ஒரு சுஜாதா சிறுகதை – முதல் சைக்கிள்…!!!


சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி
ப்ரேமையுடன் வளர்ந்தேன். அப்பா கோயம்புத்தூரில் ஒரு
முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர்
டூர் போய் இருக்கும்போது நாள் முழுவதும் அதன்மேல் ஏறி
வாயாலேயே ஓட்டி பெருமாநல்லூர், அரவங்காடு
எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று
இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்துப்போய் அதனுடன்
என் தம்பியின் நடைவண்டி, ஸ்டூல் போன்றவற்றை
இணைத்து ரயில் பண்ணி ஓட்டினேன்.

அதுவும் அலுத்துப்போய் கொஞ்சம் பெரிய மேஜையை
இணைத்து ஓட்டிப் பார்த்தேன். அதற்கான ஆற்றல்
போதாமல், லோடு தாங்காமல் ஒரே இடத்தில் முன் சக்கரம்
வழுக்கி, வழுக்கி ஒரு நாள் அந்த சைக்கிள் என் இம்சை
தாங்காமல் உடைந்தே போனது.

ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பின் போது ஆளாளுக்கு நாலணா
செலுத்தி இரண்டணா (2 ரூபாய் தானே வரும்?!!) கொடுத்து
வாடகை சைக்கிள் எடுத்து எட்டுப் பேர் கற்றுக்கொண்டதை
எப்போதோ கட்டுரையாக எழுதியிருக்கிறேன் .

கற்றுக் கொண்டதைவிட மற்றவர்களே ஓட்ட
பின் ஸீட்டை பற்றிக்கொண்டு, “நேராப்பார்றா,,, நேராப்பார்றா”
என்று சொல்லிக் கொண்டே நாக்கு வெளியே வர
ஓடியதுதான் அதிகம்.

முதன்முதல் சைக்கிளில் ‘பாலன்ஸ்’ கிடைத்தது
முதல் முத்தத்துக்கு ஈடானது என்பதில் ஆண், பெண்
இருபாலாரிடமும் அபிப்ராய பேதம்….ஸாரி,
கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதற்காக எத்தனை
தயிர்க்காரிகள் மேலும் மோதலாம்…..எத்தனை முழங்கால்
சிராய்ப்புகளையும் எச்சில் வைத்து ஊதலாம்….

எஸ்எஸ்எல்சி படிக்கையில் விஎஸ்வியிடம்
கணக்குப் பாடம் டியூஷன் போக வேண்டியிருந்தது. போவதற்கு
எனக்கு கஷ்டமாக இருந்தது. சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம்
என்று யோசித்தேன். எம் என் வரதன் தன் பழைய சைக்கிளை
விலைக்கு விற்பதாக சொன்னான். “ராலே மாடல்,
இங்கிலாந்து ஷெஃபீல்டுலருந்து எங்க மாமா வரவழைச்சது”

“என்ன விலை?”

“ஓட்டத்தான் முதல்ல”

சைக்கிள் நல்ல கண்டிஷனில் இருந்தது. கதவுக்கு
எண்ணெய் போட்டது போல வெண்ணையாக சென்றது.
பச்சை பெயிண்ட் அடித்து மணி அடித்தால் தேவகானம்
கேட்டது. சித்திரை உத்தர வீதிகளை ஒரு வெள்ளோட்டம்
பார்த்துவிட்டு ஸ்டைலாக இறங்கினேன்.

“ என்ன விலை சொல்லு?”

“ நீ என்பதால் 50 ரூபாய். எனக்கு 80 ரூபாய் வரை
ஆப்பர் இருக்கு என்றான் எம் என் வி. “புதன்கிழமை
வரைக்கும் வெயிட் பண்றேன்”

என்று அந்த பச்சை தேவதையின் சீட்டை தட்டிவிட்டு
அதன்மேல் ஆரோகணித்து அடுத்த கணம் காணாமல் போனான்.

பாட்டியிடம் கேட்டதில்,” உங்க அப்பா என்னை பார்க்க
ஞாயிற்றுக்கிழமை வரான். அப்போ நீயே கேட்டுடு”…

“வாங்கித் தருவாரா பாட்டி?”

“ தராம என்ன? மென்னு முழுங்காம கரெக்டா சொல்லிடு….

டியூஷன் போறது கஷ்டமா இருக்குப்பா…
ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தா நன்னா படிக்கிறேன்.
தவறாமல் போறேன்” படிக்கறதுக்கு தானே கேட்கிற….
ஊர் சுத்த இல்லையே… வாங்கித் தருவான்….

வந்தவுடனே கேட்காதே…. சாப்பிட்டவுடன் எட்டு இடமும்

குளிர்ந்திருக்கும்போது கேளு…’

நான் பலவிதங்களில் அந்தக் கணத்துக்கு ஒத்திகை பார்த்துக்
கொண்டு இருந்தேன். நடுவே ராமன் தான்
பிரில்லியன்ட் ஆக ஒரு ஐடியா சொன்னான். தவறாமல்
டியூஷன் சென்றால் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும்
சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதையும் அப்பாவுக்கு
எடுத்துரைக்க சொன்னான். “ எந்த அப்பாவும் இதுக்கு
மாட்டேன்னு சொல்ல மாட்டா”

அப்பா வந்தார். காப்பி சாப்பிட்டார்.
பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார் . பாட்டி அவ்வப்போது
கண்ணை காட்டினாள்..” இப்போ கேட்காதே” என்று.
ராத்திரி அப்பாவுக்கு வெந்தயக் குழம்பும் கீரையும்
பண்ணி இருந்தாள். அப்பா ருசித்து சாப்பிட்டுவிட்டு,
வெற்றிலையும், அசோகா பாக்கும் வாங்கி வரச் சொன்னார்.
அதைப் போட்டுக்கொண்டு வாசலில், முழு நிலவில்,
கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அதுதான் சரியான தருணம் என்று தீர்மானித்தாள் பாட்டி,
“ரங்கராஜன் என்னவோ கேக்கணும்கிறான்”

“என்னடா?”

“ஒரு சைக்கிள் வேணும்ப்பா….டியூஷன் போறதுக்கு…”

“புதுசா?”

“செகண்ட் ஹாண்ட்ப்பா….”

“என்ன வெலை?”

” அம்பது ரூபாதாம்பா”

“முடியாது. டியூஷனுக்கு நடந்து போ.
இல்லை கீழச்சித்திரை வீதியிலேயே
யார்கிட்டவாவது டியூஷன் வச்சுக்கோ…”

“இல்லைப்பா…வந்து…”

“வந்தும் இல்லை…போயும் இல்லை. உள்ள போய்ப் படி…”

அந்த கணத்தில் என் கனவுலகம் கலைந்து போனது. இந்த
மனுஷனைப் போல ஒரு கிராதகன் இருப்பானா? இவன்லாம்
ஒரு அப்பாவா? என்று மனசுக்குள் கேட்டுக் கொண்டே
உள்ளே போனேன்.

அப்பா ஊருக்குப் புறப்படும் வரை அவருடன்
பேசவே இல்லை. அதை அவர் கவனித்ததாக தெரியவில்லை.

அதன் பின்னர், படித்து பாஸ் பண்ணி, வேலை கிடைத்தது.
அலகாபாத் சென்று ஏரோப்ளேன் கற்றுக் கொண்டு,
பின்னர் டெல்லியில் ஸ்கூட்டர் கற்றுக் கொண்டு,
பெங்களூர் வந்து அங்கு முதல் கார் வாங்கி, கார் மாற்றி,
எழுத்தாளனான அனுபவத்தால் டிராக்டர், ரோட் இன்ஜின்,
லாரி, ரயில் இன்ஜினில் கூட ஒரு முறை….என்று
எத்தனையோ வாகனங்கள்…எத்தனையோ பயணங்கள்…

ஆனால், அந்தப் பச்சை ராலே சைக்கிள் மட்டும்
ஒரு நிறைவேறாத இச்சையாகவே தேங்கியிருந்தது.

அப்பா இறந்து போவதற்கு சில மாதங்களுக்கு முன்பு
தன் பழைய நினைவுகளை ஒரு நண்பனுக்குச்
சொல்வது போல சொல்லிக் கொண்டு வந்தார். அப்போது
அதைக் குறிப்பிட்டார். “நீ எஸ்.எஸ்.எல்.சி. படிக்கறப்ப
ஒரு சைக்கிள் வாங்கிதான்னு கேட்டியே, ஞாபகம்
இருக்கா?”

“இருக்குப்பா”

“வாங்கித் தரலைன்னு கோவிச்சுண்டு புறப்படற வரைக்கும்
என் கூட பேசாம இருந்த…..”

“ஏம்பா வாங்கித் தரலை?”

“அப்ப எங்கிட்ட அம்பது ரூபா இல்லைடா” என்றார் ………….

.
———————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஒரு சுஜாதா சிறுகதை – முதல் சைக்கிள்…!!!

  1. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    கடைசி ௫ வரிகள் படிக்கும்போது கண் கலங்கி விட்டது. இது தான் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள். நன்றி காமை ஐயா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s