செய்யமாட்டார்களே உலக ஊழல் கட்சியான
     திமுக வரலாமே என்று யாரும் வாதிட்டு வரவேண்டாம். //// –

     – எழுதாமல் விட்டிருந்தால், நான் தோற்றுப் போயிருப்பேன்…!!!

     நல்ல வேளை காப்பாற்றினீர்கள் ..!!! 🙂 🙂 🙂

     ( நான் நகைச்சுவையாக எழுதுவதை serious -ஆக
     எடுத்துக் கொள்ளாமல், அதே உணர்வுடன்
     Sportive -ஆக எடுத்துக் கொள்வதற்கு நன்றி… )

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ராம்நாத்.

  நீங்கள் ஆட்டத்திற்கு புதிது என்று
  நினைக்கிறேன்.
  நண்பர் புதியவன் இங்கு ஒரு Veteran Player.
  எங்கு வேண்டுமானாலும் புகுந்து
  எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுவார்.

  ஆமாமாம். பாஜக செய்வது சரியில்லை.
  இது மிக மிகத்தவறு. இதை ஏற்றுக்கொள்ளவே
  முடியாது என்று தான் துவங்குவார்.
  இடையில் – காங்கிரஸ் என்ன செய்தது,
  திமுக என்ன செய்தது என்பதையெல்லாம்
  விவரமாக எடுத்துரைத்து,
  அசால்டாக சப்ஜெக்டையே மாற்றுவார்.
  இறுதியில் -முடிக்கும்போது, எது எப்படி இருந்தாலும்
  மோடிஜி தவறு செய்ய வாய்ப்பில்லை
  என்று தான் நான் நினைக்கிறேன் என்று
  சொல்லி முடித்து விடுவார்… 🙂 🙂 🙂

  (இந்த இடுகைக்கான பின்னூட்டங்களில்
  இறுதி கட்டத்திற்கு அவர் இன்னும்
  வரவில்லை என்று நினைக்கிறேன்…
  காத்திருங்கள்…!!! )

  சிறப்பாக வாதம் செய்கிறீர்கள்…
  தொடருங்கள்…நிறைய எழுதுங்கள்.
  வாழ்த்துகள்.

  .
  -காவிரிமைந்தன்

 12. Jaya BALA SANKAR சொல்கிறார்:

  வணக்கம்
  திரு ராகுல் காந்தியை திரு ஜெயமோகன் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை ஏற்கனவே அவர் கம்யூனிஸ்ட் கொள்கையை ஆதரவு சிந்தனை கொண்டவர் திருமா கட்சியின் அறிவிக்க படாத கொள்கை பரப்பு செயலாளர்
  அவர் ராகுல் காந்தியை ஆதரிப்பது ஒன்றும் ஆச்சிரியம் இல்லை
  அதற்கு அவர் சப்பை கட்டும் காரணங்கள் அதிசயம் .
  காங்கிரஸ் இல்லை
  என்றால் இந்தியா அழிந்து விடுமா . காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கொள்கைகள் நாட்டு மக்கள் புரிந்து கொண்டார்கள் அதில் உண்மையில்லை பிரித்து ஆளும் சூழ்ச்சி
  கம்யூனிஸ்ட் அழிந்த மாதிரி காங்கிரஸும் அழியும் எ
  வ்வளவு கொள்ளைகள் எவ்வளவு அத்துமீறல்கள்
  இன்று மோடியை எதிர்ப்பது பேஷன் ஜெயமோகனும் செய்கார் இன்று பாரதிய
  ஜனதா கட்சி தோற்று இருந்தால் மோடி அமித்ஷா இருவரையும் பொய் கேஸ் போட்டு அவர்களை சின்னாபினாக செய்து இருப்பார்கள் பாரதிய ஜனதா கட்சி பிளவு படுத்தி இருப்பார்கள் ஹிந்து மதத்தை அழிக்க மு யர்ச்சி செயுது இருப்பார்கள் ஹிந்துக்கள் மோடிதான் தங்களுக்கு சரியான பாதுகாப்பு என்று
  உணர்ந் தானால் தன மோடிக்கு இந்த வெற்றி ஜெகன் மோகன் ரெட்டி ஹிந்துக்களின் ஆதரவு பெற்றுத்தானால் இன்று முதல் அமைச்சர் ஆனார் இங்கு ஸ்டாலின் நாங்கள் ஹிந்துக்களின் விரோதி இல்லை என்று அறிவிக்க வேண்டியது ஆகியது .வயநாடு இந்திய இறையாண்மை எதிரான கருத்துக்கள் அதிகம் என்று பத்திரிகை செய்தி ஷேர் மார்க்கெட் பற்றி நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களையும் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் எழுத முடியவில்லை பின்பு எழுதுகிறேன்
  நன்றி

 13. maniam24 சொல்கிறார்:

  ராகுல் தலைமை ஏற்க வேண்டும் இதுவரை கட்சியில் ஒத்துழைப்பு வழங்காதவர்களை ஆதரித்த து போதும்.சுயநலவாதிகள் கஷ்ட அரசியல் செய் வர்களை வெளியே ற்றவேண்டும்.அவர்கள் வேறுகட்சிக்கு சென்றாலும் மதிக்கப்படமாட்டார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s