பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்வது …? வெற்றிமாறன்…


பாலுமகேந்திராவிடம் நான் உதவி இயக்குநராகச் சேர
ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் லயோலா
கல்லூரியில் சினிமா பற்றி இரண்டு வருடங்களுக்கு
ஒருமுறை ஒரு வொர்க்‌ஷாப் நடத்துவார்.

அங்கு மட்டும் அல்ல… சினிமா வொர்க்‌ஷாப் எங்கு
நடத்தினாலும் ஒரு கதையுடன்தான் தொடங்குவார்.
அது நம் ஊர் உலகத்துக்கே தெரிந்த பாட்டி வடை சுட்ட
கதை. ‘` `ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க’ என்றதும்
கதைக் கேட்கும் அந்தக் குழந்தை உடனடியாக ‘ம்’
சொல்லும்.

அந்த ஒரு வரியை குழந்தை முழுமையாகப் புரிந்து
கொண்டுவிட்டது என்பதற்கான அடையாளம் அந்த ‘ம்’.
இப்படி இலக்கியத்திலும் கதை சொல்லலிலும் வாசகன்
என்பவன் ஒரு சகப் படைப்பாளி. காரணம், ‘ஒரு ஊர்ல
ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க…’ என்ற
கதையைக் கேட்கும் குழந்தை, அந்த இடத்தில் தன்
பாட்டியையும் தன் ஊரையும் ஃபில் இன் தி பிளாங்க்ஸ்
போல் நிரப்பிக்கொள்ளும்.

இப்படி வாசிப்பவன் அவனாக சில விஷயங்களை
உருவாக்கிக்கொள்வான். ஆனால் சினிமா ஊடகத்தில்
அதற்கு அனுமதி இல்லை. ஒரு ஊர்ல ஒரு பாட்டி…

ஓகே. அந்த ஊர் எது… கிராமமா, நகரமா, மாநகரமா?
கிராமம் என்றால்… அது கடற்கரைக் கிராமமா,
மலை அடிவாரமா, சமவெளிப் பகுதியா? வடை
சுட்ட பாட்டிக்கு என்ன வயது? தாத்தா, உயிரோடு
இருக்கிறாரா… இல்லையா? அவர் வசதியான பாட்டியா,
ஏழைப் பாட்டியா?… இப்படிப் பல விஷயங்களை
இயக்குநர் முதலில் தீர்மானிக்க வேண்டும்.”

இப்படி இலக்கியத்தையும் சினிமாவையும் வித்தியாசப்படுத்த
இந்தப் பாட்டி கதையுடன் தொடங்கும் அந்த வொர்க்‌ஷாப்
சுவாரஸ்யமானதாக இருக்கும். அதுதான், ‘சினிமா
கத்துக்கணும்னா, அதை இவர்கிட்டதான் கத்துக்கணும்’
என அவரது அலுவலகம் நோக்கி என்னை அழைத்துச்
சென்றது.

அப்போது `தமிழ் தெரிந்த ஓர் ஆள் தேவை’ என ஃபாதர்
ராஜநாயகத்திடம் பாலுமகேந்திரா சார் சொல்லியிருந்தார்.
அந்த நம்பிக்கையில்தான் அன்று அவர் முன்பு நின்றிருந்தேன்.

`‘ஹலோ மிஸ்டர் பாலுமகேந்திரா. மை நேம் இஸ்
வெற்றி மாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ.’’ ‘
`வெளியில போ… நாளைக்கு வா பார்க்கலாம்.’’

மறுநாள்… “நான் லயோலா ஸ்டூடன்ட். ஃபாதர் ராஜநாயகம்
என்னை அனுப்பினார். உங்க வொர்க்‌ஷாப் அட்டெண்ட்
பண்ணேன். இப்போ உங்ககிட்ட உதவியாளரா சேர ஆசை”
என்றேன். என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.
“ஃபாதர் அனுப்பினாரா?’’ “ஆமா சார். தமிழ் தெரிஞ்சவன்
வேணும்னு நீங்க அவர்கிட்ட சொல்லியிருந்தீங்களாம்!’’
“தமிழ் இலக்கியம் தெரிஞ்சவன்ல சொல்லியிருந்தேன்.’’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. நான் அப்போது எம்.ஏ
ஆங்கில இலக்கிய மாணவன். தமிழில் ஜெயகாந்தன்,
பாலகுமாரனைத் தவிர வேறு எதையும் படித்திராதவன்.
காதல் கடிதங்கள்கூட ஆங்கிலத்தில்தான்.
“சரி… இங்கிலீஷ்ல உனக்குப் பிடிச்சப் புத்தகங்களைச்
சொல்லு.’’ ‘‘

`To Kill a Mockingbird’, ‘Roots’, ‘One Flew Over the
Cuckoo’s nest.’ ’’ மூன்று புத்தகங்களைச் சொன்னபோது
அவரிடம் எந்தச் சலனமும் இல்லை; எந்த மாற்றமும்
இல்லை. நின்றிருந்த என்னைப் பார்த்து “உட்காரு’’
என்றார். ‘புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்து
விடும்?’ என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா
போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான
இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது.

சந்தோஷத்துடன் அவர் முன்பு அமர்ந்தேன். ஹாலிவுட்டின்
`ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ தொடங்கி அவர் இயக்கிய
‘அழியாத கோலங்கள்’ வரை எனக்குப் பிடித்த படங்கள்
பற்றி ஒவ்வொன்றாகச் சொன்னேன். நான் சொன்ன
புத்தகங்களும் படங்களும் அவருடைய விருப்பப்
பட்டியலிலும் இருந்தன என்பதை பின்நாளில் அறிந்தேன்.

அதனால்தான் என்னவோ, ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ
ஒரு ரசனை இருக்கு’ என நினைத்து, என்னை நெருங்க
அனுமதித்திருக்கிறார்.

ஒருவரை, தன் உலகுக்குள் அவர்
அனுமதிப்பது அத்தனை சாதாரணம் அல்ல. தன்
அலுவலகம், உதவி இயக்குநர்கள் என்ற மிகச் சிறிய
வட்டம்தான் அவர் உலகம்.

`எனக்குப் பெருசா உலகத்தைப் பத்தி தெரியாதுப்பா.
நீங்கதான் சொல்லணும்’ – இது அவர் அடிக்கடி சொல்லும்
வார்த்தைகள். `தமிழ் இலக்கியம் தெரிந்தவர்தான்
வேண்டும்’ என அவர் உறுதியாக இருக்க, `‘நான்
வாசிக்கிறேன் சார்…’’ என்றேன். தி.ஜானகிராமன், கல்கி,

நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன், பிரபஞ்சன்… என
பெரிய பட்டியல் தந்து, இவர்களின் நூல்களை வாசிக்கச்
சொன்னார்.

உரையாடல் ஒரு மணி நேரம் தாண்டியிருக்கும்.
`‘ஒரு வாரம் கழிச்சு, போன் பண்ணிட்டு வா’’ என்றார்.
அன்றே கல்லூரி நூலகம் சென்று ‘அம்மா வந்தாள்’,
‘இருவர்’, ‘மரப்பசு’ என பல நாவல்களை மாரத்தான்போல
வாசித்தேன். அப்போது, என் அப்பா உடல்நிலை
சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அவர்
ஒரு வெட்னரி சயின்டிஸ்ட்; படங்கள் பார்க்கும் பழக்கம்
இல்லாதவர். படிப்பில் நான் வீக் என்பதில், அவருக்கு
எப்போதும் வருத்தம். `சினிமா பார்க்கப்போறேன்’ என
மகன் சொன்னாலே, தந்தைகள் வருந்தும் காலம் அது.
நான், `சினிமா வேலைக்குப் போறேன்’ என்றதும்
யோசித்தார். “யார்கிட்ட சேரப்போறே?’’ என்றவருக்கு,
பாலுமகேந்திரா தெரிந்திருக்கவில்லை. `‘யாரு அவன்?’’
என்றார்.

மகன்களுக்குத் தக்க சமயத்தில் உதவத்தானே அம்மாக்கள்
இருக்கிறார்கள். “ `மூன்றாம் பிறை’ எடுத்தவர்’’ என
அவருக்குத் தெரிந்த, பிடித்த படத்தைச் சொல்லி அறிமுகம்
செய்துவைத்தார் அம்மா. `‘ஓ… அவனா… அவன் நல்ல
டைரக்டர்தான்’’ -உடனே ஓ.கே சொன்ன அப்பா, அப்போது
சொன்ன வார்த்தைகள் எனக்கு இப்போதும்
நினைவிருக்கிறது… `‘தம்பி… சினிமாங்கிறது ஒரு சயின்ஸ்.
அதை சயின்ட்டிஃபிக்கா அப்ரோச் பண்ணு. அதை
அகடமிக்கா படி. அந்தத் தொழில்நுட்பத்தைக் கத்துக்
கொடுக்கும் காலேஜ்ல சேரு’’ என்றார். எனக்கும் அது சரி
எனப் பட்டது.

என் நண்பன் சக்தியிடம் விஷயத்தைச் சொன்னேன்.

‘நான் முதல்ல ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்றேன்,
எப்படி இருக்குனு பார்த்துட்டு வந்து சொல்றேன். அப்புறம்
நீ வந்து சேர்ந்துக்கோ’ என்றான்.

பள்ளி நாட்கள் முதலே அவன் என் `தியேட்டர் மேட்’.
அவனுக்கு அப்ளிகேஷன் வாங்க நாங்கள் இருவரும்
அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் சென்றோம்.
ஏற்கெனவே எங்கள் குறும்படத்தைப் பார்த்துப்
பாராட்டிய மதன் கேப்ரியல் சார், அங்கு இருந்தார்.

விஷயத்தைச் சொன்னதுமே விசாரணையைத்
தொடங்கிவிட்டார். `‘வீட்டுல நல்ல வசதியாப்பா?’’ ‘
`ஓரளவுக்கு சார்.’’ `‘உன் வருமானத்தை நம்பி அவங்க
இல்லைல?’’ ‘`இல்ல சார்…’’ ‘`அடுத்த அஞ்சாறு
வருஷத்துக்கு உனக்கு சாப்பாடு போடுவாங்களா?’’
`‘போடுவாங்க சார்.’’ அவர் கேள்விகள் எங்களைப்
பயம்கொள்ளவைத்தன. பிறகு, அவரே அந்தக்
கேள்விகளுக்கான காரணத்தையும் விளக்கினார்.

`‘இங்க மூணு வருஷம் படிக்கணும். அப்புறம் சில
வருஷங்கள் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைசெய்யணும்.
அதுவரை உன் குடும்பம் உனக்குத் துணையா இருக்கணும்.
அப்படி இல்லைன்னா… கொஞ்சம் யோசிங்க.’’
‘`மச்சான்… இங்க மூணு வருஷம் படிச்சாலும் திரும்ப
வேற ஒரு இயக்குநர்கிட்ட போய் அசிஸ்டென்ட்டா
வேலைசெய்யணும். இதுக்குப் பதிலா ஒருத்தர்கிட்ட
இப்பவே வேலைக்குச் சேர்ந்து, மொத்தமா அவர்கிட்டயே
கத்துக்கலாமே’’ என்றான் சக்தி.

எனக்கும் `அதுதான் சரியாக இருக்கும்’ எனத் தோன்றியது.
ஒரு வாரம் கடந்திருந்தது. பாலுமகேந்திராவுக்கு போன்
செய்தேன். `‘வெற்றியா… எந்த வெற்றி?’’ என்றார். எனக்கு
பகீரென இருந்தது.

`ஃபாதர் ராஜநாயகம் சொல்லி நான் வந்து பார்த்து…”
என நான் நினைவுபடுத்த, ‘`ஓ… அந்தப் பையனா,
நாளைக்கு வா” என்றார். மறுநாள் ஓடிப்போய் நின்றேன்.
வாசித்த நாவல்களைச் சொன்னதும் அவருக்குச் சந்தேகம்.

ஒவ்வொரு நாவலின் கதையையும் நடுநடுவே கேட்டார்.

`‘சினாப்ஸிஸ் எழுதத் தெரியுமா?’’ என்றார். இலக்கியம்
படிக்கும் மாணவனுக்கு வேலையே அதுதானே…
தலையை ஆட்டினேன். பட்டுக்கோட்டை பிரபாகரின்
சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து `பாதுகாப்பு’ என்ற
ஒரு சிறுகதைக்கு சினாப்ஸிஸ் எழுதச் சொன்னார்.

அரை மணி நேரத்தில் அரைப் பக்கம் எழுதி நீட்டினேன்.
அதை வாங்கி தனக்குப் பின்னால் போட்டவர்,
686 பக்கங்கள் கொண்ட ‘மோகமுள்’ நாவலைக்
கொடுத்தார். ‘`இதுக்கு சேப்டர்வாரியா சினாப்ஸிஸ் எழுது.

வெள்ளிக்கிழமை போன் பண்ணிட்டு எடுத்துட்டு வா
பார்க்கலாம்’’ என்றார். இரண்டு நாட்களில் 686 பக்கங்கள்.
அதற்கு சினாப்ஸிஸ். கண்கள் பிதுங்கி வெளியே
வந்துவிடும். விடாமல் வாசித்து எழுதினேன். இந்த
முறை சேர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன்
சென்றேன்.

தன் இடது கையில் சினாப்சிஸையும் வலது கையில்
நாவலையும் வாங்கியவர், அவற்றை அப்படியே தனக்குப்
பின்னால் தூக்கிப்போட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்துக்
கொடுத்தார். அவர் தூக்கி எறிந்த பகுதியில் சினாப்ஸிஸ்
மலையே இருந்தது. எல்லோருக்கும் இதுதான் டெஸ்ட்
என்பது அப்போதுதான் தெரிந்தது. அப்போது சாருடன்
ஒருவர் இருந்தார்.

அவ்வளவு நெருக்கத்தில், எல்லா உதவிகளையும்
செய்துகொண்டிருந்ததால், அவர்தான் அப்போதைய
அசிஸ்டென்ட் எனத் தெரிந்தது. அவர் வெளியே வருவார்
எனக் காத்திருந்தேன். வெளியே வந்தார். அவருடன்
டீ குடிக்கச் சென்றேன். தன்னை முத்துக்குமார் என
அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆமாம், அவர்தான்
இன்றைய பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

சினாப்ஸிஸ் எழுதுவது தொடர்ந்தது. வாரம், ஒரு நாள்
போவேன். ஒரு புத்தகம் தருவார், சினாப்ஸிஸ்
எழுதுவேன். இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு நாள்
காலை 11 மணிக்கு அழைத்தேன். `‘குட்மார்னிங்’’ என்றதும்,

`‘என்னய்யா 11 மணிக்கு குட்மார்னிங். தினமும் போன்
பண்ணி கேட்டுட்டுத்தான் வரணுமா? 9 மணியானா
ஆபீஸுக்கு வரணும்னு அறிவு வேணாமா?’’ என்றார்.

நான் அவரிடம் ஏற்கெனவே உதவியாளனாகச் சேர்த்துக்
கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதே எனக்கு அப்போதுதான்
உறைத்தது!

( நன்றி – இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய –
மைல்ஸ் டு கோ…. விகடன்…)

.
————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s